மருந்தில்லா வேளாண்மைக்கு வழிகாட்டும் மகத்தான தொடர்! பொறிவண்டுல நல்லது செய்றது மட்டும் இல்லை. கெட்டது செய்ற வகையும் இருக்கு. உருவத்துல பொறிவண்டு மாதிரியே இருக்கும், இது பயிரோட இலையில இருக்கற பச்சயத்தைச் சுரண்டித் திங்கும். இதைப் 'போலி பொறிவண்டு'னு சொல்றாங்க. இதுல 5 வகையான ஜாதிக இருக்கு. இது முக்கியமா தாக்குறது... கத்திரிக்காய் பயிரைத்தான். இலையோட நடு நரம்பை மட்டும் விட்டுட்டு, இலைகளைச் சுரண்டி திங்குறதால அந்த இலைக மட்டும் கொசுவலை மாதிரி தெரியும். இதுவும் பொறிவண்டு மாதிரியே குவியல், குவியலா முட்டையை இலையோட பின்பகுதியில வச்சிட்டு போயிடும். இந்த முட்டைக மஞ்ச கலர்ல வாழைக்காய் சீப்பு மாதிரி இருக்கும். இதோட முட்டைப் பருவம் 4 முதல் 5 நாட்கள். ஒரு போலி பொறிவண்டு, தன்னோட ஆயுள்ல 12 தடவை முட்டை வைக்கும். ஒவ்வொரு தடவையும் 50 முட்டையைக் கொத்தா வச்சிடும். வெயில் காலத்துல நாலு நாள்ல பொறிக்குற இந்த முட்டை, குளிர்காலத்துல 8 முதல் 10 நாள்ல பொறிக்கும். ஒவ்வொரு பூச்சியோட வாழ்க்கைச் சுழற்சிமுறையிலயும் பருவநிலை வேறுபாடு, வெப்ப மாற்றம் ரெண்டும் முக்கிய பங்கு வகிக்குது. சில பூச்சிக குளிர்காலத்துல ரொம்ப வேகமா இனப்பெருக்கம் செய்யும். காலநிலை மாற்றம் பூச்சிகளோட வாழ்க்கையில என்னென்ன மாற்றத்தை ஏற்படுத்துதுங்கிறதைத் தெரிஞ்சுக்கிறதுதான் உயிரியல் பூச்சிக் கட்டுப்பாட்டுல முக்கியமான விஷயம். போலி பொறிவண்டுகள் ஜாக்கிரதை! போலி பொறிவண்டோட தாய்ப்பூச்சி, புழுபருவம் ரெண்டுமே இலையைத் தாக்கும். ஒரே இலையில தாய்ப்பூச்சி, புழு ரெண்டும் சேர்ந்து ஒரே நேரத்துல இலையைத் திங்கும். இதைக் கத்திரி வயல்ல கண்கூடா பாக்கலாம். புழு பருவத்துல மஞ்சள் நிற உடம்போட, மேல்பகுதியில முள்ளு, முள்ளா இருக்கும். நல்லா வளந்த புழு... கருப்பு நிறத் தலையோட, தட்டையா இருக்கும். 15 நாள்ல புழு பருவத்திலிருந்து கூட்டுப்புழு பருவத்துக்கு மாறிடும். இந்த கூட்டுப்புழு கத்திரிச் செடியோட தண்டு, இலை இதுக்கு அடியிலதான் அதிகமா இருக்கும். தாய் அந்துப்பூச்சி மாதிரியே இருக்கற இதுக்கு உணர் கொம்புக, கால், றெக்கை இருக்காது. 10 நாள்ல கூட்டுப்புழு பருவத்திலிருந்து தாய் அந்துப்பூச்சியா வெளியேறும். இந்த போலி பொறிவண்டுக நல்லா பறந்து திரியற அளவுக்கு வலிமையானது. ஒரு பொறிவண்டு... 'நல்லது செய்ற வண்டா, கெட்டது செய்ற வண்டா?'னு அதோடமுதுகுல இருக்கற புள்ளியை வச்சு கண்டுபிடிக்கலாம். முதுகுப் பகுதியில 12 புள்ளிகளுக்கும் கம்மியா இருந்தா... அது நல்லது செய்ற பொறி வண்டு. 12 புள்ளிக்கும் அதிகமா இருந்தா... அது தீமை செய்ற போலி பொறிவண்டு. இதோட தாய் அந்துப்பூச்சி ஆரஞ்சு, சிவப்பு, பழுப்பு, மஞ்சள் நிறங்கள்ல கருப்புப் புள்ளிகளோட இருக்கும். முதுகுப் பகுதியில தாடியைப் போல பொன் நிறத்துல முடிக இருக்கும். இதையெல்லாம் வச்சு போலி பொறிவண்டுகளை அடையாளம் தெரிஞ்சிக்கலாம். பூச்சிகளை எதிர்க்கும் கத்திரி இலை! கத்திரிப் பயிர் இல்லாத நேரங்கள்ல வெள்ளரி, பூசணி, சுரைக்காய் மாதிரியான கொடி வகை பயிர்கள்லயும், தக்காளி, உருளைக் கிழங்கு, மக்காச்சோளம், சோளம், எள், சோயா, தட்டைப் பயறு மாதிரியான பயிர்கள்லயும் போலி பொறிவண்டுகளோட தாக்குதல் இருக்கும். போலி பொறிவண்டுக, கத்திரி இலையை அரிச்சு கொசுவலை மாதிரி ஆக்கினத பார்த்ததுமே... 'அய்யோ என் கத்திரிச் செடியெல்லாம் போச்சே'னு புலம்ப வேண்டியதில்ல. இதுக்காக டப்பா, டப்பாவா பூச்சிக்கொல்லியையும் தெளிக்க வேண்டியதில்ல. இயற்கையிலயே போலி பொறிவண்டால ஏற்பட்ட சக்தி இழப்பை ஈடு செய்றதுக்காக கத்திரிச் செடியே புதுசா இலைகளை உற்பத்தி செஞ்சிக்கும். அப்படி மறுபடியும் உற்பத்தியாகுற இலை, போலி பொறிவண்டு சாப்பிடத் தகுந்ததா இருக்காதுங்கறதுதான் முக்கியமான விஷயமே! பார்த்தீங்களா, இயற்கையிலயே எப்படியரு ஏற்பாடு! போலிகளுக்காக நடுங்க வேண்டியதில்லை! அப்புறம், இந்த போலி பொறி வண்டுகளுக்காக நடுநடுங்க வேண்டியதில்லை. இதுகளோட இளம் புழு, தாய் அந்துப்பூச்சிக இது மேலயெல்லாம் முட்டை வச்சி, அதை அழிக்குற குளவியும் (ஒட்டுண்ணி வகையைச் சேர்ந்த இந்தக் குளவியைப் பத்திபின்னாடி விளக்கமா பார்ப்போம்) இயற்கையிலயே இருக்கு. இந்தக் குளவி முட்டை போட்டு, 80 முதல் 96% போலி பொறிவண்டுகளை காலி பண்ணிடும்னா பார்த்துக்கோங்க. இப்படி இயற்கையிலயே தீமை செய்ற பூச்சிகளுக்கு எதிராளிக இருக்கறப்ப, வேர்வை சிந்தி உழைக்குற காசை வெட்டியா பூச்சிக்கொல்லிங்கற பேருல எதுக்காக செலவு செய்யணும். பூச்சிக்கொல்லி தெளிக்குறதால பணம் விரயமாகுறதோட, நமக்கு உதவி செய்ற குளவிகளையும் அழிச்சிடறோம்... சூழலையும் கெடுத்துடறோம்கறதை எல்லாம் ஒரு நிமிஷம் நினைச்சுப் பாருங்க. ஆசைப்பட்டா, 'லெமன் கிராஸ்' சாறு தெளிங்க! இயற்கையிலயே எதிராளிக இருந்தாலும், நாமளும் தீமை செய்ற புழு, தாய் அந்துப்பூச்சிகளைக் கண்ணால பார்த்தா... கையால பிடிச்சு அழிக்கிறது நல்லது. அதையும் மீறி ஏதாவது தெளிச்சாதான் எனக்கு திருப்தினு நினைக்கறவங்க, எலுமிச்சைப் புல்லை (லெமன் கிராஸ்) நசுக்கி, 10 கிராம் அளவுக்கு சாறெடுத்து ஒரு லிட்டர் தண்ணியில கலந்து பயிர்ல தெளிக்கலாம். இந்த வாசனைக்கு போலி பொறிவண்டுக அந்தப் பக்கம் எட்டிக்கூட பாக்காது. _ பூச்சி பறக்கும். |
No comments:
Post a Comment