ந.வினோத்குமார் |
|
ந.வினோத்குமார் |
|
சிந்திக்க... சிகரம் தொட... ஆளுமை அனாலிசிஸ் |
ந.வினோத்குமார்,படம்: ஜெ.தன்யராஜூ |
" 'நீங்க நல்லவரா, கெட்டவரா?' என்பது ஹிட் அடித்த சினிமா வசனம். ஆனால், நம்புவீர்களா... இந்த உலகில் நல்லவர், கெட்டவர் என்று யாரும் கிடையாது. நீங்கள் சிறந்தவரா... இல்லையா... என்பது மட்டும்தான் கேள்வி!" என்று ஆச்சர்யப்படுத்துகிறார் டாக்டர் ராஜ்மோகன். கல்லூரி மாணவர்கள், கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களுக்கு மனித வள மேம்பாட்டுப் பயிற்சிகளும், ஆளுமை மதிப்பீடுகளும் அளித்துவரும் போதி என்ற நிறுவனத்தின் தலைவர் இவர். இளைஞர்களின் எதிர்கால நலனுக்கு வழிகாட்டும் பணியில் ஈடுபட்டிருக்கும் அமைப்பு. "சிறந்தவர்களாக இருப்பவர்களுக்கு நல்லவர்களுக்கான குணாதிசயம் இருக்கும். அதை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். சூழ்நிலைகள்தான் ஒருவரை நல்லவராகவும் கெட்டவராகவும் சித்திரிக்கின்றன. ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ஒருவர் புரியும் எதிர்வினையை வைத்துதான் ஒருவர் சிறந்தவரா, இல்லையா என்பதைக் கணிக்க முடியும். சிறந்தவர் என்றால், அவர் எந்த அளவுக்குச் சிறந்தவர். சிறந்தவர் இல்லையென்றால், எந்த அளவுக்குச் சிறந்தவர் இல்லை... இதுதான் விஷயம்!" என்கிறார் ராஜ்மோகன். மேலும் தொடர்பவர், "நீங்கள் ஒரு புது உடை அணிந்து செல்கிறீர்கள். உங்கள் நண்பர் ஒருவருக்கு அந்த உடை பிடிக்க வில்லை என்றால், உடனே அதை முகத்துக்கு நேராகச் சொல்லலாம். அதை வைத்து அவரைக் கெட்டவர் என்று எப்படி மதிப்பிடுவீர்கள்? இன்னொரு நண்பர் உங்கள் உடையைப் பார்த்துப் புகழ்ந்து தள்ளு கிறார். உடனே, அவரை நல்லவர் என்று முத்திரை குத்திவிட முடியுமா? ஒருவர் அதிகமாகப் பொய் சொல்லலாம். அது தப்பு செய்வதற்காக என்பதைவிடவும், அதில் இருந்து தப்பிப்பதற்கு அல்லது தப்பவைப்பதற்குத்தான் பொய் சொல்கிறார்கள். அவர்களை எந்தப் பிரிவில் அடக்குவீர்கள்? ஆக, பொய் பேசுபவரோ, உங்களின் மனம் கஷ்டப்படக் கூடாது என்பதற்காகப் பூசி மழுப்புபவராகவோ, இப்படி என்னவிதமான ஆளுமையாகவும் இருக்கலாம். சூழ்நிலைகளை வைத்து ஒருவரை மதிப்பீடு செய்வதைவிடவும் 'அவர் எந்த அளவு சிறந்தவராக இருக் கிறார்' என்பதுபற்றித்தான் நாம் கவலைகொள்ள வேண்டும். மற்றவர்கள் உங்களை எப்படி மதிப்பீடு செய்கிறார்கள் என்பது நமது வளர்ச்சிக்கு உதவாது. நாம் நம்மை எப்படி மதிப்பிடுகிறோம். நம்மைச் சரியாக மதிப்பிடத் தெரிந்தால் மட்டுமே நாம் எந்த நிலையில் இருக்கிறோம், இன்னும் நம்மை எப்படி வளர்த்துக்கொள்வது என்று எண்ணிப் பார்க்க முடியும்!" என்பவர், நம்மை நாமே சுயமதிப்பீடு செய்துகொள்ள ஒரு பட்டியலையும் நீட்டுகிறார். சில நிமிடங்கள் மட்டும் செலவழித்து இதை நிரப்புங்கள். உங்கள் ஆழ்மன குணநலன்களை அறிந்துகொள்ளுங்கள்! கீழே இருக்கும் கட்டத்தை இப்போது நிரப்புங்கள்! |
| ||||||||
"வழக்கமா தென்னைக்கு இடையில் நாலு வருஷத்துக்குதான் ஊடுபயிர் செய்ய முடியும். ஆனா, இரட்டை நடவு முறையில் தென்னையை நடவு செய்தா... ஆயுசுக்கும் ஊடுபயிர் செய்யலாம்" என்று புதுவித யுக்தி ஒன்றை உயர்த்திப் பிடிக்கிறார் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகேயிருக்கும் போடிபட்டி கிராமத்தைச் சேர்ந்த எம்.பி.பி.எஸ். மருத்துவரான ஆர். பாலசுப்பிரமணியன். இரட்டை நடவு முறையில் தென்னை சாகுபடி செய்திருக்கும் இவர்... ஊடுபயிராக குமிழ், வேம்பு, மகோகனி, வேங்கை என மரப்பயிர்களை பயிர் செய்திருப்பதால், இவருடைய தோட்டம், ஒரு வனமாகவே காட்சியளிக்கிறது. அந்தப் பசுமைப் பந்தலுக்கு அடியில் நின்று கொண்டு நம்மிடம் பேச ஆரம்பித்தார் பாலசுப்பிரமணியன். வழிகாட்டிய வரப்புத் தென்னை! "இது திருமூர்த்தி அணை மூலமா பாசனம் செய்ற பகுதி. 'ஏழு குளபாசனம்'னு (ஷிணிக்ஷிணிழி ஜிகிழிரி) சொல்லுவாங்க இந்தப் பகுதியை. எப்பவும் தண்ணிக்குப் பஞ்சமே இருக்காது. ஒரு காலத்துல கரும்பும், நெல்லும்தான் இங்க முக்கிய பயிரா இருந்துச்சு. இப்ப 60% தென்னை விவசாயம்தான் நடக்குது. எங்களுக்குக் கிணற்றுப் பாசனத்துல 25 ஏக்கர் நிலமிருக்கு. அதுல ஏழு ஏக்கர்ல மட்டும் சோதனை முயற்சியா இரட்டை நடவு முறையை செயல்படுத்தினேன். என்னோட நண்பரும் நானும் சேர்ந்து தென்னை நடவு முறைகளைப் பத்தி தொடர்ந்து ஆராய்ச்சி அடிப்படையில பேசிக்கிட்டிருப்போம். 'அந்தக் காலத்திலயெல்லாம் வரப்புல மட்டும்தானே தென்னையைப் பயிரிட்டாங்க. அதுவும் நெருக்கமா பயிரிட்டு லாபம் பார்த்தாங்க. அதையே கொஞ்சம் மாத்தி யோசிச்சி நடவு செய்தா என்ன?' இப்படியே ரெண்டு பேரும் பேசிட்டிருப்போம். அதோட பலனா கிடைச்சதுதான் தென்னையில இரட்டை நடவு முறை. இதை ‘கிராஸ்’ நடவு முறைனும் சொல்லலாம். வளர்த்தெடுக்கும் ஜீரோ பட்ஜெட்! என் தோட்டத்துல இப்படி நடவு செய்து ஆறு வருஷமாச்சு. வழக்கமான முறையில நடற தென்னை மாதிரியே, இந்த மரங்களும் எந்தப் பிரச்னையும் இல்லாம நல்லா வளர்ந்திருக்கு. நல்லாவும் காய்ச்சுக்கிட்டு இருக்கு. இதேபோல இந்தப் பகுதியில ரெண்டு மூணு பேரு செய்திருக்காங்க. நல்லபடியா மகசூலும் பார்க்கறாங்க" என்று முன்னுரை கொடுத்தவர், "ஆரம்பத்துல சாதாரண முறையில விவசாயம் செய்துகிட்டிருந்த நான், பசுமை விகடனைப் படிக்க ஆரம்பிச்ச பிறகு, முழுக்க ஜீரோ பட்ஜெட் முறை விவசாயத்துக்கு மாறிட்டேன். நாட்டுமாடு ஒண்ணை வாங்கிக் கட்டிட்டேன். அது கொடுக்கற சாணம், கோமூத்திரம் இதையெல்லாம் பயன்படுத்தி ஜீவாமிர்தம் தயாரிக்கிறேன். இதைத் தவிர, மூடாக்கும் போடறேன். இதெல்லாம் சேர்ந்து என்னோட தோட்டத்து பயிருங்களை நல்லாவே வளர்த்தெடுக்குதுங்க..." என்று சொல்லிவிட்டு, இரட்டை நடவு முறையைப் பற்றிய பாடத்துக்குள் புகுந்தார். மகசூலை பாதிக்கும் சூரிய ஒளி சிக்கல்! வழக்கமாக ஒரு ஏக்கரில் 25 அடி இடைவெளியில், 70 தென்னங்கன்றுகளை நடுவார்கள். இப்படி நடுவதால், எல்லா மரங்களுக்கும் சூரிய ஒளி சீராகக் கிடைப்பதில்லை என்பதுதான் உண்மை. சூரியனுடைய ஒளியானது... உத்தராயணம், தட்சணாயணம் என ஆறு மாதத்துக்கு பூமியின் வட பாகத்திலும், ஆறு மாதம் தென்பாகத்திலும் மாறி மாறி வீசுவதால் ஏற்படும் பிரச்னைதான் இது. சீரான ஒளி கிடைக்காத மரங்களில் குரும்பை அதிகமாக உதிர்ந்து, மகசூலை பாதிக்கும். இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வாக இருப்பதுதான் இரட்டை நடவு முறை. இந்த முறையில் அணி அணியாக தென்னங்கன்றுகளை நடவேண்டும். இரண்டு அணிகளுக்கு இடையே, 52 அடி இடைவெளி கிடைப்பதால், எல்லா காலங்களிலும், எல்லா மரங்களுக்கும் முழுமையான சூரிய ஒளி கிடைக்கும். இதனால் குரும்பை உதிர்வது குறைந்து நல்ல மகசூல் கிடைக்கும். அணிகளுக்கு இடையே 52 அடி! ஒரு அணி தென்னையை எடுத்துக் கொண்டால்... கன்றுக்கு கன்று 12 அடி... வரிசைக்கு வரிசை 6 அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். ஒவ்வொரு கன்றும், அடுத்த வரிசை கன்றுக்கு இணையாக இல்லாமல், ஒன்று மாற்றி ஒன்றாக (ஜிக்ஜாக் முறையில்) நடவேண்டும். இதேபோல அடுத்த அணி தென்னையை நடவு செய்யவேண்டும். இந்த இரண்டு அணிகளுக்கு இடையே 52 அடி இடைவெளி இருக்கவேண்டும் (பார்க்க, படம்). வழக்கமான முறையைப் போலவே, இந்த முறையிலும் ஏக்கருக்கு 70 மரங்களை நடவு செய்ய முடியும். அதுமட்டுமல்லாமல், 52 அடி இடைவெளி கிடைப்பதால், அந்த இடத்தில் ஊடுபயிரைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கலாம். சொல்லப்போனால்... தென்னையை ஊடுபயிர் என்றும், 52 இடைவெளி பிரதேசத்தில் பயிர் செய்வதை முக்கிய பயிர் என்றும்கூட குறிப்பிடலாம். இந்த முறையில் ஆண்டுக்கு 150 முதல் 180 தேங்காய் வரை கிடைக்கும். அதேசமயம், ஊடுபயிராக நாம் விளைவிக்கும் பயிரைப் பொறுத்து, தென்னையைவிட அதிகமான மகசூலைக்கூட எடுக்க முடியும். அலட்டல் இல்லாத கிடங்குப் பாசனம்! பாசனத்துக்காக அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. இரண்டு அணி தென்னைகளுக்கு நடுவே நீளமான வாய்க்கால்களை (கிடங்கு) அமைக்க வேண்டும். அதாவது, ஒரு அணியிலிருக்கும் ஒரு வரிசை மரத்திலிருந்து 5 அடி தள்ளி, முக்கால் அடி ஆழம், 10 அடி அகலம் கொண்ட நீளமான வாய்க்கால்களை எடுக்க வேண்டும். பண்ணைக் கழிவுகள், துண்டுதுண்டாக வெட்டப்பட்ட தென்னை மட்டைகளை அதில் கொட்டி 10 நாட்களுக்கு ஒரு முறை இந்தக் கிடங்குகள் நிரம்பும் அளவுக்கு தண்ணீர் விட்டால் போதும். அடுத்த பத்து நாட்களில் கழிவுகள் மட்கி உரமாகிவிடும். வசதியைப் பொறுத்து, ஆண்டுக்கு இரண்டு முறை இந்தக் கிடங்குகளில் கோழி எரு, தொழுவுரம் என்று கொட்டலாம். இரண்டு வரிசை தென்னைக்கு இடையே உள்ள 52 அடி இடைவெளியில், இயற்கையாக வளரும் செடி, கொடிகளை எதுவும் செய்யாமல் உயிர்மூடாக்க£க விட்டுவிட்டால்... மண் தானே வளமாகிவிடும். மாதம் ஒரு தடவை தண்ணீரில் ஜீவாமிர்தத்தைக் கலந்து விடவேண்டும். இதன் மூலம் ஈரியோபைட் சிலந்தித் தாக்குதலை வெகுவாகக் குறைக்க முடியும். "மரம்கிறது, பேங்க்ல போட்ட பணம்!" தென்னை நடவு முறை பாடத்தை முடித்த பாலசுப்பிரமணியன், "ஊடுபயிரா கரும்பு, வாழை, காய்கறிகளை சாகுபடி செஞ்சுட்டிருந்தேன். இப்ப மரப்பயிரை சாகுபடி செஞ்சுருக்கேன். என் நிலத்தில இப்ப இருக்கற மகோகனி மரங்களை (8 அடி இடைவெளி) நட்டு... நாலு வருஷமாச்சு. இப்பவே ஒரு மரத்துக்கு 6,000 ரூபாய் வீதம் விலை வெச்சி வியாபாரிங்க கேட்கறாங்க. ஆனா, நான் கொடுக்கல. 12 வருஷம் கழிச்சு வித்தா... நல்ல லாபம் பார்க்கலாம்னு விட்டு வெச்சிருக்கேன். அதுபோக, மரப்பயிர் என்கிறது பேங்க்ல போட்டு வெச்ச பணம் மாதிரிங்கறதையும் மறந்துடக்கூடாது. ஏழு ஏக்கர்லயும் சேர்த்து மகோகனி-200, நாட்டுவேம்பு-80, வேங்கை-50, பென்சில் சவுக்கு-50 பாக்கு-200... இப்படி பல வகையான மரங்களை வரிசையா நடவு செஞ்சிருக்கேன். இதுதான் ஜீரோ பட்ஜெட்! முதல் மூணு வருஷம் மட்டும் இதுக்கெல்லாம் வாய்க்கால் மூலமா தண்ணி பாய்ச்சினேன். இப்ப அதையும் செய்றதில்லை. வருஷம் ரெண்டு தரம் மரங்களைக் கவாத்து பண்ணி, கிளைகளை அப்படியே நிலத்துல போட்டு மக்க வெச்சிடறேன். இதன் மூலமா மண்ணுல ஈரப்பதம் தங்கியிருக்கறதோட... அந்தக் கழிவுகளே உரமாவும் மாறிடுது. கையில இருந்து காசு செலவாகறதுக்கு வேலையே இல்லை. முழுக்க முழுக்க ஜீரோ பட்ஜெட்தான்" என்றார் மகிழ்ச்சியாக!
|
| |||||||||
இயற்கைத் தக்காளி தரும் இனிப்பான லாபம் !
ஆள் பற்றாக்குறை, விலையின்மை என விவசாயிகளைச் சுற்றிச் சுற்றி அடிக்கும் பல்வேறு பிரச்னைகளால், குறுகிய காலத்தில் விளையும் பயிர் வகை விவசாயத்தையே மொத்தமாக கைவிட்டு, மரப்பயிர்களுக்கு மாறும் விவசாயிகள்தான் இன்று அதிகமாகி வருகின்றனர். ஓரளவுக்குத் தண்ணீர் வசதி இருந்தாலும் உடனே தென்னையை வைத்துவிட்டு நிம்மதியாக இருக்கத்தான் ஆசைப்படுகிறார்கள். திருப்பூர், கோயம்புத்தூர் மாவட்ட விவசாயிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், இப்படித் தென்னையை வைத்தாலும்... அது வளர்ந்து வரும் வரை ஊடுபயிராக காய்கறி உள்ளிட்ட பலவற்றையும் பயிர் செய்யத் தவறுவதில்லை சில விவசாயிகள். அவர்களில் ஒருவர்... திருப்பூர் மாவட்டம், வாளவாடி கிராமத்தைச் சேர்ந்த மகேஸ்வரன். ஊடுபயிராக சுழற்சி முறையில் தக்காளி சாகுபடி செய்து வருகிறார்- அதுவும் இயற்கை முறையில்! முட்டுவளிச் செலவு குறைகிறது! காலை வேளையில்... தக்காளி அறுவடையில் தீவிரமாக இருந்த மகேஸ்வரனை சந்தித்தோம். "கிணத்துப் பாசனத்தோட மொத்தம் ஏழு ஏக்கர் இருக்கு. நல்ல வளமான செம்மண் பூமிங்க இது. எதைப் போட்டாலும் ‘நச்’சுனு விளையுற மண். மொத்தத்துலயும் தென்னங்கன்னு வெச்சு உட்டுட்டேன். இடையில... பீட்ரூட், வெங்காயம், தக்காளினு மாத்தி மாத்தி வெள்ளாமை வெச்சுக்கிட்டு இருக்கேன். ஒரு ஏக்கர்ல போட்டிருந்த தக்காளியில இப்போ முக்காவாசி அறுவடை முடிஞ்சு இருக்கு. இன்னொரு ஏக்கர்ல அடுத்த போகத்துக்கு தக்காளி தயாரா இருக்கு. வீரிய ரக தக்காளின்றதால இதுக்குப் பட்டமெல்லாம் கிடையாது. வருஷமெல்லாம் வருமானம்தான். உரம், பூச்சிமருந்துனு ஏகப்பட்ட செலவாகிட்டு இருந்துச்சு. முட்டுவளிச் செலவைக் குறைக்க வழி தேடிக்கிட்டு இருந்தப்போதான், மண்புழு உரம், வேம்பு மருந்துனு சில விஷயங்கள பத்தி ஒருத்தர் சொல்லிக் கொடுத்தாரு. ஒரு போகம் அப்படிப் பண்ணிப் பாப்போம்... சரியா வந்துச்சுனா, அடுத்தடுத்து அதேமாதிரி பண்ணுவோம். இல்லாட்டி ரசாயனத்துக்கே மாறிடுவோம்னு நினைச்சுதான் தைரியமா இறங்கினேன். ஒரு பிரச்னையும் இல்ல. நல்லாவே மகசூல் வந்திருக்கு. மத்தபடி இயற்கை விவசாயம் பத்தியெல்லாம் எனக்கு பெரிசா ஒண்ணும் தெரியாதுங்க’’ என்றவர், தான் ஒரு ஏக்கரில் சாகுபடி செய்த விவரங்களைச் சொன்னார். அதைப் பாடமாகத் தொகுத்திருக்கிறோம். உரமெல்லாம் தேவையேயில்லை! "தக்காளி 150 நாள் (5 மாதம்) பயிர். சித்திரை மாதத்தில் நிலத்தை இரண்டு முறை டிராக்டர் மூலம் கோடை உழவு செய்ய வேண்டும். 15 நாள் நிலத்தை ஆற போட்டு, 2 டிராக்டர் தொழுவுரம், 1 டன் கோழி எரு ஆகியவற்றை அடியுரமாக நிலத்தில் இறைத்து, பார் பிடித்து, 8 அடி அகலம் 10 அடி நீளத்துக்கு பாத்தி அமைத்து, தென்னைக்கு அமைத்திருக்கும் வாய்க்கால்களோடு இணைக்க வேண்டும். ஒரு முறை நீர் பாய்ச்சி, பாத்திகளில் நீர் சுண்டிய பின்பு தக்காளி நாற்றுகளை வரிசைக்கு வரிசை, செடிக்குச் செடி 2 அடி இடைவெளி இருக்குமாறு ஈர நடவு செய்ய வேண்டும். ஏக்கருக்கு 10 ஆயிரம் நாற்றுகள் தேவைப்படும். 20 முதல் 25 நாட்கள் வயதுள்ள தரமான வீரிய ரக நாற்றுகளாகத் தேர்வு செய்து கொள்ள வேண்டியது அவசியம். தொடர்ந்து வாரம் இருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். உரமெல்லாம் தேவை-யேயில்லை! 150 நாளில், 15 டன்! 20 மற்றும் 35\ம் நாட்களில் களை எடுக்க வேண்டும். ஒவ்வொரு முறை களை எடுக்கும் போதும், ஒவ்வொரு செடிக்கருகிலும் ஒரு கைப்பிடி (20 கிராம்) அளவுக்கு மண்புழு உரத்தை வைத்து நீர் பாய்ச்ச வேண்டும். இதற்கு 200 கிலோ மண்புழு உரம் தேவைப்படும். இலைமுரணை, வெள்ளை ஈக்கள் மற்றும் காய்ப்புழு ஆகியவை தாக்கினால், 10 லிட்டர் தண்ணீருக்கு, 30 மில்லி வேம்பு என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். இது தவிர... வேறு உரங்களோ, பூச்சிக்கொல்லியோ தேவையே இல்லை. 65 முதல் 70 நாட்களுக்குள் காய்ப்பு எடுக்கத் தொடங்கும். காய்கள் சிவப்பு அடிக்கத் தொடங்கியவுடன் அறுவடையை ஆரம்பிக்கலாம். காய்க்க ஆரம்பித்த நாளிலிருந்து 60 முதல் 80 நாட்கள் வரை காய் பறிக்கலாம். வீரிய ரக தக்காளி என்பதால், 15 டன் வரை மகசூல் கிடைக்கும். ஏக்கருக்கு 1 லட்ச ரூபாய்! நிறைவாகப் பேசிய மகேஸ்வரன், "அறுவடை ஆரம்பிச்ச உடனே முதல் வாரத்துல ஒரு நாளைக்கு 250 கிலோ வரைக்கும் கிடைக்கும். அடுத்த ரெண்டு மூணு வாரங்கள்ல கொஞ்சம் கொஞ்சமா கூடி, ஒரு நாளைக்கு எண்ணூறு கிலோ வரைக்கும் கூட கிடைக்கும். பிறகு, படிப்படியா குறைய ஆரம்பிச்சுடும். கடைசி 20 நாள்ல... ஒரு நாளைக்கு 20 கிலோவுல இருந்து முப்பது கிலோ வரைக்கும்தான் கிடைக்கும். மொத்தமா பாக்கும்போது 15 டன்னுக்கு மேல கண்டிப்பா கிடைச்சுடும். பொள்ளாச்சி மார்க்கெட்டுக்குத்தான் அனுப்பிட்டிருக்கேன். இன்னிய நிலைமைக்கு, கிலோ 10 ரூபாய்க்கு மேல போயிக்கிட்டிருக்கு. நான் அறுவடை ஆரம்பிச்சு 1 மாசம் ஆச்சு. இதுவரைக்கும் 11 டன் எடுத்து 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செஞ்சுருக்கேன். இன்னும் இருபது இருபத்தஞ்சு நாளுக்குள்ள 4 டன் தக்காளி கிடைக்கும்னு எதிர்பாக்குறேன். எப்படிப் பாத்தாலும், அஞ்சு மாசத்துல ஏக்கருக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு மேல கண்டிப்பா கிடைக்கும்கிறது உறுதி’’ என்று சொன்னார், தன்னுடைய எதிர்பார்ப்பு நிறைவேறிய மகிழ்ச்சியில்! |
| ||||||
கொட்டிக் கொடுக்கும் கொட்டில் முறை ஆடு வளர்ப்பு !
தோட்டங்களில் வெள்ளாடு வளர்ப்பவர்களுக்கு, ஆடுகளிடம் இருந்து பயிர்களைக் காப்பாற்றுவதுதான் பெரிய பிரச்னை. 'கொட்டில் முறை ஆடு வளர்ப்பு' இதற்கு மாற்றாக இருந்தாலும், அது அவ்வளவாக விவசாயிகளிடம் பிரபலமாகவில்லை. காரணம்... 'கொட்டில் முறையில் வெள்ளாட்டை நன்றாக வளர்க்க முடியாது. மேய்ச்சல் முறைதான் நன்றாக கைகொடுக்கும்' என்ற நம்பிக்கை விவசாயிகளிடம் ஆழமாகப் பதிந்திருப்பதுதான். ஆனால், இந்த நம்பிக்கையைத் தகர்க்கும் விதமாக, கொட்டில் முறையில் வெள்ளாடுகளைச் சிறப்பாக வளர்த்து வெற்றி கண்டு வருகிறார்... தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அருகிலுள்ள பி.துரிஞ்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம். ஆடுகள்-இரண்டு, பால் குடிக்கும் குட்டிகள்-ஐந்து... இவற்றை வைத்துக் கொண்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், ஆடு வளர்ப்பை ஆரம்பித்திருக்கிறார் பன்னீர்செல்வம். இன்று... 54 ஆடுகளாக அவை பெருகி நிற்கின்றன. இவர் வளர்ப்பது வெள்ளாடு வகைகளில் ஒன்றான பல்லையாடு இனத்தைச் சேர்ந்த 'நாய்ப்பல்லை' என்றழைக்கப்படும் நாட்டு ரக ஆடுகள். இவை, தர்மபுரி மாவட்டத்தின் பிரத்யேக ரகங்கள். பளீர் கொட்டில்! பன்னீர்செல்வத்தை சந்திப்பதற்காக அவரது தோட்டத்துக்குச் சென்றபோது நம்மைக் கவர்ந்து இழுத்தது, தரையில் இருந்து ஆறடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த ஆட்டுக் கொட்டில். அதன் வெளிப்புற உப்பரிகையில் இருந்து கழுத்தை நீட்டிக் கொண்டிருந்த கருப்பும் வெள்ளையுமான ஆட்டுக் குட்டிகள் நம்மைப் பார்த்து வினோத சத்தம் எழுப்பின. மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருப்பது போன்ற சிறுசிறு பலகைகளால் இணைக்கப்பட்ட சரிவான பாதை... அதேபோன்ற பலகைகளால் அமைக்கப்பட்டிருந்த தரைப்பகுதி... அத்தனை ஆடுகள் இருந்தும் படுசுத்தமாக 'பளீர்' என்று காட்சி அளிக்கும் கொட்டில்... என அனைத்துமே நம்மை கவர்வதாக இருந்தன. ஆடுகளைப் பரிவோடு தடவிக் கொடுத்துக் கொண்டே பேச ஆரம்பித்தார், பன்னீர்செல்வம். ''எனக்கு ஆறு வயசு ஆகுறப்பவே என் தகப்பனார் இறந்துட்டார். அதனால அப்பயே விவசாயம் கத்துக்க ஆரம்பிச்சுட்டேன். பத்து, பன்னெண்டு வயசுல நானே தனியா விவசாய வேலைகளைப் பாக்க ஆரம்பிச்சுட்டேன். பஞ்சத்தில் பிறந்த யோசனை! மழை பெய்யாம போற பஞ்ச காலம்தான் விவசாயிகளுக்குச் சோதனைக் காலம். கஞ்சியையும் கூழையும் குடிச்சுதான் காலம் தள்ளுவோம். அதேமாதிரி ரெண்டு வருஷத்துக்கு முன்ன மழை இல்லாம கிணறெல்லாம் வத்திப் போச்சு. பஞ்சம் பிடிச்சுக்கிட்டு ஆட்ட ஆரம்பிச்சுடுச்சு. அப்பதான் ஆடு வளர்க்கற யோசனை வந்துச்சு. மொத்தமால்லாம் ஆடு வாங்க வசதி கிடையாது. அதனால நாலு ஆட்டுக்குட்டிகளை வாங்கி, அதை வெச்சுப் பெரிய பண்ணை உருவாக்கணும்னு ஆசைப்பட்டேன். 2008-ம் வருசம் டிசம்பர் மாசம் முதல்ல ரெண்டு கையாடு, அஞ்சு பால் குட்டிகளை வாங்கிட்டு வந்தேன். ஒரு லட்சியத்தோடவே கண்ணும் கருத்துமா பராமரிச்சேன். அதோட விளைவுதான்... இன்னிக்கு 54 உருப்படிகளா பட்டி பெருகி நிக்குது. மளமளவென மருக்கைக் குட்டிகள்! என் அதிர்ஷ்டமோ... என்னவோ என் ஆடுங்க எல்லாமே நிறைய மருக்கைக் குட்டிகளாத்தான் (பெண்) ஈனுச்சுக. அதனாலதான் இவ்வளவு சீக்கிரமே பெருக்க முடிஞ்சது. இதுவரை ஏழெட்டு கிடாக் குட்டிகளை மட்டும்தான் வித்திருக்கேன். ஒரு மருக்கைக் குட்டியைக்கூட வித்ததில்லை. நூறு ஆடா பெருக்காம ஒரு மருக்கையைக்கூட விக்கக் கூடாதுனு லட்சியமே வெச்சுருக்கேன்'' என்று பன்னீர்செல்வம் சொல்லி நிறுத்த, ஆடு வளர்ப்பைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார், அவருடைய மகன் மணிவண்ணன். இவர் கல்லூரியில் படித்துக் கொண்டே ஆடு வளர்ப்பிலும் ஆர்வத்தோடு ஈடுபட்டு வருகிறார். கைகொடுக்காத வங்கி! ''எங்க பகுதியில மேய்ச்சலுக்குனு தனியா நிலமெல்லாம் இல்லை. இருக்குற கொஞ்சநஞ்ச இடமும் அடிக்கடி மழை இல்லாம காய்ஞ்சு போயுடுது. ஆடுகளுக்காக மூணு ஏக்கர்ல தீவனப்பயிர்களை விதைச்சிருந்தோம். அதை, வளர்ப்பு ஆடுககிட்ட இருந்து காப்பாத்துறது பெரும்பாடா இருந்துச்சு. அதனாலதான் கொட்டில்ல வெச்சு வளக்க முடியுமானு தன்னோட நண்பர்கள்கிட்ட ஆலோசனை கேட்டார் எங்கப்பா. அதுக்கப்பறம்தான் ஒரு வழியா கொட்டில் அமைக்க முடிவு பண்ணினார். அதுக்காக பேங்க்ல கடன் கேட்டு மாசக் கணக்குல அலையா அலைஞ்சும் கடன் கிடைக்கல. வெறுத்துப் போய், கையில இருந்த பணம், சொந்தக்காரங்ககிட்ட கடன் வாங்குன பணம்னு எல்லாத்தையும் போட்டுதான் போன வருஷம் 2 லட்ச ரூபாய் செலவழிச்சு இந்தக் கொட்டிலை அமைச்சுருக்கார். 32 அடி நீளம், 22 அடி அகலத்துல தரையில இருந்து ஏழடி உயரத்துல அமைச்சுருக்கோம். கொட்டிலோட தரைப்பகுதியில ஆடுகளோட கால் குளம்பு சிக்கிக்காத அளவுக்கு இடைவெளிவிட்டு வரிசையா பலகைகளை இணைச்சுருக்கோம். அதனால ஆட்டோட கழிவுகள் எதுவும் உள்ள தேங்காம கீழ விழுந்துடும். மருக்கைகளுக்கு தனி இடம்! இளங்குட்டிகள், சினையாடுகள், வளருற மருக்கை குட்டிகள்னு ஒவ்வொண்ணுக்கும் தனித்தனியா தடுப்பு இருக்கு. மருக்கைக் குட்டிகளுக்கு எட்டு மாசம் ஆகுற வரைக்கும் கிடாகிட்ட நெருங்க விடக்கூடாது. அதுக்கு முன்னாடி சினை பிடிச்சுட்டா... குட்டியும் புஷ்டியாப் பிறக்காது. அதிக குட்டிகளையும் ஈனாது. அதுக்காகத்தான் தனித்தனித் தடுப்பு. ஒரு ஆட்டுக்கு ஒரு நாளைக்கு ஒண்ணேகால் கிலோ பசுந்தீவனம் கொடுக்குறோம். அதை, காலையில... சாயங்காலம்னு பிரிச்சுதான் கொடுப்போம். தீவனப்புல், அகத்திக்கீரை, வேலிமசால், சூபாபுல், சோளத்தட்டுனு நிறைய வகைத் தீவனங்களைக் கலந்துதான் வெள்ளாடுகளுக்குக் கொடுக்கணும். தீவனத்தை மெஷின் வெச்சுப் பொடி பொடியா நறுக்கிக் கொடுத்தா வீணாக்காம அவ்வளவையும் சாப்பிட்டுடும். தெம்பு தரும் தானியக் கூழ்! இதுபோக, கோதுமை, சோளம், கம்பு, ராகி எல்லாத்தையும் சேர்த்து அரைச்சு வெச்சிருக்கோம். அதுல ரெண்டு படி மாவை கூழா காய்ச்சி, அதோட அரைகிலோ தவிடு, அரைகிலோ புண்ணாக்கையும் கலந்து ஆடுகளுக்கான தாழியில தண்ணியில கரைச்சு வெச்சுடுவோம். (54 ஆடுகளுக்கும் சேர்த்து) காலையிலயும் சாயங்காலமும் தீவனம் சாப்பிட்ட உடனே இந்தத் தண்ணியைக் குடிக்க வெச்சுடுவோம். வேற எதுவும் தேவையில்லை. கொட்டிலுக்குக் கீழ, அதாவது ஆடுகளோட புழுக்கை விழுற இடத்துல... தேங்காய் நாரைப் பரப்பி வெச்சுடுவோம். அதுல புழுக்கைகளும், சிறுநீரும் விழுறப்போ நார் நல்லா மக்கிடும். அதை அப்படியே கொண்டு போய் நிலத்துல கொட்டி, தண்ணி பாய்ச்சிடுவோம். தீவனப் பயிர்களை வளர்த்தெடுக்கறதுக்கு இதுதான் உரமே. தனியா இதுக்குனு செலவு பண்றது கிடையாது. தேவைக்குப் போக மீதி இருக்குற புழுக்கைகளை ஒரு டிராக்டர் 2,000 ரூபாய்னு வித்துக்கிட்டிருக்கோம்'' என்று தெளிவாக எடுத்து வைத்தார் மணிவண்ணன். ஒரே ஒரு ஆள் போதும்! மீண்டும் தொடர்ந்த பன்னீர்செல்வம், ''எனக்கு எல்லாமே என் ஆடுகதான். பெரும்பாலும் நான் ஒரு ஆள்தான் மொத்த ஆட்டையும் பராமரிச்சுக்கிட்டு இருக்கேன். கொட்டில்ல வளர்க்கறப்போ நூத்துக்கணக்கான ஆட்டை ஒரே ஆளே பாத்துக்கிடலாம். ஒன்றரை ஏக்கர்ல தீவனம் போட்டாலே நூறு ஆட்டுக்குச் சரியா இருக்கும். எல்லா ஆட்டுக்கும் மூணு மாசத்துக்கு ஒரு தடவை குடல் புழு நீக்குறதுக்கு மருந்து கொடுக்கணும். மத்தபடி வேற நோயெல்லாம் எதுவும் வர்றதில்லை. அதனால மருந்துச் செலவு எதுவும் வர்றதேயில்லை. இந்த ரக ஆடுக கொஞ்சமாத்தான் தீவனம் எடுத்துக்குதுக. அதேசமயம்... ஒரு ஈத்துக்கு ரெண்டு குட்டிக்கு குறையாம போட்டுடுதுக. அலையாம கொள்ளாம ஒரே இடத்துல இருந்து தீவனம் எடுத்துக்குறதால சீக்கிரமே நல்ல வளர்ச்சி வந்து எடை கூடிடுது. பருவத்துக்கும் தயாராகிடுது. நான் வித்த எட்டு கிடாக்குட்டியையுமே ஆறு மாச வயசுலேயே ஒவ்வொண்ணையும் 2,225 ரூபாய்க்கு வித்தேன். அதனால விற்பனைக்கெல்லாம் கவலைப்பட வேண்டியதேயில்லை. இப்பவே வியாபாரிங்க என் தோட்டத்தைச் சுத்தி சுத்தி வர ஆரம்பிச்சுட்டாங்க. அடுத்த வருசத்துல இருந்து, மருக்கைகுட்டிகளோட விற்பனையையும் ஆரம்பிச்சுடுவேன்'' என்றார் மகிழ்ச்சியோடு!
|