Friday, February 11, 2011

நட்புக் கரை... காதல் அலை... கால் நனைக்கலாமா?

நட்புக் கரை... காதல் அலை... கால் நனைக்கலாமா?

செந்தில், ப்ரீத்தி, நாகப்பன்
படம் : விஜய்மணி

காதல்! கண்களுக்கு அகப்படாத அணு வாகவும், கண்களுக்குள் அடங்காத ஆகாய மாகவும் இருப்பது. காதலில் காமம்... சரி. ஆனால், நட்பில் காதல்..? வரையறைகள், வித்தியாசங்கள், விகிதாசாரங்கள் தாண்டி விவாதிக்கிறார்கள் நட்பில் காதலைக் கண்டோர்.

இரும்பிலே ஒரு இருதயம் செய்தாலும், அதில் காதலை ஊற்றெடுக்கச் செய்யும் காதல் மொழி படைக்கும் பாடலாசிரியை தாமரை, தன் நட்பு, காதல் பரிணாமம் அடைந்த கதை சொல்கிறார். ''நண்பர்கள் காதலர்களாக மாறுவது வரவேற்கத்தக்கது. ஏனென்றால், பார்த்தவுடன் காதல், ஏற்பாட்டுத் திருமணம் இரண்டுமே அபாயகரமானது. யார் என்றே தெரியாத ஒருவரைப் புரிந்துகொள்ளாமல் வாழ்வைக் கசப்பாக்கிக்கொள்வதைவிட, நம் கூடவே இருந்து, நம்மை நன்கு புரிந்து கொண்டவர்களை வாழ்க்கைத் துணையாக ஆக்கிக்கொள்வது நம் வாழ்வைத் திருப்திகரமானதாக ஆக்கும். பெற்றோர்களால் நாள் நட்சத்திரம் பார்த்துச் செய்துவைக்கப்பட்டது என் முதல் மணவாழ்க்கை. ஆனால், இருவருக்கும் தனித்தனியே அவர்களின் வாழ்க்கையில் ஏமாற்றமே மிஞ்சியது. மனமுடைந்து போயிருந்த நேரத்தில், எனக்கும் தியாகுவுக்கும் இடையே நட்'பூ’ பூத்தது. இருவரின் அலை வரிசையும் ஒன்றாக இருக்கவே, வாழ்க்கை யிலும் நாம் ஏன் ஒன்றாக இணையக் கூடாது என்று முடிவெடுத்து, திருமண பந்தத்தில் இணைந்தோம். அதனால், நண்பர்கள் காதலர் களாவதை நான் மனப்பூர்வமாக ஆதரிக் கிறேன்!'' என்கிறார் தாமரை.

''ஃப்ரெண்ட்ஷிப் எப்போ காதலா மாறும்னு எனக்கு சொல்லத் தெரியலை. ஆனா, என் மனைவி ப்ரியா அழகா சொல்வாங்க. காரணம், நான் ப்ரியாவைப் பார்த்த நொடியிலேயே காதலிக்க ஆரம்பிச்சுட்டேன்!'' என்று காதல் கலந்து பேசுகிறார் விமல்.

''திண்டுக்கல் கோயில் திருவிழாக்கள்ல ஆடியாடி நகர்ற சப்பர விளக்கு வெளிச்சத்துலயும், சவ்வு மிட்டாய் விக்கிறவரோட அரிக்கேன் லைட் வெளிச்சத்துலயும் திகட்டத் திகட்ட அவளை நான் காதலிச்சது எல்லாம் என் வாழ்க்கையின் திருவிழாக் காலங்கள். ஆனா, அவங்க என்னைப் பல வருஷமா ஃப்ரெண்ட் லிஸ்ட்லயே வெச்சிருந்து, ரொம்ப யோசனைக்குப் பிறகுதான் லவ்வர் போஸ்டிங் கொடுத்தாங்க.

'எப்போ என் காதலை ஏத்துக்கிட்டே?’னு கேட்டா, 'ஊர் திருவிழாக்கள்ல சந்திச்சப்ப எல்லாம் நல்ல ஃப்ரெண்டை பார்க்கிற சந்தோஷம் தான் வரும். பிரியுறப்ப அழுகை வரும்.ஆனா, அந்தக் கண்ணீர்ல அழுத்தம் இருக்காது. ஏன்னா, அடுத்த திருவிழாவுல நிச்சயம் பார்ப் போம், விளையாடுவோம்னு தெரியும். ஒரு கட்டத்துக்குப் பிறகு, நீங்க காதலை வெளிப் படையா சொல்லிட்டீங்க. நான் எந்தப் பதிலும் சொல்லலை. அதன் பிறகு, நாம ஒவ்வொரு தடவை சந்திக்கிறப்பவும் உங்க கண்ணுல காதல் அதிகமா தென்படும். ஒவ்வொரு தடவை உங்களைச் சந்தித்துத் திரும்பும்போது எல்லாம் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன். 'அடுத்து எப்போ உங்களைப் பார்க்கப்போறேன்’ங் கிற யோசனையே மனசுக்குள் ஓடிட்டே இருக் கும். அந்தத் தருணங்களில்தான் எனக்குள்ளும் ஒளிஞ்சிருந்த காதலை நான் உணர்ந்தேன். அது அன்பின் தேடல்’னு விஞ்ஞான விளக்கம் வரும் ப்ரியாகிட்ட இருந்து.

எங்க நட்பின் ஆரம்ப நிலையிலேயே எனக்கு ப்ரியா மேல காதல் இருந்திருக்கணும். அல்லது, காதல் வந்ததாலேயே வலியப் போயி நான் நட்புப் பாலம் அமைச்சிருக்கணும். எது எப்படியோ மனைவி, தோழி, அம்மா, மகள்னு அத்தனை உறவுகளாகவும் எனக்கு ப்ரியா இருக்காங்க!'' என்று நெகிழ்கிறார் விமல்.

''நண்பர்கள் எப்போது காதலர்களாக மாறுகிறார்கள்? அவர்கள் உங்கள் மீது தனித்துவ அன்பு செலுத்தும்போது... உங்களுக்கு ஒரு ஆபத்து என்றால் ஓடி வரும்போது... அந்த கெமிஸ்ட்ரி மெல்லிய இசையைப் போல உயிர் ஊடுருவக் கூடியது!'' என்று காதல் கஜல்இசைக் கிறார் ஜி.வி.பிரகாஷ். குழந்தைப் பருவத் தோழி சைந்தவி இப்போது ஜி.வி.பிரகாஷின் காதலி.

''நண்பர்களாக இருந்து, காதலித்துத் திருமணம் முடிப்பவர்களுக்கு இருக்கும் ப்ளஸ், உங்கள் பார்ட்னரை நீங்கள் ஏமாற்றவே முடியாது. உங்களைப்பற்றி அவருக்கும், அவர் பற்றி உங்களுக்கும் ஆழமான புரிதல் இருக் கும். ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து, சமமான மதிப்பளித்து வாழும் வாழ்க்கையில், ஒவ்வொரு நாளும் உங்களுக்குள் இருக்கும் அன்பை ஊற்றெடுக்கச் செய்துகொண்டே இருக்கும். ஒரு ஃப்ரெண்ட்கிட்ட எப்படி நம்ம மனசுவிட்டு நம்ம பலம், பலவீனங்களைப் பகிர்ந்துகொள்வோமோ, அந்த அரவணைப்பும் ஆறுதலும் காதல் மனைவிகிட்ட இன்னும் அதிகமாகவே இருக்கும். என் முதல் விசிறியும், என் முதல் விமர்சகரும் சைந்தவிதான். தோழி, காதலி என்று எனக்கு எல்லாமுமாக இருக்கும் சைந்தவிக்கு, மேலும் மேலும் தீராத காதலைப் பரிசளித்துக்கொண்டே இருப்பதுதான் இனி என் வாழ்நாள் தவம்!'' என்று 'இசை’கிறார் ஜி.வி.

''கணேஷ்கருக்கும் எனக்கும் 20 ஆண்டு நட்பு. நாங்க கல்யாணம் கட்டிக்கிட்ட பிறகும், அந்த நட்பு தொடர்கிறது!'' என்று சிரித்துவிட்டுத் தொடர்கிறார் ஆர்த்தி. ''எனக்கு அப்போது மூணு வயசு இருக்கும். 'என் தங்கை கல்யாணி’ படத்தில் நான்தான் சின்ன வயசு கல்யாணி. கணேஷ் சின்ன வயசு டி.ஆர். அந்தப் படத்தைக் கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஷூட் பண்ணாங்க. அதனால நானும் கணேஷ§ம் அப்பவே ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸ் ஆயிட்டோம்.

பிறகு, கல்லூரியில் படிக்கும் சமயம் 'சூப்பர் 10’ நிகழ்ச்சியிலும் நாங்க சேர்ந்து நடிச்சோம். அந்த நிகழ்ச்சி ஏழு ஆண்டுகள் எங்களை ஒண்ணாவே வெச்சிருந்தது. தொடர்ந்து 'மானாட மயிலாட’ என கலைஞர் டி.வி நிகழ்ச்சிகள். ரொம்ப நெருக்கமான நண்பர்களாகத்தான் இருந்தோம். ஆனா, நாங்க ரெண்டு பேரும் காதலிக்கிறோம்னு வரும் செய்திகளைப் பார்த்து ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. பிறகு பழகிருச்சு. ஷூட்டிங் யூனிட்டில் 'ஆர்த்தி கணேஷ்’னு ரெண்டு பேரையும் ஒண்ணாவே அழைப்பாங்க. என்னை எங்கேயாவது வெளியில் பார்க்கும் ரசிகர்கள், 'கணேஷ்கர் நல்லா இருக்காரா’ன்னு கேட்பாங்க. எங்கம்மாவுக்கு உடம்பு சரியில்லாதப்போ கணேஷ் செய்த உதவிகளைக் காலத்துக்கும் மறக்க முடியாது. அப்போ எங்க அம்மாவே, 'மகன் மாதிரி பார்த்துக்கிட்டாரு. இவரே எனக்கு மருமகனா வந்தா எப்படி இருக்கும்’னு யோசிச்சாங்க. அப்பதான் எங்க நட்பு அடுத்த கட்டத்துக்கு முன்னேற வேண்டிய தேவை எங்களுக்கும் புரிந்தது. காதலுக்கு மரியாதை செய்தோம்!'' என்று நட்புறவு இல்லறப் படகில் ஏறிய கதையை நினைவு கூர்கிறார் ஆர்த்தி.

'காதலிக்கப்படுபவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ஆவர்’ என்பார்கள். பிறரை ஆசீர்வதித்து ஆசீர்வாதமும் பெற வாழ்த்துக்கள்!

நட்பு VS காதல்

ண் தோழன், பெண் தோழி என்ற வித்தியாசங்கள் கடந்து, நட்பு என்ற வட்டத்தின் எல்லை கடக்கத் தூண்டும் பதின்பருவத் தீண்டல்கள். விரும்பியவர்களிடத்தில் மனம் சில விதிகளை மீற விரும்பும். எதிர்பாலின நட்பில் மட்டும் மனம் ஆயிரம் ஜாலம் காட்டும். நட்புக்கும் காதலுக்கும் எது எல்லைக் கோடு? எதைக் கடந்தால் காதல்? உறக்கம் தொலைக்கவைக்கும் உணர்வை, உறவை, உளவியலைப்பற்றிச் சொல்கிறார், உளவியல் நிபுணர் செந்தில்வேலன்.

'' 'இவையிவைதான் நட்பின் கட்டுப்பாடு கள் அல்லது எல்லைக் கோடுகள்’ என்று ஆண்-பெண் உறவைத் தெளிவாக வரை யறுக்க முடியாது. பலருக்கு நட்பும் காதலும் பாலும் நீரும் போலக் கலந்திருப்பதால் குழப்பத்திலேயே திளைப்பார்கள். ஓரளவுக்கு நெருங்கிப் பழகிய பிறகு தெரியாத நபரைவிட, தெரிந்த நபரே நல்லது என்று பெண்கள் உணர்கிறார்கள். நண்பர்களிடையே காதல் பூப்பதற்கு அடிப்படை நான்கு காரணங்கள். முதல் காரணம், நெருக்கம். மிக அருகருகே இருப் பதால், அடிக்கடி பார்ப்பதால், பேசுவதால் காதல் ஏற்படும். இரண்டாவது காரணம்... நிறம், நடை, உடை, பாவனை, பிடித்த விஷயங்கள், கோட்பாடு, கொள்கை, சினிமா, வேலை என இருவருக்குமே ஒரே மாதிரியான கருத்து ஒத்திசைவால் ஏற்படும் காதல். பரஸ்பர உதவி, அக்கறை காரணமாக ஏற்படுவது மூன்றாவது காரணம். உதாரணத் துக்கு, பிறந்த நாள் வாழ்த்து சொல்வது, பரிசுப் பொருள் வழங்குவது, உடல்நலம் இல்லாத சமயம் கவனித்துக்கொள்வது போன்றவற்றால் காதல் அரும்பலாம். நான்காவதாக, இரு பாலினத்தவரும் எதிர் பாலினத்தவர் மீது வைத்திருக்கும் உடல் ரீதியான கவர்ச்சி, அழகுணர்ச்சி ஆகிய காரணங்கள்.

பொதுவாக ஆண்கள், அழகான பெண்களைத்தான் காதலிப்பார்கள். நேர் எதிராகப் பெண்களோ, தன்மேல் அன்பாக, அக்கறையாக, மனம் குதூகலிக்கப் பேசுபவனாக, தனக்குப் பாதுகாப்பாக இவன் இருப்பான் என்று எந்த ஆணை நினைக்கிறார்களோ அவர்களைத்தான் காதலிப்பார்கள். பெண்ணின் அழகைப் பார்த்து ஆணுக்குக் காதல் அரும்ப, ஆணின் அரவணைக்கும் குணமே பெண்ணுக்குக் காதலைத் தூண்டும் சக்தியாக இருக்கிறது.

ஆண் இன்னொரு ஆணுடன் பழகும்போது நட்புக்காகப் பணம், வேலை ஏன் உயிரையே கொடுக்கலாம். பெண் அதிகபட்சமாகத் தன்னையே கொடுக்க முடிவெடுப்பாள். வசதியான பெண், நன்றாகப் படிக்கும் ஏழைப் பையனுக்கு உதவ வேண்டும் என்று பரிதாபத்தில் பழகினால்கூட, 'உன் மேல இவ்ளோ அன்பு வெச்சிருக்காளே. மச்சான், இது சத்தியமா காதல்தான்டா’ என்று அவனது நண்பர்களின் தூண்டுதலை அவனே நம்பத் தொடங்குவான். இது பெண்ணுக்குத் தெரிந்தால் அவளுக்குப் பேரதிர்ச்சிதான்மிஞ்சும்.

ஆண் காதல் சொல்லி பெண் ஏற்கவில்லை எனில், 'ஸாரி... இனிமே ஃப்ரெண்ட்ஸாவே பழகலாம்’ என்று சொல்லி மறுத்தாலும், அது அவன் அடிமனதில் வண்டல் மண் போலத் தேங்கி இருக்கும். அடுத்தடுத்து தொடர்ச்சியாகத் தன் காதலை சமயம் கிடைக்கும்போது எல்லாம் வெளிப்படுத்திக்கொண்டே இருப்பான். இறுதி வரை பையனின் எண்ணம் மாறாது.

ஆண் - பெண் நட்பு கம்பி மேல் நடப்பதற்குச் சமம். அந்த நட்பில் அதிகம் பேசப் பேச நெருக்கம் அதிகமாகும். நட்பு, காதலாகும் என்ற உண்மையை, அதில் இருக்கும் நல்லது கெட்டது களை உணர்ந்து, இறுதி வரை நட்பாகவே இருக் கலாம். அல்லது அந்த நட்பு காதலாக உருமாறும் சமயம் அது உங்களுக்கு உண்மையாக, நம்பிக்கை யான வாழ்நாள் துணையாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால், மேற்கொண்டு தொடரலாம்!'' என்று முடிக்கிறார் செந்தில்வேலன்.

ஆதலினால், நட்பின் கணவாய் வழியே காதல் தேசம் புகுதல் சரி/தவறு. உங்கள் தேர்வு எது என்பது உங்கள் கையில்!