Monday, November 22, 2010

தேனாக இனிக்கும் ஜீரோ பட்ஜெட் கற்பூரவல்லி

மகசூல்
காசி.வேம்பையன்
தேனாக இனிக்கும் ஜீரோ பட்ஜெட் கற்பூரவல்லி!

பளிச்... பளிச்...

ஏக்கருக்கு 1,000 மரங்கள்.
களைகளே கிடையாது.
`70,000 லாபம்.

முட்டுவளிச் செலவில் முடங்கிப் போய்க் கிடந்த பல விவசாயிகளை லாபப் பாதைக்கு மீண்டும் அழைத்துச் சென்று கொண்டிருப்பது 'ஜீரோ பட்ஜெட்' விவசாய முறைதான் என்பது சந்தேகமே இல்லாத உண்மை. இதை, உணர்ந்த தமிழக விவசாயிகள் பலரும் 'ஜீரோ பட்ஜெட்' முறையில் வெற்றிகரமாக பலவிதமானப் பயிர்களை சாகுபடி செய்து நிரூபித்து வருகின்றனர். அவர்களில் ஒருவர்தான், திருச்சி மாவட்டம் லாலாபேட்டையைச் சேர்ந்த கோவிந்தன்.

திருச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழைதான் பிரதானப் பயிர். காவிரி ஆறு, அதன் கிளை வாய்க்கால்கள் பாயும் பகுதியிலெல்லாம் நெல்லும், வாழையும்தான் இருக்கும். அதனால்தான் அந்தப் பகுதியை வாழை ஏற்றுமதி மண்டலமாக அறிவித்திருக்கிறது மத்திய அரசு.

இதமானக் காற்று வீசிக் கொண்டிருந்த ஒரு காலைப் பொழுதில், தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த கோவிந்தனை சந்தித்தோம்.

திருப்பம் தந்த ஈரோடுப் பயிற்சி!

''நான் பத்தாவது முடிச்ச உடனேயே விவசாயத்துக்கு வந்துட்டேன். அப்போ சொந்தமா ஒரு ஏக்கர்தான் இருந்துச்சு. அதுபோக, குத்தகைக்கு அஞ்சு ஏக்கர் எடுத்து, அதுலதான் பதினஞ்சு வருஷமா விவசாயம் பண்ணிட்டுருக்கேன். எல்லாமே ஆத்துப் பாசனம்தான். மண்ணும் கரிசல் மண். அதனால தொடர்ந்து வாழை, நெல் ரெண்டையும்தான் மாத்தி மாத்தி சாகுபடி பண்றேன்.

உரத்துக்கும் பூச்சிக்கொல்லிக்குமே ஏகப்பட்ட செலவு பண்ணி ஓய்ஞ்சு போனவங்கள்ல நானும் ஒருத்தன். Ôஇதுக்கெல்லாம் ஏதாவது மாற்றம் வராதா?Õனு தேடிக்கிட்டு இருந்தப்பதான், பசுமை விகடன் ஈரோட்டுல நடத்தின ஜீரோ பட்ஜெட் பயிற்சியில கலந்துக்குறதுக்கான வாய்ப்பு கிடைச்சுது. பயிற்சியில் பாலேக்கர் சொன்ன கருத்துக்கள் நல்லா மனசுல பதிஞ்சுடுச்சு. அப்பவே நமக்கு இந்த முறைதான் ஏத்ததுனு முடிவு பண்ணிட்டேன்.

செலவு குறைந்தது மகசூல் கூடியது

பயிற்சி முடிஞ்சு வந்ததுமே ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம்... எல்லாத்தையும் தயார் பண்ண ஆரம்பிச்சுட்டேன். ஒரு ஏக்கர்ல நவதானியத்தை விதைச்சு அதோட கற்பூரவல்லி வாழையை நடவு செஞ்சேன். தொடர்ந்து, ஜீவாமிர்தம் விட விட மண்ணுல ஏகப்பட்ட மண்புழுக்கள் பெருகிடுச்சு.

ஜீரோ பட்ஜெட்டுக்கு மாறுனதுக்கப்பறம் செலவு குறைஞ்சதோட விளைஞ்ச பழங்கள் நல்லா தரமாவும், அதிக சுவையாவும் இருந்தது. அதனால நல்ல விலை கிடைக்குது. முதல் போகத்துக்காக 20,000 ரூபாய்தான் செலவு பண்ணுனேன். 90,000 ரூபாய்க்கு காய் வெட்டினதுல 70,000 ரூபாய் லாபம். இந்தளவுக்கு லாபம் கிடைக்கும்னு நான் எதிர்பாக்கவேயில்லை.

இதுவே ரசாயன விவசாயமா இருந்தா, முதல் போகத்துக்கு 70,000 ரூபாய் வரை செலவு பண்ண வேண்டியிருக்கும். அந்த விலைக்கே போயிருந்தாக்கூட 20,000 ரூபாய்தான் லாபம் கிடைச்சுருக்கும். ரெண்டாம் போகத்துக்கு ஜீரோ பட்ஜெட் முறையில 7,000 ரூபாய்தான் செலவாச்சு. ஆனா, ரசாயனம்னா 30,000 ரூபாய் வரை செலவாகியிருக்கும்.

ரெண்டாம் போகத்துல காய் வெட்டுனப்போ இந்த ரகத்துக்குக் கொஞ்சம் விலை இறங்கி இருந்ததால 63,000 ரூபாய்தான் லாபம் கிடைச்சது. இப்போ மூணாம் போகம் அறுவடைக்குத் தயாரா இருக்கு. இதுல எப்படியும் 80,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்னு எதிர்பார்க்குறேன்.

நான் குத்தகைக்கு எடுத்துருக்குற நிலத்துல ஆரம்பத்துல இருந்தே ரசாயன விவசாயம்தான். அடுத்தவங்க நிலங்கிறதால அதுல சோதனையெல்லாம் பண்ணாம ரசாயன உரத்தை குறைச்சலாப் பயன்படுத்திக்கிட்டு இருக்கேன்.

அது எனக்கு தோதுப்படாதுங்கிறதால, பக்கத்துலயே சொந்தமா அஞ்சு ஏக்கர் நிலம் வாங்கியிருக்கேன். அதுல ஆரம்பத்துல இருந்தே ஜீரோ பட்ஜெட் பண்ணலாம்னு நிலத்தைத் தயார்படுத்திக் கிட்டிருக்கேன்'' அனுபவப் பாடத்தை முடித்த கோவிந்தன், ஒரு ஏக்கருக்கான சாகுபடிப் பாடத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.

ஆறடி இடைவெளி!

''நல்ல வடிகால் வசதியோடு கூடிய அனைத்து மண் வகைகளும் கற்பூரவல்லி ரக வாழைக்கு ஏற்றது. இதற்கு கார்த்திகைப் பட்டம்தான் சிறந்தது. நிலம் தேர்வு செய்தவுடன், நிலத்தில் தண்ணீர் நிறுத்தி, குறுக்கு நெடுக்காக களை நீங்குமாறு நன்கு உழவு செய்து, சேறாக மாற்ற வேண்டும்.

ஏக்கருக்கு 25 கிலோ அளவுக்கு நவதானிய விதைகளைத் தூவி விதைக்க வேண்டும் (பார்க்க, பெட்டிச் செய்தி). பக்கத்துக்குப் பக்கம் ஆறடி, வரிசைக்கு வரிசை ஆறடி இடைவெளி இருக்குமாறு வாழைக்கட்டைகளை கிழங்குப் பகுதி மட்டும் சேற்றினுள் இருக்குமாறு நடவு செய்ய வேண்டும்.

இந்த இடைவெளியில் ஏக்கருக்கு 1,200 வாழைக்கட்டைகளை நடவு செய்யலாம் (இவர் 1,000 வாழைக்கட்டைகளை நடவு செய்திருக்கிறார்) விதைக்கிழங்கானது... மூன்றுமாத வயதும், ஒன்றரைக் கிலோ எடையும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

மூடாக்குக்காக நவதானிய விதைப்பு!

45-ம் நாளில் வாழைக்கட்டைகளில் இருந்து குருத்து முளைத்து விடும். 60-ம் நாளில் ஒவ்வொரு கட்டையிலிருந்தும் மூன்றடி இடைவெளி விட்டு ஒரு கன அடி அளவில் உரம் வைப்பதற்காக சிறு பள்ளம் தோண்ட வேண்டும்.

65-ம் நாளுக்கு பிறகு நவதானியங்கள் நன்கு முளைத்து வந்து பூ எடுக்கும். அப்போது நவதானியச் செடிகளைப் பறித்து, வாழைக்கு அருகில் உரத்துக்காக எடுத்திருக்கும் பள்ளங்களில் போட்டு நிரப்ப வேண்டும். மீதம் இருக்கும் செடிகளை நிலம் முழுவதும் பரவலாக மூடாக்காகப் போட வேண்டும்.

நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்து 15 நாட்களுக்கு ஒரு பாசனம் செய்தாலே போதுமானது. 70-ம் நாளுக்கு மேல் ஒவ்வொரு முறை பாசனம் செய்யும் போதும், ஏக்கருக்கு 200 லிட்டர் என்ற அளவில் ஜீவாமிர்தத்தைப் பாசன நீருடன் கலந்து விட வேண்டும்.

பூச்சிக்கு, வேப்பிலை பயிருக்கு, தேங்காய்

90-ம் நாளில் 10 லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி தேங்காய் தண்ணீர் என்ற அளவில் கலந்து வாழை மீது மேல்தெளிப்பாகத் தெளிக்க வேண்டும். 10 லிட்டர் டேங்க் என்றால், ஏக்கருக்கு 20 டேங்குகள் பிடிக்கும். அதிலிருந்து அறுவடை வரை தொடர்ந்து 40 நாட்களுக்கு ஒரு முறை இதேபோல தெளித்து வர வேண்டும். இது சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கியாக செயல்படுகிறது. 120-ம் நாளில் ஒவ்வொரு மரத்துக்கும் 100 கிராம் அளவுக்கு கனஜீவாமிர்தத்தை உரத்துக்கான பள்ளத்தில் வைக்க வேண்டும்.

பெரும்பாலும் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தில் பூச்சிகள் வருவதில்லை. அப்படி ஏதேனும் பூச்சிகள் தாக்கினால், 10 கிலோ வேப்பிலை, 10 லிட்டர் மாட்டுச்சிறுநீர், 10 லிட்டர் தண்ணீர் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, 15 நாட்கள் ஊற வைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். இக்கரைசலை டேங்குக்கு (10 லிட்டர்) 200 மில்லி வீதம் கலந்து தெளித்தால், பூச்சிகள் ஓடி விடும்.

களைகளே வராது!

மூடாக்கு போடுவதால் களைகள் வராது. சேற்று நடவு செய்வதால், மரத்துக்கு மண் அணைக்க வேண்டிய அவசியமும் இருக்காது. நட்ட எட்டு மாதத்தில் குலை தள்ள ஆரம்பிக்கும். அதன் பிறகு, குலைக்கு நேர் எதிர் திசையில் இருக்கும் கன்றுகளில் வாளிப்பானக் கன்றை மட்டும் பக்கக்கன்றாக விட்டுவிட்டு, மற்றவைகளைத் தோண்டி எடுத்து நிலம் முழுவதும் மூடாக்காகப் போட்டுவிட வேண்டும்.

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை... தேவையில்லாத பக்கக்கன்றுகளையும் காய்ந்த சருகுகளையும் கழித்து அவைகளையும் மூடாக்காகப் போட வேண்டும்.

தாருக்கு 15 சீப்பு... சீப்புக்கு 20 காய்!

குலை தள்ளிய மூன்று மாதத்தில் அதாவது 11-ம் மாதத்துக்குப் பிறகு தார் அறுவடைக்கு வந்துவிடும். அதிகபட்சம் ஒரு வருடத்துக்குள் அறுவடை செய்து விடலாம். ஒரு ஏக்கரில் 1,000 வாழை மரங்கள் இருக்கும்பட்சத்தில் சேதங்கள் போக, குறைந்தபட்சம் 900 தார்கள் வரை அறுவடை செய்யலாம்.

ஒரு தாரில் 10 முதல் 15 சீப்புகளும், ஒரு சீப்புக்கு 15 முதல் 20 காய்களும் இருக்கும். தாரை மட்டும் வெட்டிவிட்டு தாய் மரத்தை அப்படியே விட்டு விட வேண்டும். அதிலுள்ள சத்துக்களை எடுத்துக்கொண்டு பக்கக்கன்று நன்றாக வளரும். தொடர்ந்து, பாசனத்துடன் ஜீவாமிர்தம்; தேங்காய்த் தண்ணீர் தெளிப்பு ஆகியவற்றை மட்டும் செய்து வந்தால், அடுத்த ஒன்பதாவது மாதத்தில் பக்கக்கன்றுகளில் இருந்து தார் வெட்டி விடலாம்.''

சாகுபடிப் பாடத்தை முடித்த கோவிந்தன் நிறைவாக வருமானம் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

''கற்பூரவல்லி வாழைத்தார் குறைந்தபட்சம் 90 ரூபாய்க்கும், அதிகபட்சமா 150 ரூபாய் வரைக்கும் விக்குது. சராசரியா தாருக்கு 100 ரூபாய் கிடைக்கும். ரசாயன முறையில் விளைவிச்சா அஞ்சு நாள் கூட பழம் தாங்காது. ஆனா, ஜீரோ பட்ஜெட் வாழை பத்து பதினஞ்சு நாள் வரைக்கும் அப்படியே இருக்குது. அதோட தேன் மாதிரி அபாரமான இனிப்பாவும் இருக்கு. நான் தனியா இயற்கைனு சொல்லி கூடுதல் விலைக்கெல்லாம் விக்குறதில்லை, வழக்கமான சந்தைக்குதான் அனுப்புறேன். இன்னும் கொஞ்சம் விற்பனைக்காக மெனக்கெட்டா கண்டிப்பா கூடுதல் லாபம் கிடைக்கும்” என்றார் எதார்த்த கணக்கோடு!

படங்கள்: 'ப்ரித்தி' கார்த்திக்.
தொடர்புக்கு, கோவிந்தன்,
அலைபேசி: 97866-89497

No comments:

Post a Comment