Saturday, August 7, 2010

தென்னைக்கு நடுவே ஆயுள் முழுவதும் ஊடுபயிர்

புதுமை
ஜி.பழனிச்சாமி

தென்னைக்கு நடுவே ஆயுள் முழுவதும் ஊடுபயிர்...

இரட்டிப்பு வருமானம் தரும் இரட்டை நடவு முறை !

"வழக்கமா தென்னைக்கு இடையில் நாலு வருஷத்துக்குதான் ஊடுபயிர் செய்ய முடியும். ஆனா, இரட்டை நடவு முறையில் தென்னையை நடவு செய்தா... ஆயுசுக்கும் ஊடுபயிர் செய்யலாம்" என்று புதுவித யுக்தி ஒன்றை உயர்த்திப் பிடிக்கிறார் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகேயிருக்கும் போடிபட்டி கிராமத்தைச் சேர்ந்த எம்.பி.பி.எஸ். மருத்துவரான ஆர். பாலசுப்பிரமணியன்.

இரட்டை நடவு முறையில் தென்னை சாகுபடி செய்திருக்கும் இவர்... ஊடுபயிராக குமிழ், வேம்பு, மகோகனி, வேங்கை என மரப்பயிர்களை பயிர் செய்திருப்பதால், இவருடைய தோட்டம், ஒரு வனமாகவே காட்சியளிக்கிறது. அந்தப் பசுமைப் பந்தலுக்கு அடியில் நின்று கொண்டு நம்மிடம் பேச ஆரம்பித்தார் பாலசுப்பிரமணியன்.

வழிகாட்டிய வரப்புத் தென்னை!

"இது திருமூர்த்தி அணை மூலமா பாசனம் செய்ற பகுதி. 'ஏழு குளபாசனம்'னு (ஷிணிக்ஷிணிழி ஜிகிழிரி) சொல்லுவாங்க இந்தப் பகுதியை. எப்பவும் தண்ணிக்குப் பஞ்சமே இருக்காது. ஒரு காலத்துல கரும்பும், நெல்லும்தான் இங்க முக்கிய பயிரா இருந்துச்சு. இப்ப 60% தென்னை விவசாயம்தான் நடக்குது.

எங்களுக்குக் கிணற்றுப் பாசனத்துல 25 ஏக்கர் நிலமிருக்கு. அதுல ஏழு ஏக்கர்ல மட்டும் சோதனை முயற்சியா இரட்டை நடவு முறையை செயல்படுத்தினேன். என்னோட நண்பரும் நானும் சேர்ந்து தென்னை நடவு முறைகளைப் பத்தி தொடர்ந்து ஆராய்ச்சி அடிப்படையில பேசிக்கிட்டிருப்போம். 'அந்தக் காலத்திலயெல்லாம் வரப்புல மட்டும்தானே தென்னையைப் பயிரிட்டாங்க. அதுவும் நெருக்கமா பயிரிட்டு லாபம் பார்த்தாங்க. அதையே கொஞ்சம் மாத்தி யோசிச்சி நடவு செய்தா என்ன?' இப்படியே ரெண்டு பேரும் பேசிட்டிருப்போம். அதோட பலனா கிடைச்சதுதான் தென்னையில இரட்டை நடவு முறை. இதை ‘கிராஸ்’ நடவு முறைனும் சொல்லலாம்.

வளர்த்தெடுக்கும் ஜீரோ பட்ஜெட்!

என் தோட்டத்துல இப்படி நடவு செய்து ஆறு வருஷமாச்சு. வழக்கமான முறையில நடற தென்னை மாதிரியே, இந்த மரங்களும் எந்தப் பிரச்னையும் இல்லாம நல்லா வளர்ந்திருக்கு. நல்லாவும் காய்ச்சுக்கிட்டு இருக்கு. இதேபோல இந்தப் பகுதியில ரெண்டு மூணு பேரு செய்திருக்காங்க. நல்லபடியா மகசூலும் பார்க்கறாங்க" என்று முன்னுரை கொடுத்தவர்,

"ஆரம்பத்துல சாதாரண முறையில விவசாயம் செய்துகிட்டிருந்த நான், பசுமை விகடனைப் படிக்க ஆரம்பிச்ச பிறகு, முழுக்க ஜீரோ பட்ஜெட் முறை விவசாயத்துக்கு மாறிட்டேன். நாட்டுமாடு ஒண்ணை வாங்கிக் கட்டிட்டேன். அது கொடுக்கற சாணம், கோமூத்திரம் இதையெல்லாம் பயன்படுத்தி ஜீவாமிர்தம் தயாரிக்கிறேன். இதைத் தவிர, மூடாக்கும் போடறேன். இதெல்லாம் சேர்ந்து என்னோட தோட்டத்து பயிருங்களை நல்லாவே வளர்த்தெடுக்குதுங்க..." என்று சொல்லிவிட்டு, இரட்டை நடவு முறையைப் பற்றிய பாடத்துக்குள் புகுந்தார்.

மகசூலை பாதிக்கும் சூரிய ஒளி சிக்கல்!

வழக்கமாக ஒரு ஏக்கரில் 25 அடி இடைவெளியில், 70 தென்னங்கன்றுகளை நடுவார்கள். இப்படி நடுவதால், எல்லா மரங்களுக்கும் சூரிய ஒளி சீராகக் கிடைப்பதில்லை என்பதுதான் உண்மை. சூரியனுடைய ஒளியானது... உத்தராயணம், தட்சணாயணம் என ஆறு மாதத்துக்கு பூமியின் வட பாகத்திலும், ஆறு மாதம் தென்பாகத்திலும் மாறி மாறி வீசுவதால் ஏற்படும் பிரச்னைதான் இது. சீரான ஒளி கிடைக்காத மரங்களில் குரும்பை அதிகமாக உதிர்ந்து, மகசூலை பாதிக்கும். இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வாக இருப்பதுதான் இரட்டை நடவு முறை.

இந்த முறையில் அணி அணியாக தென்னங்கன்றுகளை நடவேண்டும். இரண்டு அணிகளுக்கு இடையே, 52 அடி இடைவெளி கிடைப்பதால், எல்லா காலங்களிலும், எல்லா மரங்களுக்கும் முழுமையான சூரிய ஒளி கிடைக்கும். இதனால் குரும்பை உதிர்வது குறைந்து நல்ல மகசூல் கிடைக்கும்.

அணிகளுக்கு இடையே 52 அடி!

ஒரு அணி தென்னையை எடுத்துக் கொண்டால்... கன்றுக்கு கன்று 12 அடி... வரிசைக்கு வரிசை 6 அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். ஒவ்வொரு கன்றும், அடுத்த வரிசை கன்றுக்கு இணையாக இல்லாமல், ஒன்று மாற்றி ஒன்றாக (ஜிக்ஜாக் முறையில்) நடவேண்டும். இதேபோல அடுத்த அணி தென்னையை நடவு செய்யவேண்டும். இந்த இரண்டு அணிகளுக்கு இடையே 52 அடி இடைவெளி இருக்கவேண்டும் (பார்க்க, படம்).

வழக்கமான முறையைப் போலவே, இந்த முறையிலும் ஏக்கருக்கு 70 மரங்களை நடவு செய்ய முடியும். அதுமட்டுமல்லாமல், 52 அடி இடைவெளி கிடைப்பதால், அந்த இடத்தில் ஊடுபயிரைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கலாம். சொல்லப்போனால்... தென்னையை ஊடுபயிர் என்றும், 52 இடைவெளி பிரதேசத்தில் பயிர் செய்வதை முக்கிய பயிர் என்றும்கூட குறிப்பிடலாம்.

இந்த முறையில் ஆண்டுக்கு 150 முதல் 180 தேங்காய் வரை கிடைக்கும். அதேசமயம், ஊடுபயிராக நாம் விளைவிக்கும் பயிரைப் பொறுத்து, தென்னையைவிட அதிகமான மகசூலைக்கூட எடுக்க முடியும்.

அலட்டல் இல்லாத கிடங்குப் பாசனம்!

பாசனத்துக்காக அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. இரண்டு அணி தென்னைகளுக்கு நடுவே நீளமான வாய்க்கால்களை (கிடங்கு) அமைக்க வேண்டும். அதாவது, ஒரு அணியிலிருக்கும் ஒரு வரிசை மரத்திலிருந்து 5 அடி தள்ளி, முக்கால் அடி ஆழம், 10 அடி அகலம் கொண்ட நீளமான வாய்க்கால்களை எடுக்க வேண்டும். பண்ணைக் கழிவுகள், துண்டுதுண்டாக வெட்டப்பட்ட தென்னை மட்டைகளை அதில் கொட்டி 10 நாட்களுக்கு ஒரு முறை இந்தக் கிடங்குகள் நிரம்பும் அளவுக்கு தண்ணீர் விட்டால் போதும். அடுத்த பத்து நாட்களில் கழிவுகள் மட்கி உரமாகிவிடும். வசதியைப் பொறுத்து, ஆண்டுக்கு இரண்டு முறை இந்தக் கிடங்குகளில் கோழி எரு, தொழுவுரம் என்று கொட்டலாம்.

இரண்டு வரிசை தென்னைக்கு இடையே உள்ள 52 அடி இடைவெளியில், இயற்கையாக வளரும் செடி, கொடிகளை எதுவும் செய்யாமல் உயிர்மூடாக்க£க விட்டுவிட்டால்... மண்

தானே வளமாகிவிடும். மாதம் ஒரு தடவை தண்ணீரில் ஜீவாமிர்தத்தைக் கலந்து விடவேண்டும். இதன் மூலம் ஈரியோபைட்

சிலந்தித் தாக்குதலை வெகுவாகக் குறைக்க முடியும்.

"மரம்கிறது, பேங்க்ல போட்ட பணம்!"

தென்னை நடவு முறை பாடத்தை முடித்த பாலசுப்பிரமணியன், "ஊடுபயிரா கரும்பு, வாழை, காய்கறிகளை சாகுபடி செஞ்சுட்டிருந்தேன். இப்ப மரப்பயிரை சாகுபடி செஞ்சுருக்கேன். என் நிலத்தில இப்ப இருக்கற மகோகனி மரங்களை (8 அடி இடைவெளி) நட்டு... நாலு வருஷமாச்சு. இப்பவே ஒரு மரத்துக்கு 6,000 ரூபாய் வீதம் விலை வெச்சி வியாபாரிங்க கேட்கறாங்க. ஆனா, நான் கொடுக்கல. 12 வருஷம் கழிச்சு வித்தா... நல்ல லாபம் பார்க்கலாம்னு விட்டு வெச்சிருக்கேன். அதுபோக, மரப்பயிர் என்கிறது பேங்க்ல போட்டு வெச்ச பணம் மாதிரிங்கறதையும் மறந்துடக்கூடாது.

ஏழு ஏக்கர்லயும் சேர்த்து மகோகனி-200, நாட்டுவேம்பு-80, வேங்கை-50, பென்சில் சவுக்கு-50 பாக்கு-200... இப்படி பல வகையான மரங்களை வரிசையா நடவு செஞ்சிருக்கேன்.

இதுதான் ஜீரோ பட்ஜெட்!

முதல் மூணு வருஷம் மட்டும் இதுக்கெல்லாம் வாய்க்கால் மூலமா தண்ணி பாய்ச்சினேன். இப்ப அதையும் செய்றதில்லை. வருஷம் ரெண்டு தரம் மரங்களைக் கவாத்து பண்ணி, கிளைகளை அப்படியே நிலத்துல போட்டு மக்க வெச்சிடறேன். இதன் மூலமா மண்ணுல ஈரப்பதம் தங்கியிருக்கறதோட... அந்தக் கழிவுகளே உரமாவும் மாறிடுது. கையில இருந்து காசு செலவாகறதுக்கு வேலையே இல்லை. முழுக்க முழுக்க ஜீரோ பட்ஜெட்தான்" என்றார் மகிழ்ச்சியாக!

வனத்துக்கே சொட்டுநீர்!

'அமராவதி மரம் வளர்ப்போர் சங்கம்' என்று ஒரு அமைப்பு உடுமலைப்பேட்டையில் செயல்பட்டு வருகிறது. டென்மார்க் நாட்டின் நிதி உதவியோடு செயல்படும் இந்த அமைப்பின் நோக்கம் அந்தப் பகுதியில் அதிக வனப்பரப்பை உருவாக்க வேண்டும் என்பதுதான். அதற்கு துணைத் தலைவராக இருக்கிறார் பாலசுப்பிரமணியன். அந்த சங்கத்திடம் எல்லாவிதமான மரக்கன்றுகளும் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இதைப் பற்றி குறிப்பிட்டவர்,

''நானும்கூட குமிழ், வேங்கை, நல்லாரை, காயா, சந்தனம், தேக்குனு பல வகை கன்னுகளை அங்கிருந்துதான் வாங்கி, முக்கால் ஏக்கர்ல நட்டு, ஒரு வனத்தை உருவாக்கி வெச்சிருக்கேன். அந்த மரங்களுக்கு சொட்டுநீர்ப் பாசனமும் போட்டிருக்கேன். ஏழு வருஷமான மரங்கள் குளுமை குடை பிடிச்சி நிக்கறத வந்து பாருங்க'' என்றவர், அந்த சின்னஞ்சிறிய சோலைக்குள் நம்மை அழைத்துச் சென்று காட்டினார். அசத்தலாக நின்றுகொண்டிருந்தன அந்த வனத்து மரங்கள்!

ஈரியோபைட் சிலந்தி... போயே போச்சு!

"தென்னையில ஈரியோபைட் சிலந்தியோட தொல்லை தொடர்ந்துகிட்டுதான் இருக்குது. ரசாயனம் பயன்படுத்தற மற்ற தென்னையில் 65% அளவுக்கு ஈரியோபைட் தாக்குதல் இருக்கு. அந்தக் காய்களைப் பார்த்தீங்கனா, பெரும்பாலும் சொறிசொறியாவே இருக்கும். இதோ பாருங்க, என்னோட தோப்புல ஈரியோபைட் சிலந்தி 95% அளவுக்கு குறைஞ்சிட்டதால, முழுக்கவே காய் நல்லா இருக்குது. எல்லாம் ஜீரோ பட்ஜெட் மகிமை" என்றபடியே தன் தோட்டத்து காய்களைக் காட்டி மகிழ்ந்தார் பாலசுப்பிரமணியன்.

No comments:

Post a Comment