Saturday, August 28, 2010

அன்னை தெரசா


ந.வினோத்குமார்

அன்னை தெரசா... அன்புக்காக ஏங்கியவர்களை அரவணைத்துக்கொண்டவர்.

பிரார்த்தித்த உதடுகளைவிட பணிவிடை செய்யும் விரல்களுக்குச் சொந்தக்காரர். தொழுநோயாளியையும் தெய்வமாகத் தொழுதவர். பிச்சையாக எச்சிலையும் ஏந்தியவர்.

ஆகஸ்ட் 26, 1910 பிறப்பு. செப்டம்பர் 5, 1997 இறப்பு. இடைப்பட்ட காலங்கள் முழுக்க மானுட சேவை மட்டுமே வாழ்க்கைப் பிடிப்பு!

பிறந்த தேதி ஆகஸ்ட் 26 எனினும், அவருக்கு ஞானஸ்நானம் செய்யப்பட்ட ஆகஸ்ட் 27-ம் தேதியைத்தான் தன்னுடைய உண்மையான பிறந்த நாள் என்பார்!

இயற்பெயர், ஆக்னஸ் கோன்ஸா பொஜாக்சு. அப்பா, நிகோலோ பொஜாக்சு. அம்மா, ட்ரானாஃபைல் பெர்னாய். அக்கா, அண்ணன் என்று அன்னை தெரசாவுடன் பிறந்த வர்கள் இருவர். வீட்டில் இவரை ஆக்னஸ் என்றே அழைப்பார்கள். ஆக்னஸ் என்றால், அல்பேனிய மொழியில் 'ரோஜாவின் அரும்பு' என்று அர்த்தம்!

தன் 18-வது வயதில் 'லோரெட்டோ சகோதரி'களின் மிஷனரியில் சேர்ந்தார். அதற்குப் பிறகு, தன் வாழ்க்கையின் இறுதி வரைக்கும் அவரின் தாய் மற்றும் சகோதரியைப் பார்க்கவே இல்லை!

இந்தியாவுக்கு வருகை தந்தது 1929-ல். கன்னியாஸ்திரீயாகப் பயிற்சி பெற்றது டார்ஜிலிங்கில். மே 24, 1931 அன்று கன்னியாஸ்திரீ ஆனார். அருட்கன்னியாகப் பலருக்குச் சேவை செய்து, தன் 24 வயதில் காச நோயால் இறந்து, பிரான்ஸ் தேசத்தையே துயரத்தில் ஆழ்த்திய தெரசாமார்ட்டினின் நினைவாகவைத்துக் கொண்ட பெயர்தான் 'தெரசா.'

பிறப்பில் அல்பேனியர். குடியுரிமையில் இந்தியர். நம்பிக்கையில் கத்தோலிக்கர். சேவையில் உலகத்துக்குப் பொதுவானவர். அன்பில், இயேசுவுக்கு உரித்தானவர். இப்படித்தான் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்வார்!

டிசம்பர் 9, 1948 அன்று கொல்கத்தா வந்தார். 'உள்ளிருந்து வந்த ஓர் அழைப்பு' என்று கொல்கத்தாவுக்கு வந்ததைப்பற்றிக் குறிப்பிடுவார்!

நோயின் பிடியில் இறந்துகொண்டு இருக்கும் ஆதரவற்றவர்களுக்கு 'காளிகட் இல்லம்' என்பதை ஆரம்பித்தார். பின்னாளில் 'நிர்மல் ஹிருதய்' என்று பெயர் மாற்றினார். 'அன்னை இல்லம்' என்றுதான் அங்கு உள்ள நோயாளிகள் குறிப்பிடுகிறார்கள்!

தொழுநோயாளிகளுக்காக இவர் ஆரம்பித்தது 'சாந்தி நகர்' நல வாழ்வு மையம். ஆதரவற்ற சிறார்களுக்காக, 'நிர்மலா சிசு பவன்' என்ற இல்லத்தை ஆரம்பித்தார் அன்னை!

ஆசிரியை, செவிலித் தாய்... இவை இரண்டும் அன்னைக்கு மிகப் பிடித்தமான பணிகள். இறுதி வரைக்கும் இந்த இரண்டு பணிகளையும் கைவிடவில்லை!

அக்டோபர் 7, 1950-ல் அன்னை தெரசா தொடங் கிய 'மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி'க்கு அனுமதி அளித்தது வாட்டிகன். தற்போது 5,450 பேருடன், 123 நாடு களில், 610 மிஷனரிகள் இயங்கி வருகின்றன!

1992-ல் நவின் சாவ்லா எழுதிய அன்னை தெரசா பற்றிய புத்தகம்தான் இன்று வரை அதிகாரபூர்வ வாழ்க்கைச் சரித்திரமாக இருக்கிறது. 14 இந்திய மொழி களில் இது மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது!

பத்மஸ்ரீ, ஜவஹர்லால் நேரு விருது, பாரத ரத்னா, ராமன் மகசேசே, கென்னடி சர்வதேச விருது, யுனெஸ்கோ அமைதி விருது, 23-ம் போப் ஜான் அமைதி விருது, டெர்ரிஸ் பாசேம் விருது, பால்சன் பரிசு, ஆல்பர்ட் சுவிட்சர் சர்வதேசப் பரிசு... இவற்றுடன் கிழக்கிலும் மேற்கிலும் பல்வேறு பல்கலைக்கழகங்கள் அளித்த கௌரவ டாக்டர் பட்டங்கள்... எல்லாவற்றுக்கும் மேலாக நோபல் பரிசு. இவை அன்னை பெற்ற 50-க்கும் மேலான விருதுகளில் முக்கியமான சில விருதுகள்!

அன்னையின் நூற்றாண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 26, 2010-ல் அன்னையின் பெயரால் 'மதர் எக்ஸ்பிரஸ்' என்று புதிய ரயிலை அறிமுகப்படுத்தப்போகிறது, நமது ரயில்வே துறை அமைச்சகம்!

27 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இவரைப்பற்றி ஆங்கில மொழியில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளிவந்து இருக்கின்றன. 15-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வந்திருக்கின்றன!

1964-ல் இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் வந்த போப்பாண்டவருக்கு அன்றைய அமெரிக்க அதிபர் லிண்டன் ஜான்சன் விலை உயர்ந்த கான்டினென்டல் காரைப் பரிசாக அனுப்பிவைத்தார். அதை அன்னை தெரசாவுக்குப் பரிசாக வழங்கினார் போப். அந்தக் காரை ஏலத்தில்விட்டு, அதில் வந்த தொகை முழுவதையும் அறக்கட்டளைக்கான கணக்கில் சேர்த்தார் அன்னை!

1948-ல் இருந்து நீலக் கறையிடப்பட்ட சாதாரண வெண் புடவைதான் இவர் உடுத்திய உடை. இறுதி வரைக்கும் வேறு உடைகளை உடுத்தியதே இல்லை!

'சேவை என்ற பெயரில் மதமாற்றம் செய்தார்' என்பது இவர் மீது வைக்கப்படும் பரவலான குற்றச்சாட்டு. இது இந்தியாவில். 'கருக்கலைப்பு உலக சமாதானத்தை அழிக்கும் மிகப் பெரிய காரணி' என்று சொன்னவர் என இவர் மீது வைக்கப்படுகிறது விமர்சனம். இது உலக நாடுகளில்!

நோபல் பரிசு பெறுபவர்களுக்காகக் கொடுக்கப்படும் பாரம்பரிய விழா விருந்தை மறுத்த அன்னை, அதற்கு செலவழிக்கப்படும் தொகையான 1,92,000 டாலர்களை இந்தியாவில் உள்ள ஏழைகளுக்குக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார்!

'சம்திங் ப்யூட்டிஃபுல் ஃபார் காட்' என்ற படம் இவரின் புகழை உயர்த்தியது. 'மதர் தெரஸா. டைம் ஃபார் சேஞ்ச்' இவர் புகழை அசைத்துப் பார்த்த படம்!

தன்னைச் சார்ந்தோருக்கும், தன் அறக்கட்டளை களில் இருப்போருக்கும், கிறிஸ்துவ மத குருமார்களுக்கும், இன்ன பிற நண்பர்களுக்கும், 66 ஆண்டுகாலமாகத் தான் எழுதிய கடிதங்களை அழித்துவிடச் சொன்னார். அதற்கு இவர் சொன்ன காரணம், 'மக்கள் இந்தக் கடிதங்களை அறிய வரும் பட்சத்தில், இயேசுவைவிட என்னை மேலாக எண்ணிக்கொள்வார்கள்.' இவர் மறைவுக்குப் பிறகு, இவர் எழுதிய கடிதங்கள் தொகுக் கப்பட்டு 'மதர் தெரசா - கம் பி மை லைட்' என்ற பெயரில் வெளிவந்தது!

அக்டோபர் 19, 2003-ல் இவருக்கு 'ஆசீர்வதிக்கப்பட்டவர்' என்ற பட்டம் வழங்கப்பட்டது. அவர் 'புனிதர்' பட்டம் பெற இரண்டாவது அற்புதம் ஒன்று நிகழ்த்தப் பெற வேண்டும்!

'ஒவ்வொரு மனிதரிடத்திலும் நான் கடவுளைக் காண்கிறேன்; ஒரு தொழுநோயாளியைத் தொடும்போது இறைவனையே தொடுவதுபோல் உணர்கிறேன்' என்பது இவரின் புகழ் பெற்ற வாசகம்!

சகோதரி சுபாஷினி என்பவர் அன்னையின் முதல் சிஷ்யை. அன்னைக்குப் பின் அறக்கட்டளைப் பணிகளை மேற்கொள்ள அன்னையால் தேர்ந் தெடுக்கப்பட்டவர் சகோதரி நிர்மலா!

ஒரு கூட்டத்தில், 'அன்னை தெரசாவுக்குப் பின் என்ன?' என்று ஒரு பெண்மணி கேட்க, அதற்கு அவர் தந்த பதில், 'தெரசாவுக்குப் பின் மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி!'

No comments:

Post a Comment