| |||||||||
இயற்கைத் தக்காளி தரும் இனிப்பான லாபம் !
ஆள் பற்றாக்குறை, விலையின்மை என விவசாயிகளைச் சுற்றிச் சுற்றி அடிக்கும் பல்வேறு பிரச்னைகளால், குறுகிய காலத்தில் விளையும் பயிர் வகை விவசாயத்தையே மொத்தமாக கைவிட்டு, மரப்பயிர்களுக்கு மாறும் விவசாயிகள்தான் இன்று அதிகமாகி வருகின்றனர். ஓரளவுக்குத் தண்ணீர் வசதி இருந்தாலும் உடனே தென்னையை வைத்துவிட்டு நிம்மதியாக இருக்கத்தான் ஆசைப்படுகிறார்கள். திருப்பூர், கோயம்புத்தூர் மாவட்ட விவசாயிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், இப்படித் தென்னையை வைத்தாலும்... அது வளர்ந்து வரும் வரை ஊடுபயிராக காய்கறி உள்ளிட்ட பலவற்றையும் பயிர் செய்யத் தவறுவதில்லை சில விவசாயிகள். அவர்களில் ஒருவர்... திருப்பூர் மாவட்டம், வாளவாடி கிராமத்தைச் சேர்ந்த மகேஸ்வரன். ஊடுபயிராக சுழற்சி முறையில் தக்காளி சாகுபடி செய்து வருகிறார்- அதுவும் இயற்கை முறையில்! முட்டுவளிச் செலவு குறைகிறது! காலை வேளையில்... தக்காளி அறுவடையில் தீவிரமாக இருந்த மகேஸ்வரனை சந்தித்தோம். "கிணத்துப் பாசனத்தோட மொத்தம் ஏழு ஏக்கர் இருக்கு. நல்ல வளமான செம்மண் பூமிங்க இது. எதைப் போட்டாலும் ‘நச்’சுனு விளையுற மண். மொத்தத்துலயும் தென்னங்கன்னு வெச்சு உட்டுட்டேன். இடையில... பீட்ரூட், வெங்காயம், தக்காளினு மாத்தி மாத்தி வெள்ளாமை வெச்சுக்கிட்டு இருக்கேன். ஒரு ஏக்கர்ல போட்டிருந்த தக்காளியில இப்போ முக்காவாசி அறுவடை முடிஞ்சு இருக்கு. இன்னொரு ஏக்கர்ல அடுத்த போகத்துக்கு தக்காளி தயாரா இருக்கு. வீரிய ரக தக்காளின்றதால இதுக்குப் பட்டமெல்லாம் கிடையாது. வருஷமெல்லாம் வருமானம்தான். உரம், பூச்சிமருந்துனு ஏகப்பட்ட செலவாகிட்டு இருந்துச்சு. முட்டுவளிச் செலவைக் குறைக்க வழி தேடிக்கிட்டு இருந்தப்போதான், மண்புழு உரம், வேம்பு மருந்துனு சில விஷயங்கள பத்தி ஒருத்தர் சொல்லிக் கொடுத்தாரு. ஒரு போகம் அப்படிப் பண்ணிப் பாப்போம்... சரியா வந்துச்சுனா, அடுத்தடுத்து அதேமாதிரி பண்ணுவோம். இல்லாட்டி ரசாயனத்துக்கே மாறிடுவோம்னு நினைச்சுதான் தைரியமா இறங்கினேன். ஒரு பிரச்னையும் இல்ல. நல்லாவே மகசூல் வந்திருக்கு. மத்தபடி இயற்கை விவசாயம் பத்தியெல்லாம் எனக்கு பெரிசா ஒண்ணும் தெரியாதுங்க’’ என்றவர், தான் ஒரு ஏக்கரில் சாகுபடி செய்த விவரங்களைச் சொன்னார். அதைப் பாடமாகத் தொகுத்திருக்கிறோம். உரமெல்லாம் தேவையேயில்லை! "தக்காளி 150 நாள் (5 மாதம்) பயிர். சித்திரை மாதத்தில் நிலத்தை இரண்டு முறை டிராக்டர் மூலம் கோடை உழவு செய்ய வேண்டும். 15 நாள் நிலத்தை ஆற போட்டு, 2 டிராக்டர் தொழுவுரம், 1 டன் கோழி எரு ஆகியவற்றை அடியுரமாக நிலத்தில் இறைத்து, பார் பிடித்து, 8 அடி அகலம் 10 அடி நீளத்துக்கு பாத்தி அமைத்து, தென்னைக்கு அமைத்திருக்கும் வாய்க்கால்களோடு இணைக்க வேண்டும். ஒரு முறை நீர் பாய்ச்சி, பாத்திகளில் நீர் சுண்டிய பின்பு தக்காளி நாற்றுகளை வரிசைக்கு வரிசை, செடிக்குச் செடி 2 அடி இடைவெளி இருக்குமாறு ஈர நடவு செய்ய வேண்டும். ஏக்கருக்கு 10 ஆயிரம் நாற்றுகள் தேவைப்படும். 20 முதல் 25 நாட்கள் வயதுள்ள தரமான வீரிய ரக நாற்றுகளாகத் தேர்வு செய்து கொள்ள வேண்டியது அவசியம். தொடர்ந்து வாரம் இருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். உரமெல்லாம் தேவை-யேயில்லை! 150 நாளில், 15 டன்! 20 மற்றும் 35\ம் நாட்களில் களை எடுக்க வேண்டும். ஒவ்வொரு முறை களை எடுக்கும் போதும், ஒவ்வொரு செடிக்கருகிலும் ஒரு கைப்பிடி (20 கிராம்) அளவுக்கு மண்புழு உரத்தை வைத்து நீர் பாய்ச்ச வேண்டும். இதற்கு 200 கிலோ மண்புழு உரம் தேவைப்படும். இலைமுரணை, வெள்ளை ஈக்கள் மற்றும் காய்ப்புழு ஆகியவை தாக்கினால், 10 லிட்டர் தண்ணீருக்கு, 30 மில்லி வேம்பு என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். இது தவிர... வேறு உரங்களோ, பூச்சிக்கொல்லியோ தேவையே இல்லை. 65 முதல் 70 நாட்களுக்குள் காய்ப்பு எடுக்கத் தொடங்கும். காய்கள் சிவப்பு அடிக்கத் தொடங்கியவுடன் அறுவடையை ஆரம்பிக்கலாம். காய்க்க ஆரம்பித்த நாளிலிருந்து 60 முதல் 80 நாட்கள் வரை காய் பறிக்கலாம். வீரிய ரக தக்காளி என்பதால், 15 டன் வரை மகசூல் கிடைக்கும். ஏக்கருக்கு 1 லட்ச ரூபாய்! நிறைவாகப் பேசிய மகேஸ்வரன், "அறுவடை ஆரம்பிச்ச உடனே முதல் வாரத்துல ஒரு நாளைக்கு 250 கிலோ வரைக்கும் கிடைக்கும். அடுத்த ரெண்டு மூணு வாரங்கள்ல கொஞ்சம் கொஞ்சமா கூடி, ஒரு நாளைக்கு எண்ணூறு கிலோ வரைக்கும் கூட கிடைக்கும். பிறகு, படிப்படியா குறைய ஆரம்பிச்சுடும். கடைசி 20 நாள்ல... ஒரு நாளைக்கு 20 கிலோவுல இருந்து முப்பது கிலோ வரைக்கும்தான் கிடைக்கும். மொத்தமா பாக்கும்போது 15 டன்னுக்கு மேல கண்டிப்பா கிடைச்சுடும். பொள்ளாச்சி மார்க்கெட்டுக்குத்தான் அனுப்பிட்டிருக்கேன். இன்னிய நிலைமைக்கு, கிலோ 10 ரூபாய்க்கு மேல போயிக்கிட்டிருக்கு. நான் அறுவடை ஆரம்பிச்சு 1 மாசம் ஆச்சு. இதுவரைக்கும் 11 டன் எடுத்து 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செஞ்சுருக்கேன். இன்னும் இருபது இருபத்தஞ்சு நாளுக்குள்ள 4 டன் தக்காளி கிடைக்கும்னு எதிர்பாக்குறேன். எப்படிப் பாத்தாலும், அஞ்சு மாசத்துல ஏக்கருக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு மேல கண்டிப்பா கிடைக்கும்கிறது உறுதி’’ என்று சொன்னார், தன்னுடைய எதிர்பார்ப்பு நிறைவேறிய மகிழ்ச்சியில்! |
Saturday, August 7, 2010
இயற்கைத் தக்காளி தரும் இனிப்பான லாபம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment