Friday, July 23, 2010

ஆச்சர்யமூட்டும் அமெரிக்க ஆராய்ச்சி

இயற்கை
ஆச்சர்யமூட்டும் அமெரிக்க ஆராய்ச்சி !

'கோழிகளை, குப்பைகள் பல விதங்களில் காப்பாற்றுகின்றன' என்பது பற்றி கடந்த இதழில் பார்த்தோம். கிட்டத்தட்ட அதேபோன்ற இன்னொரு நிகழ்வை இப்போது பார்ப்போம்.

அமெரிக்க தேசத்தில், ஒஹையோ மாநிலத்தில் 'மலபார்' (ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில், கேரளத்தில்கூட ஒரு பகுதிக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டு, இன்றளவும் அதேபெயரில் வழங்கி வருகிறது) என்று ஒரு பகுதி உள்ளது. அங்கு, பண்ணை ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி, அதன் முடிவுகளை புத்தகங்களாக வெளியிடுவார்கள். அப்படி வெளியிடப்பட்ட ஒரு புத்தகத்தில் உள்ள செய்தியை அதன் ஆசிரியரின் வார்த்தைகளிலேயே பார்ப்போம்.

"மலபார் பகுதியில் ஓர் ஆராய்ச்சிக்காக சென்றோம். அங்கு பல பண்ணைகள் முடங்கிக் கிடந்தன. சில பண்ணைகள் வீட்டுமனைகளாக மாறியிருந்தன. இயங்கிக் கொண்டிருந்த ஒரு சில பண்ணைகளைக்கூட எந்த விவசாயியும் குத்தகைக்கு எடுத்துக் கொள்ளத் தயாராக இல்லை. அப்படிப்பட்ட நான்கு பண்ணைகள் எங்கள் கைவசம் வந்தன.

ஆரம்ப காலங்களில், அதாவது அமெரிக்காவை வெள்ளையர்கள் ஆக்கிரமிக்கும் முன்பு அது (மலபார்) செழிப்பான பகுதியாகத்தான் இருந்தது. விண்ணைத் தொடும் உயரத்துக்குப் பருத்த மரங்கள் சூழ்ந்து இருக்கும். கோடை காலத்தில்கூட பசுமையாகக் காட்சி அளிக்கும். தரையிலிருந்து ஓர் அடி உயரத்துக்குத் தாவர மட்குகள் மெத்மெத்தென்று இருக்கும்.

அங்கு குடியேறிய மனிதர்கள், பல்வேறு காரணங்களுக்காக கொஞ்சம் கொஞ்சமாக மரங்களை வெட்ட ஆரம்பித்தனர். மரங்களை அழித்து தீ மூட்டிவிட்டு அந்த இடங்களில் விவசாயத்தைத் தொடங்கியபோது... அந்த பூமி வளம் கொழிக்கும் பூமியாக இருந்தது. மூன்று, நான்கு தலைமுறைகள் எந்தவித ரசாயன உரத்தையும் பயன்படுத்தாமலே அமோக விளைச்சலை எடுத்தார்கள். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக விளைச்சல் சரியத் தொடங்க, அந்தப் பண்ணைகளுக்கு அழிவுகாலம் ஆரம்பமாகி, சீந்துவார் இல்லாமல் போயின.

எங்கள் கைக்கு வருவதற்கு முன், ஏறத்தாழ 130 ஆண்டுகள் அந்த நிலங்களில் தவறான உத்திகள் கையாளப்பட்டதால்தான் அத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மரங்கள் மட்டுமே இருந்தபோது, அவைகளின் வேர்கள் 20 அடி ஆழம் வரை அந்த சரளை பூமியைத் துளைத்துக் கொண்டு சென்றன. ஆனால், அவற்றையெல்லாம் அழித்து, விவசாயம் செய்தபோது, 9 அங்குல மேல்மண்ணில் மட்டும்தான் உழவு செய்யப்பட்டது. அந்த சமயங்களில் மண்ணில் இருந்து தாவரங்களால் எடுத்துக் கொள்ளப்பட்ட மட்கு மற்றும் தாதுக்கள் போன்றவற்றை மீண்டும் மண்ணில் செலுத்துவதற்குரிய எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

எங்கள் கைகளுக்கு வந்த பிறகு, நிறைய ரசாயனங்களைக் கொட்டி சோயா மொச்சையைப் பயிர் செய்தோம். வெயில் காலம் வந்த உடன் அனைத்துமே கருகிவிட்டன. தொடர்ந்து இப்படி ஆனபோது, 'பண்ணை உரிமையாளரின் காலடிச் சுவடுதான், நிலத்துக்குச் சிறந்த உரம்' எனும் சீனப் பழமொழி எங்கள் ஞாபகத்துக்கு வந்தது. ஒரு விவசாயி, தன் நிலத்தில் இரண்டு கண்களையும் நன்றாகத் திறந்து வைத்துக்கொண்டு சுற்றி வந்தாலே, வேளாண் கல்லூரிகள் போதிப்பதைவிட அதிகமாகக் கற்றுக் கொள்ள முடியும் என்பதை நாங்கள் உணர்ந்தோம். நாங்கள் அதைக் கடைபிடிக்க ஆரம்பித்த பிறகு, அந்தப் பண்ணைகளில் இருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டோம். ஆரம்பத்தில் நாங்கள் செய்த மண் பரிசோதனைகூட பல முடிவுகளைத் தெரிவித்தது. தொடர்ந்து சோயாவை சோதித்தபோது... பொட்டாஷ் பற்றாக்குறையைக் கண்டுபிடித்தோம். நான்கு ஆண்டுகளுக்கு பயிர் சுழற்சி முறையைக் கையிலெடுத்தோம். அதன்பிறகுதான் நிலம் வளமையடையத் தொடங்கி, வருமானமும் கூடியது.

பயிர் சுழற்சி முறையைக் கையாண்ட நான்கு ஆண்டு காலத்தில் நைட்ரஜனைச் சேர்க்கும் சக்தியுடைய 'ஆல்ஃபால்ஃபா' என்னும் தீவனப் பயிரையும், ஆழமாக வேர்விடும் திறன் கொண்ட புல்லையும் (புரோம் புல்) பயிரிட்டோம். ஆல்ஃபால்ஃபா, 15 முதல் 20 அடி ஆழம் வரை வேரைச் செலுத்தி பாறைகளில் உள்ள தாதுக்களை உறிஞ்சுகிறது. அதனால்தான் இந்தச் செடிகள் மேல் மண்ணே இல்லாத நிலங்களில்கூட அதிக விளைச்சல் கொடுத்தன.

இதுபோல ஆழமாக வேர்விடும் தாவரங்கள், ஆழத்தில் உள்ள தாதுக்களை உறிஞ்சிக் கொள்வதோடு அல்லாமல், அவற்றை மடக்கி உழும்போது தனது தாவரப் பாகங்களை பூமிக்கும் வழங்குகின்றன. இப்படி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை செய்யும்போது மண்ணின் வளம் மேலும் மேலும் கூடியது. அதன்பிறகு, நாங்கள் பயிர் செய்த ஓட்ஸ், கோதுமை ஆகியவற்றின் விளைச்சல் அதை பறைசாற்றியது. ஒரு கட்டத்தில், அந்த மலபார் பண்ணைகள் அற்புத விளைச்சல் தரும் பண்ணைகளாக உருவெடுத்தன. ஓஹையோ மாநிலத்தின் சராசரி விளைச்சலைவிட, அங்கு இரு மடங்கு விளைச்சல் கிடைத்தது.

அந்த சமயத்தில் நாங்கள் வளர்த்த பசுக்களுக்கு, 22 வகையான நுண்ணூட்டங்களை அளித்தும், கால்புண், மடிநோய் போன்றவற்றில் இருந்து அவற்றை எங்களால் காப்பாற்ற முடியவில்லை. ஆனால், அதிக ஆழத்துக்கு வேர் பாய்ச்சும் செடிகளான ஆல்ஃபால்ஃபா மற்றும் புரோம் புல் ஆகியவற்றை சாப்பிட்ட பிறகு, பசுக்களுக்கு நுண்ணூட்டப் பற்றாக்குறை ஏற்படவில்லை. மருத்துவரின் தேவையே இல்லாமல் போனது.

இயற்கையில் மனிதன் செய்யும் குறுக்கீடுகள், பயிர்களையும், கால்நடைகளையும் பாதிப்பது போலவே, மக்கள் நலத்தையும் பாதிக்கவே செய்கிறது. விஞ்ஞான வளர்ச்சியின் விளைவாகவும், தொழிற்புரட்சியின் வெளிப்பாடாகவும் மனிதன் புதுமைகளைப் படைக்கிறான். புதிய சூழல்களையும் படைக்கிறான். ஓய்வில்லாமல் அவனுடைய மூளை உழைத்துக் கொண்டே இருக்கிறது. ஆனால், இவற்றுக்கெல்லாம் பிரதிபலனாக, மனிதனது வாழ்வாதாரங்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றன. மனிதர்களுடைய தேவைகளை நிறைவு செய்வது நிலம்தானே தவிர, மனித மூளையல்ல என்பதை மனிதன் உணரத் தவறுகிறான்.

தூரத்திலிருந்தோ, ஆழத்திலிருந்தோ தண்ணீரைத் தேடிக் கொண்டு வந்து பயன்படுத்தும்போது அந்த நீர் ஆதாரங்கள் வற்றிப் போகின்றன என்பதை கவனிப்பதில்லை. புதிய கண்டங்களைக் கண்டறிந்து அங்கு எல்லா வளங்களையும் சுரண்டிவிட்டு, சில ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த பூமி எதற்கும் உதவாதது என்று சொல்லி வெளியேறுவதே மனிதர்களின் வழக்கம். எத்தனை வேதியியல் வல்லுநர்கள் வந்தாலும் இழந்த வளங்களை மீண்டும் கொண்டு வர முடியாது என்பதை 20 நூற்றாண்டுகளின் வரலாறு நமக்குத் தெளிவாகப் புரிய வைக்கிறது.

பன்றிகள், பசுக்கள் உட்பட அனைத்துக் கால்நடைகளும் தன் பற்றாக்குறையைத் தானே தீர்த்துக்கொள்ளும் சக்தியைப் பெற்றிருக்கின்றன. சுண்ணாம்புப் பற்றாக்குறை வரும்போது சிமென்டை நக்கிக் கொள்கிறது பன்றி. சினைப்பசுவுக்கு கால்சியம் பற்றாக்குறை வந்தால், காட்டில் கிடக்கும் எலும்புகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் தூளை சாப்பிடுகிறது. இதுபோன்ற பழக்கங்களை மனிதர்கள் விட்டு விலகி வந்து விட்டார்கள். மண்ணில் தாதுப்பற்றாக்குறை ஏற்படும்போது, அதில் விளையும் காய்களிலும், கனிகளிலும் நுண்ணூட்டப் பற்றாக்குறை நிலவுகிறது. அதுதான் நோயாக வெளிப்படுகிறது"

இப்படிச் சொல்லி வரும் அந்த ஆராய்ச்சி புத்தகத்தின் ஆசிரியர், நிறைவாக... "மூன்றடியில் இருந்து இருபது அடி ஆழம் வரை வேர்விடும் பயிர்களை பண்ணையில் சாகுபடி செய்யப் பழகுவோம்" என்று முடித்திருக்கிறார்.

நமது விவசாயிகள் பலருக்கும் பரவலாக ஒரு சந்தேகம் இருக்கிறது. அதாவது, "நாற்பது, ஐம்பது ஆண்டுகளாக ரசாயனத்தைக் கொட்டி கெட்டுப்போன நிலங்களை எப்படி மாற்ற முடியும்" என்பதுதான் அந்தச் சந்தேகம்.

மலபார் பண்ணைகளின் பலபயிர் சாகுபடி முறை, அந்தச் சந்தேகத்துக்கு சரியான விடையைக் கொடுக்கும் என்று நம்புகிறேன்.


No comments:

Post a Comment