Sunday, April 25, 2010

இயற்கை விவசாயத்தில்... இன்னுமொரு சாதனை!

ஏக்கருக்கு 74 மூட்டை!
இயற்கை விவசாயத்தில்... இன்னுமொரு சாதனை!

யற்கை வேளாண்மை குறித்த விழிப்பு உணர்வு, தமிழகத்தில் பெருகி வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்தாலும், 'இயற்கை வேளாண்மை முறையில் பயிரிட்டால், மகசூல் குறைந்து விடுமோ' என்ற அச்சம் மட்டும் விவசாயிகளிடம் இருந்து முழுமையாக நீங்கியபாடில்லை. இந்நிலையில், 'இந்த அச்சம் தேவையற்றது' என்பதை, கிச்சடிச் சம்பா நெல் சாகுபடியில் ஏக்கருக்கு 74 மூட்டை மகசூல் எடுத்து நிருபித்திருக்கிறார் திருநெல்வேலி, என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த இயற்கை விவசாயி கர்னல். தேவதாஸ். 'அங்கக வேளாண்மையில் மாநிலத்திலேயே அதிக மகசூல் எடுத்தவர்' என்று பாராட்டி, இவருக்கு முதல் பரிசை வழங்கியிருக்கிறது தமிழக வேளாண்மைத் துறை!

வாழ்த்துகளைச் சொன்னபடி சந்தித்தபோது, புன்னகை தவழ நம்மிடம் பேசினார் கர்னல்.தேவதாஸ். ''அடிப்படையில் நான் ஒரு இன்ஜினீயர். ரெண்டு முதுகலைப் பட்டங்களை வாங்கின நான், தமிழக பொதுப்பணித் துறையில வேலை பார்த்தேன். பிறகு, இந்திய ராணுவத்துல சேர்ந்து கர்னல் பொறுப்பு வரைக்கும் உயர்ந்தேன். பிறகு, விருப்ப ஓய்வு வாங்கிட்டு வந்து, கொஞ்ச நிலத்தை வாங்கி விவசாயம் செய்ய ஆரம்பிச்சுட்டேன்.

2007-ம் வருஷம் சென்னையில தமிழக அரசு நடத்தின விவசாயக் கண்காட்சியில கலந்துகிட்ட பிறகுதான், இயற்கை விவசாயத்தைப் பத்தியும், பசுமை விகடன் பத்தியும் தெரிய வந்துச்சு. அதுக்குப் பிறகு தொடர்ந்து பசுமை விகடன் படிக்க ஆரம்பிச்சேன். இயற்கை விவசாயத்தைப் பத்தி சுபாஷ் பாலேக்கர் சொல்ற கருத்துக்களைப் படிச்சதும், ரொம்ப ஈடுபாடு வந்துடுச்சு. பிறகு 'ஜீரோ பட்ஜெட்' பயிற்சி வகுப்புகள்ல கலந்துக்கிட்டு, ஜீரோ பட்ஜெட் முறை விவசாயத்துக்கு மாறிட்டேன். போன வருஷமே 'அங்கக வேளாண்மை விவசாயி'னு முறைப்படி அரசாங்கத்துக்கிட்ட பதிவும் செஞ்சுட்டேன்.

தொடர்ந்து, காய்கறி உள்பட நிறைய பயிர்களை இயற்கை முறையில பண்ணிக்கிட்டிருக்கேன். அதன் மூலமா அற்புதமான விளைச்சல் கிடைக்குது. இந்த விஷயத்தை விவசாய அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்னு எல்லார்கிட்டேயும் சொன்னேன். ஆச்சரியப்பட்டுப் போன மாவட்ட ஆட்சியர் ஜெயராமன், உடனடியா என்னோட பண்ணையிலயே இயற்கை விவசாயக் கருத்தரங்கம் நடத்த ஏற்பாடு செய்ததோடு, உதவி கலெக்டரையும் அனுப்பி வெச்சார். நான் மேற்கொண்டிருக்கற இயற்கை விவசாயத்தை நேர்ல பார்த்துத் தெரிஞ்சுக்க மாவட்ட வேளாண்மைப் பயிற்சி அரங்கில் இருந்து ரெண்டு குழுக்கள் வந்துட்டு போச்சு. பிறகு, உழவர் சந்தையில இயற்கைக் காய்கறிகளை விற்பனை செய்றதுக்காக ஒரு கடையையும் கொடுத்தாங்க. இதெல்லாமே, நான் நேசிக்கிற இயற்கை விவசாயத்துக்குக் கிடைச்ச மரியாதை'' என்று சந்தோஷம் பொங்கச் சொன்னவர், தொடர்ந்தார்.

அரிசியா வித்தாத்தான் அதிக லாபம்!

''போன வருஷம் பிசான பருவத்துல (நவம்பர் முதல் பிப்ரவரி வரை) பத்து ஏக்கர் நிலத்துல 'கிச்சடிச் சம்பா' பயிரிட்டிருந்தேன். அதுதான் அமோக மகசூலை அள்ளிக்கொடுத்து, முதல் பரிசையும் வாங்கிக் கொடுத்திருக்கு. ஒற்றை நாற்று முறையில சாகுபடி செய்யணும்னு நெனச்சிருந்தேன் ஆனா, நடவு நேரத்துல ஆட்கள் கிடைக்கமாட்டாங்கனு, வழக்கமான முறையிலயே நட்டுட்டேன். ஒற்றை நாற்று முறையில சாகுபடி செஞ்சுருந்தா இன்னும் அதிக மகசூல் கிடைச்சிருக்கும்.

நெல்லை அப்படியே விக்காம, அரிசியா மாத்தித்தான் விற்பனை செய்றது என்னோட வழக்கம். நெல்லை அரிசியா மாத்தும்போது மொத்த நெல்லுல 60% அரிசி கிடைக்கும். அந்த அரிசியை உழவர் சந்தையில இருக்கற கடையில வெச்சு, கிலோ 40 ரூபாய்னு விற்பனை செய்றேன். அதனால எனக்குக் கூடுதலா லாபம் கிடைக்குது'' என்று சொன்ன கர்னல். தேவதாஸ், பரிசு பெறும் அளவுக்கு அதிக மகசூல் பெற்றுத் தந்த தன்னுடைய சாகுபடித் தொழில்நுட்பம் பற்றி பாடமே நடத்தினார்.

விதைநேர்த்தி அவசியம்!

''நிலத்தை உழவு செய்து தானிய வகைகள், எண்ணெய் வித்துக்கள், பயறு வகைகள், கொளுஞ்சி, சணப்பு விதைகளைக் கலந்து ஏக்கருக்கு இருபத்தைந்து கிலோ வீதம் விதைக்க வேண்டும். அவை பூக்கும் சமயத்தில் அப்படியே மடக்கி உழுது, ஆட்டுக்கிடை போட்டு, மறுபடியும் உழவு செய்ய வேண்டும். ஏக்கருக்கு நூறு கிலோ கொம்புத் தூள், நூறு கிலோ மட்கிய தொழுவுரம், பத்து கிலோ கனஜீவாமிர்தம், ஆகியவற்றை அடி உரமாக போட்டு, தொழி கலக்க வேண்டும். 20 கிலோ நெல் விதையை பீஜாமிர்தத்தில் விதைநேர்த்தி செய்து நாற்றுப் பாவ வேண்டும். நாற்றுகளைப் பதினைந்து நாளில் பறித்து, வழக்கமான பாணியில் நடவு செய்ய வேண்டும்.

ஏக்கருக்கு 74 மூட்டை!

நடவு செய்த 15, 30, 45 மற்றும் 60-ம் நாட்களில் ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசனத் தண்ணீரில் கலந்து கொடுக்க வேண்டும். அதோடு, 15 நாட்களுக்கு ஒரு முறை 5 லிட்டர் ஜீவாமிர்தத்தை விசைத் தெளிப்பான் மூலமாக தெளிக்க வேண்டும். மொத்தம் மூன்று முறை இப்படி தெளித்தால் போதும். முதல் தெளிப்பில்

100 லிட்டர், இரண்டாவது தெளிப்பில் 150 லிட்டர், மூன்றாவது தெளிப்பின்போது 200 லிட்டர் என்கிற அளவில் தண்ணீர் எடுத்துக் கொண்டு, அதில் ஜீவாமிர்தத்தைக் கலந்து தெளிக்கவேண்டும். இப்படிச் செய்தால் நோய்த் தாக்குதலே சுத்தமாக இருக்காது.

பயிர், பொதிப் பருவத்தை (பால் பருவம்) அடைந்ததும், இரண்டரை லிட்டர் புளித்த மோர், 250 கிராம் சூடோமோனஸ் இரண்டையும் 100 லிட்டர் தண்ணீரில் கலந்து விசைத் தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். பின்னர் 'காய்ச்சலும் பாய்ச்சலுமாக' பாசனம் செய்தால் போதும். இடையில் இரண்டு முறை கைக் களை மட்டும் எடுக்க வேண்டியிருக்கும். இதையெல்லாம் செய்தால்... பயிரின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும்.

சாகுபடித் தொழில்நுட்பங்களை முடித்த தேவதாஸ், ''என்னோட வயல்ல இருக்கற நெல்லு பயிருல மணி பிடிக்கும் தன்மையைப் பார்த்த வேளாண்மை அதிகாரிங்க, 'அங்கக பயிர் விளைச்சல் போட்டியில கலந்துக்கோங்க'னு சொன்னாங்க. அதனால் நானும் கலந்துகிட்டேன். ஏப்ரல் 3-ம் தேதியன்னிக்கு அரசு அதிகாரிங்க, அரசு சாராத பிரதிநிதிங்கனு எல்லாரும் கூடி நிற்க, கிச்சடிச் சம்பா அறுவடை நடந்துது. ஒரு ஹெக்டேருக்கு 11,215 கிலோ மகசூல் கிடைச்சுது. ஏக்கருக்கு 4,486 கிலோ! மூட்டையா கணக்குப் போட்டா... ஏக்கருக்கு 74 மூட்டை (60 கிலோ மூட்டை). இது வழக்கமான மகசூலை விட ரொம்ப ரொம்ப அதிகம்'' என்றார் சந்தோஷமாக.

சாவி நெல்லே இல்லை!

இதுகுறித்து நம்மிடம் பேசிய நெல்லை மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் தேவசகாயம், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வெள்ளைப்பாண்டி ஆகியோர், ''இயற்கை விவசாயம் செய்வது எளிமையானது மட்டுமல்லாமல், ரொம்பவே சிக்கனமானதும்கூட. ரசாயன உரங்களைப் போடுவதால் நிலத்தின் தன்மை மாறி, அடுத்தடுத்த பயிரில் மகசூல் குறைவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்பதுதான் உண்மை. ஆனால், இயற்கை விவசாயம் செய்வதால் நிலத்தை உயிர்ப்போடு வைத்திருக்க முடியும்.

இயற்கை முறையில் விவசாயம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டிய கர்னலுக்கு எங்கள் துறை மூலமாக முழுமையான ஒத்துழைப்பு தந்தோம். நடவு செய்தபோது அவர் டிரில்லர் பயன்படுத்தவில்லை. அதனால், தூர்களின் எண்ணிக்கை கொஞ்சம் குறைந்துவிட்டது. ஆனாலும்... மட்கிய உரம், பீஜாமிர்தம், ஜீவாமிர்தம் போன்றவற்றை போட்டு பயிரின் தரத்தை உயர்த்திவிட்டார். ஒவ்வொரு கதிரிலும் சராசரியாக 360 நெல் மணிகள் இருந்தபோதும், சாவி நெல்களே (பதர்) இல்லை. அதனாலதான் அவரால் இந்தச் சாதனையை செய்ய முடிந்தது.

தற்போது, அவருக்குக் கிடைத்திருக்கும் மகசூலைப் பார்த்து, அக்கம்பக்கத்து விவசாயிகள்கூட, 'நாங்களும் இனிமேல் இயற்கை விவசாயத்தை மட்டுமே செய்யப் போறோம்' என்று சொல்ல ஆரம்பித்திருப்பது, கர்னலுக்கும் அவர் நேசிக்கும் இயற்கை விவசாயத்துக்கும் கிடைத்த வெற்றி!'' என்றவர்கள்,

''வேளாண் துறை, இயற்கை விவசாயத்தின் மீது காட்டிய அக்கறைக்கு கிடைத்த வெற்றியும்கூட'' என்றார்கள் பெருமிதத்துடன்.

முத்தான மூன்று பரிசுகள்!

மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சுப்பிரமணியன் பேசும்போது, ''இயற்கையில்

74 மூட்டை என்ற சாதனை மட்டுமல்ல... செம்மை நெல் சாகுபடியில் 105 மூட்டை என்றும் சாதனை படைத்து முதல் பரிசைப் பெற்றுள்ளது திருநெல்வேலி மாவட்டம் (பார்க்க பெட்டிச் செய்தி). மக்காச் சோளத்திலும் மாநில அரசின் விருது இந்த மாவட்டத்துக்கே கிடைத்துள்ளது (இதைப் பற்றிய கட்டுரை அடுத்த இதழில் இடம்பெறும்). இப்படி முத்தாய்ப்பான மூன்று முதல் பரிசுகள் கிடைத்திருப்பது சந்தோஷமான விஷயமே! அதற்காக எங்கள் துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் களப்பணியாளர்களும் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டார்கள்.

மாவட்டத்தில் 2009- 2010-ம் ஆண்டில் மழை அளவு குறைவாக இருந்ததால், சாகுபடி பரப்பளவும் குறைந்தே இருந்தது. ஆனால், செம்மை நெல் சாகுபடி மற்றும் அங்கக வேளாண்மை முறைகளை விவசாயிகள் அதிகமாகக் கடைபிடித்ததால், வழக்கத்தை விடவும், அதிகமான நெல் உற்பத்தி இந்த மாவட்டத்தில் சாத்தியமாகியிருக்கிறது.

செம்மை நெல் சாகுபடி முறை குறித்து, மாவட்ட ஆட்சியர் ஆலோசனையின்படி அடிக்கடி கருத்தரங்கம், கண்காட்சிகள் நடத்தியதால், அதன் சாகுபடி பரப்பு 32,257 ஹெக்டேராக உயர்ந்திருக்கிறது. நடப்பு ஆண்டு கோடை நெல் சாகுபடியிலும் கூடுதல் இலக்கை எட்ட தீவிரம் காட்டி வருகிறோம்'' என்று சொன்னார்.

எல்லா மாவட்டங்களுக்கும் பரவட்டும் இந்த அக்கறை!

செம்மை நெல் சாகுபடியில் 105 மூட்டை!

தென்காசி அருகே உள்ள குமந்தாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்தான், ஒரு ஏக்கரில் 105 மூட்டைகள் அறுவடை செய்து, 'செம்மை நெல் சாகுபடி'யில் (ஒற்றை நாற்று நடவு) மாநிலத்திலேயே அதிக மகசூலுக்கான முதல் பரிசை வென்றிருப்பவர். பி.ஏ., ஆங்கில இலக்கியம் படித்திருக்கும் இவர், ஐந்து ஆண்டுகளாக நண்பர்களோடு சேர்ந்து செம்மை நெல் முறையில சாகுபடி செய்து வருகிறார்.

இரண்டு ஏக்கரில் செம்மை நெல் சாகுபடிக்காக ராதாகிருஷ்ணன் சொல்லும் தொழில்நுட்பங்கள்-

ஒரு டன் தொழுவுரம், பத்து பாக்கெட் அசோஸ்பைரில்லம், பத்து பாக்கெட் பாஸ்போ-பாக்டீரியா ஆகியவற்றை கலந்து ஒரு மாதம் செறிவூட்டி இரண்டு சென்ட் நிலத்தில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். இரண்டு கிலோ பசுந்தாள் விதை, ரைசோபியம் உயிர் உரம் ஆகியவற்றை ஆறிய அரிசிக் கஞ்சியில் கலந்து, நாற்றங்காலில் விதைக்க வேண்டும். பசுந்தாள் உரம் பூத்ததும் மடக்கி, உழவு செய்ய வேண்டும்.

பத்து நாட்களுக்குப் பிறகு, நாற்றங்காலை 5 மீட்டர் நீளம், ஒரு மீட்டர் அகலத்தில் 16 பாத்திகளாகப் பிரித்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு பாத்தியைச் சுற்றிலும் 10 செ.மீ ஆழத்துக்கு வாய்க்கால் எடுத்து, மேட்டுப்பாத்தி அமைக்க வேண்டும். தரமான 10 கிலோ ஆடுதுறை-45 நெல் விதையை, 100 கிராம் சூடோமோனசுடன் கலந்து, பத்து லிட்டர் தண்ணீரில் 14 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு, தண்ணீரில் இருந்து விதைநெல்லை எடுத்து, எட்டு மணி நேரம் ஈர சாக்கில் கட்டி வைத்தால்... விதையில் முளை கட்டும். இப்படிச் செய்து நாற்றுப்பாவிய, அடுத்த 15 நாளில் நடவு செய்யலாம்.

நடவு செய்வதற்கு 15 நாட்களுக்கு முன்பே, உயிர் உரங்கள் சேர்த்த 10 டன் தொழுவுரத்தை இட வேண்டும். கடைசி உழவுக்கு முன்பாக 100 கிலோ டி.ஏ.பி., 50 கிலோ யூரியா, 50 கிலோ பொட்டாஷ், ஆகியவற்றை அடியுரமாக இட்டு வயலை மேடு பள்ளம் இல்லாமல் சமப்படுத்த வேண்டும். அதோடு 10 கிலோ நெல் நுண்ணூட்ட உரம் இட வேண்டும்.

மார்க்கர் கருவி மூலம் 25 செ.மீ-க்கு 25 செ.மீ இடைவெளியில் சதுர முறையில், இரண்டு நாற்று வீதம் நடவேண்டும். அடுத்த 12-ம் நாளிலிருந்து பத்து நாட்களுக்கு ஒரு முறை கோனோ வீடர் கொண்டு களை எடுக்க வேண்டும். மேல் உரமாக இலை வண்ண அட்டையைப் பயன்படுத்தி யூரியா, பொட்டாஷ், வேப்பம் பிண்ணாக்கு கலவையை மூன்று முறை போட வேண்டும். ஒருங்கிணைந்தப் பயிர் பாதுகாப்பு முறையை கடைபிடித்தால் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் ரொம்ப குறைவாக இருக்கும்.

ஏக்கருக்கு 105 மூட்டை...!

தான் பயன்படுத்திய தொழில்நுட்பங்களைச் சொன்ன ராதாகிருஷ்ணன், ''இடையில 'பயோ' வளர்ச்சி ஊக்கியை இரண்டு முறை தெளிச்சேன். கடையநல்லூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் உமர் கத்தா மற்றும் களப்பணியாளர்கள் அப்பப்ப வந்து ஆலோசனை சொல்வாங்க. அதன்படியும் எல்லாத்தையும் செய்தேன். ஒரு ஹெக்டேருக்கு 15,865 கிலோ விளைச்சல் கிடைச்சதால, மாநிலத்திலேயே முதல் பரிசு கிடைச்சிருக்கு. ஏக்கருக்கு 6,346 கிலோ. 60 கிலோ மூட்டையா கணக்குப் போட்டா... 105 மூட்டை. இது வழக்கத்தைவிட இரண்டு மடங்கு அதிக மகசூல்'' என்று சொன்ன ராதாகிருஷ்ணன்,

''நான் செஞ்சுருக்கறது ரசாயன முறை விவசாயம்னாலும்... செம்மை நெல் சாகுபடிங்கறதாலதான் இத்தனை மகசூல். அதுமட்டுமில்ல... இயற்கை உரங்களையும் அதிகமா பயன்படுத்தியிருக்கேன். அதுவும்கூட இந்த பரிசு கிடைக்க ஒரு காரணம்'' என்றார் அழுத்தமாக!

படங்கள்: ஆ. வின்சென்ட் பால், எல். ராஜேந்திரன்.

கவலையில்லாத கால்நடை வளர்ப்பு!

செலவில்லாத தீவன சாகுபடி... ஆரோக்கியத்தோடு அதிக பால்...

கவலையில்லாத கால்நடை வளர்ப்பு!

தீவனச் செலவு குறையும்.
பராமரிப்பு தேவையில்லை.
எல்லா மண்ணிலும் வளரும்.

''பருவ நிலை மாறுதல்களால் விவசாயம் பொய்த்துப் போனாலும், தவறாமல் வருமானத்தைக் கொடுப்பது கால்நடை வளர்ப்புதான். என்றாலும் திட்டமிட்ட தீவன மேலாண்மையும், நோய் மேலாண்மையும் இருந்தால்தான் கால்நடை வளர்ப்பில் லாபத்தை சம்பாதிக்க முடியும்'' என்பது பெரும்பாலான கால்நடைத் துறை வல்லுநர்களின் கூற்று.

தீவனத் தோட்டத்தில் ஆதிநாராயணன்

''நூத்துக்கு நூறு சதவிகிதம் இது சரி. இதையெல்லாம் முழுக்க முழுக்க நான் தவறாம கடைபிடிக்கிறதாலதான்... என்னோட ஆடு, மாடுக எந்த நோயுமில்லாம ஆரோக்கியமா திடகாத்திரமா இருந்து, எனக்கு லாபத்தைக் கொடுத்துக்கிட்டிருக்கு" என்று உற்சாகமாகச் சொல்லும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஆதிநாராயணன், பசுந்தீவனத்துக்காக தனித்தோட்டத்தையே பராமரித்துக் கொண்டிருக்கிறார்.

பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள பாப்பா நாடு அருகிலுள்ள ஆலத்தன்குடிகாடு கிராமத்தில்தான் இருக்கிறது அந்த தீவனத் தோட்டம். மல்பெரி, வேலிமசால், சவுண்டல் (சுபாபுல்) என ஏகப்பட்ட தீவனப்பயிர்கள் தளதளவென நின்று கொண்டிருக்கின்றன அந்த இரண்டரை ஏக்கர் தோட்டத்தில்.

தீவன அறுப்பில் ஈடுபட்டிருந்த ஆதிநாராயணன், அதற்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்துவிட்டு நம்மிடம் பேசினார். ''பத்து வருஷத்துக்கு முன்ன நூறு ஆடுகளை வெச்சுருந்தேன். அதுக்காக உருவாக்குனதுதான் இந்தத் தீவனத் தோட்டம். 20 சென்ட் நிலத்துல தண்ணீர்ப்புல் (எருமைப்புல்), 230 சென்ட்டுல மல்பெரி, அதுக்கிடையில ஊடுபயிரா முயல்மசால், வேலிமசால், கலப்பைக் கோணியம், சங்குப்புஷ்பம் எல்லாம் இருக்கு. வேலி ஓரத்துல 500 சவுண்டல் மரம் இருக்கு. இந்தத் தோட்டத்தை வெச்சு பத்து பதினைஞ்சு மாடுக, கொஞ்சம் ஆடுகளை வளக்க முடியும்.

ஆறு வருஷத்துக்கு முந்தி வேலையாள் பிரச்னை வந்ததால, அஞ்சாறு ஆட்டை மட்டும் வெச்சுகிட்டு மிச்சத்தை வித்துட்டேன். இப்ப என்கிட்ட ரெண்டு கறவை மாடுகளும் அஞ்சு ஆடுகளும்தான் இருக்கு. என் ஆடு, மாடுகளுக்குப் போக மிச்சமிருக்கிற தீவனத்தை பக்கத்து விவசாயிங்களுக்கு இலவசமா கொடுத்துகிட்டிருக்கேன். கொஞ்சத்தை அப்படியே வெட்டி, தோட்டத்துல மூடாக்கா போடுறேன். அப்படியிருந்தும் மல்பெரி எக்கச்சக்கமா இருக்குறதால பட்டுப்புழுவையும் வளர்த்து கிட்டிருக்கேன்'' என்று முன்னுரை கொடுத்தவர்... தொடர்ந்தார்.

குறைவான செலவு.. அதிக ஆரோக்கியம்!

''கால்நடைகளுக்கு பசுந்தீவனத்தை அதிகமா பயன்படுத்தச் சொல்றாங்க கால்நடை மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி மையத்து அதிகாரிங்க. அதேமாதிரி நம்ம அரசு கால்நடைப் பண்ணைகள்லயும் பசுந்தீவனத்தைதான் நிறையப் பயன்படுத்துறாங்க. இது மூலமா தீவனச் செலவு குறையுறது மட்டுமில்லாம... ஆடு, மாடுக ஆரோக்கியமா வளருதுங்க. அதனாலதான் நான் தீவனங்களை உருவாக்கிட்டு பண்ணைத் தொழில்ல இறங்குனேன். ஆனா, பல இடங்கள்ல புதுசா பண்ணை வெக்கிறவங்க தீவனத்தைப் பயிர் செய்யாம, பண்ணையை ஆரம்பிச்சுட்டு, கடைசியில தீவனத்துக்கு ரொம்ப சிரமப்படுறாங்க. அதிக விலை கொடுத்து புல்லையும், அடர்தீவனத்தையும் வாங்கிப் போட்டு நட்டமாயிட்டு... ஆடு, மாடு வளர்த்தாலே நட்டம்தான்னு சொல்லிடுவாங்க.

ஒரு தடவை நட்டா வருடக்கணக்கில் பலன்!

ஆனா, ரொம்பக் கம்மியான செலவுல, அதிகமான சத்து கிடைக்கிற பசுந்தீவனங்களை விவசாயிகளே உற்பத்தி பண்ணி லாபம் சம்பாதிக்க முடியும். கொஞ்சமா நிலம் இருந்தாகூட போதும். பெருசா மெனக்கெடத் தேவையுமில்ல. ஒரு தடவை விதைச்சு விட்டாலே, ரொம்ப வருஷத்துக்கு விளைஞ்சுகிட்டே இருக்குற தீவனப் பயிரெல்லாம் கூட இருக்கு'' என்றவர் தோட்டத்தைச் சுற்றிக் காட்டினார்.

''இதோ பாருங்க... இந்த தண்ணீர்புல், முயல்மசால், வேலிமசால், கலப்பை கோணியம், சங்குப்புஷ்பம், மல்பெரி, சூபாபுல், எல்லாமே போட்டு பத்து வருஷத்துக்கு மேலாயிடுச்சு. எந்தப் பராமரிப்பும் கிடையாது. அறுக்குறது மட்டும்தான் வேலை. ஆனா, எவ்ளோ செழிப்பா இருக்கு பாருங்க. முழுக்க இயற்கை விவசாயம்தான். ரசாயன உரத்தையோ, பூச்சிக் கொல்லியையோ தொடறதே கிடையாது. என்னோட ரெண்டு மாடு, அஞ்சி ஆடுகளோட கழிவுகள்தான் இதுக்கு உரம். இதுகளைச் சாப்பிட்டுதான் என்னோட ஆடு, மாடுக திடகாத்திரமா இருக்கு'' என்றவர், தொடர்ந்தார்.

பசுந்தீவனத்தால் கெட்டியான பால்!

''ஒரு கறவை மாட்டுக்கு தினம் பசுந்தீவனம்-20 கிலோ, வைக்கோல்-10 கிலோ, அசோலா-5 கிலோ, தவிடு-3 கிலோ, கடலைப்பிண்ணாக்கு-அரை கிலோ கொடுத்துக்கிட்டிருக்கேன். ஒரு மாடு ஒரு நாளைக்கு 10 லிட்டர் பால் கொடுக்குது. நல்லா கொழகொழனு தரமா இருக்கு பால். பசுந்தீவனம் நிறைய சாப்பிடுறதால, உரிய காலத்துல சினை பிடிச்சுடுது.

தினமும் ஒரு ஆட்டுக்கு 5 கிலோ பசுந்தீவனம் கொடுக்குறேன். பசுந்தீவனத்துக்கு ஆரம்பக் கட்ட செலவு மட்டுந்தான். வேற செலவேயில்ல. ஆனா, கடைகள்ல கிலோ 12 ரூபாய்னு கிடைக்கிற அடர் தீவனத்தை எவ்வளவு வாங்கிப் போட்டாலும், செலவுதான் எகிறுமே தவிர, பால் அளவு கூடாது'' என்றவர், இரண்டரை ஏக்கரில் பசுந்தீவன சாகுபடிப் பாடத்தைத் தொடங்கினார்.

20 சென்டில் எருமைப்புல்:

''பொதுவா, எல்லா வகையான மண்ணிலும் தீவனப் பயிர்கள் நன்கு வளரும். அதனால் மண்ணைப் பற்றிய கவலையில்லை. நிலம் முழுவதும் இரண்டு சால் உழவு ஒட்டி மண்ணை நன்கு பொல பொலப்பாக்க வேண்டும். பின் பத்து டன் தொழுவுரம் போட்டு, மறுபடியும் ஒரு சால் உழவு ஒட்ட வேண்டும். 20 சென்ட்டில் ஆயிரம் தண்ணீர்ப்புல் விதைக்கரணைகளை ஊன்ற வேண்டும். இது வேகமாக மண்டும் என்பதால் குறைந்த அளவு நிலத்தில் விதைத்தாலே போதுமானது. மண்ணை நன்றாக சேறாக்கி இரண்டடி இடைவெளி விட்டு, கரணையின் கணு மண்ணில் புதையுமாறு நடவு செய்ய வேண்டும். மூன்றாவது நாளில் தண்ணீர் பாய்ச்சி அதிலிருந்து வாரம் ஒரு தண்ணீர் கொடுக்க வேண்டும்.

20-ம் நாளில் களையெடுத்து, 200 லிட்டர் நீரில், 10 கிலோ சாணம், 10 லிட்டர் மாட்டுச்சிறுநீர், அரை கிலோ மாட்டுக் கொட்டகை சகதி (சிறுநீர், சாணம் கலந்த மண்) ஆகியவற்றைக் கலந்து, ஒரு நாள் முழுக்க வைத்திருந்து, பாசன நீரில் கலந்து விடவேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை இதைத் தொடர்ந்து செய்யலாம்.

90-ம் நாளிலிருந்து இந்தப் புல்லை அறுவடை செய்யலாம். தரையிலிருந்து நாலு இஞ்ச் உயரம் விட்டு அறுவடை செய்ய வேண்டும். அதைத்தொடர்ந்து 35 நாட்கள் இந்தப் புல் வளர்ந்தால்தான் முற்றி, அதிக சத்துக்கள் கிடைக்கும். ஆகவே, 35 நாட்களுக்கு ஒரு முறைதான் அறுவடை செய்ய வேண்டும். ஒரு அறுவடைக்கு 1,000 கிலோ புல் கிடைக்கும். தேவையைப் பொறுத்து பகுதி பகுதியாகக்கூட அறுவடை செய்யலாம். ஒரு வருடம் கழித்து பதினைந்து நாளுக்கொரு முறை தண்ணீர் விட்டால் போதும். வருடம் ஒருமுறை, 'இடை உழவு' செய்தால் புது வேர்கள் விட்டு, அதிக மகசூல் கிடைக்கும்.

230 சென்டில் மல்பெரி, ஊடுபயிர்களாக வேலி மசால், முயல்மசால், கலப்பைக் கோணியம்:

5 அடி இடைவெளியில், 3 அடி அகலம், அரை அடி ஆழம் கொண்ட வாய்க்கால்களை அமைக்க வேண்டும். வாய்க்கால் தோண்டும்போது கிடைக்கும் மண்ணை இரு வாய்க்கால்களுக்கு இடையில் போட்டு, மேட்டுப்பாத்தி அமைத்துக் கொள்ள வேண்டும். வாய்க்காலின் வெளிப்புற இரு ஓரங்களிலும், கரணைக்குக் கரணை மூன்றடி இடைவெளி இருக்குமாறு மல்பெரி விதைக் கரணைகளை நட வேண்டும். கரணையில் இரண்டு கணுக்கள் மண்ணுக்குள் புதையுமாறு இருக்க வேண்டியது அவசியம். 230 சென்ட் நிலத்துக்கு 13 ஆயிரம் விதைக்கரணைகள் தேவைப்படும்.

வாய்க்கால்களுக்கு இடையில் உள்ள மேட்டுப்பாத்திகளின் மையத்தில் விதைகளை விதைப்பதற்காக அரை அங்குல ஆழத்துக்கு நீளமாக கோடு இழுக்க வேண்டும். ஒரு பாத்தியில் வேலிமசால், இன்னொரு பாத்தியில் முயல்மசால், அடுத்த பாத்தியில் கலப்பைக் கோணியம் என மாற்றி மாற்றி விதைக்க வேண்டும். ஒவ்வொரு விதையும் தலா இரண்டு கிலோ தேவைப்படும். விதைப்பதற்கு முன் ஒவ்வொரு வகை விதைகளுடனும் ஆறு கிலோ மணலைக் கலந்து சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். அதன்பின் விதைத்து உயிர்த் தண்ணீர் விட வேண்டும். மூன்று நாட்கள் கழித்து மீண்டும் ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன்பின் நிலத்தின் ஈரத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சினால் போதும்.

200 லிட்டர் நீரில், 10 கிலோ சாணம், 10 லிட்டர் மாட்டுச்சிறுநீர், அரை கிலோ மாட்டுக் கொட்டகை கோமிய சகதி (சிறுநீர், சாணம் கலந்த மண்) ஆகியவற்றைக் கலந்து ஒரு நாள் வைத்திருந்து, பாசன நீரில் கலந்துவிட வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை இதைச் செய்யலாம்.

90 நாட்களில் அனைத்துமே அறுவடைக்கு தயாராகி விடும். மல்பெரி, முயல்மசால், வேலிமசால் ஆகியவற்றை அறுவடை செய்யும் போது, தரையில் இருந்து ஒரு அடி உயரம் விட்டு அறுக்க வேண்டும். இவற்றை 40 நாள் இடைவெளி விட்டு மீண்டும் அறுக்கலாம். மல்பெரி மூலம் ஒரு ஏக்கரில் ஒரு ஆண்டில் தோராயமாக 30 முதல் 35 டன் தீவனம் கிடைக்கும். 100 அடி நீளம் கொண்ட பாத்தியில் 1 வருடத்தில் வேலி மசால் 400 கிலோவும், முயல்மசால் 300 கிலோவும், கலப்பைக் கோணியம் 400 கிலோவும் கிடைக்கும்.

உயிர் வேலியாக சவுண்டல்:

வேலி ஓரங்களில் 5 அடி இடைவெளியில் ஒரு சவுண்டல் விதையைப் போட்டு, 3-வது நாள் தண்ணீர் பாய்ச்சினால் போதும். அதன் பிறகு தண்ணீர், சாணம் எதுவுமே தேவையில்லை. தானாகவே வளர்ந்து விடும். மூன்று மாதத்திலிருந்து அறுவடை செய்யலாம். ஒரு மரத்திலிருந்து ஆண்டுக்கு 15 கிலோ தீவனம் கிடைக்கும்.''

பட்டுப்புழுவுக்கு மட்டுமல்ல, கால்நடைகளுக்கும்!

சாகுபடி பாடத்தை முடித்து, தொடர்ந்து பேசிய ஆதிநாராயணன், ''பட்டுப்புழு வளர்க்கறதுக்கு மட்டும்தான் மல்பெரினு பலரும் நினைக்கறாங்க. ஆனா, அது நல்ல கால்நடைத்தீவனம்கிறது நிறைய விவசாயிகளுக்கு தெரியறதில்ல. அதுல கொழுப்புச்சத்து நிறைய இருக்கு. இது மாதிரியான பசுந்தீவனங்களை கால்நடைகள் விரும்பிச் சாப்பிடும். சீக்கிரமா செரிமானமும் ஆயிடுது. மாடுகளுக்கு வெறும் அடர்தீவனத்தையும், புல்லையும் மட்டுமே கொடுத்தா கண்டிப்பா ஆரோக்கியமா இருக்காது. அதனாலதான் விவசாயிகள்ட்ட விழிப்பு உணர்வு கொடுக்குறதுக்காக பசுந்தீவன விதைகளையும், விதைக்கரணைகளையும் இலவசமா கொடுத்து, நேரடி இலவசப் பயிற்சியும் கொடுத்துகிட்டிருக்கேன்'' என்று தன்னுடைய சேவை மனதையும் திறந்து காட்டினார்!

ஒரு வருடம் வைத்திருக்கலாம்!

தண்ணீர்ப் புல் எனப்படும் எருமைப்புல், பெரும்பாலும் வாய்க்கால், குளங்களில்தான் மண்டிக்கிடக்கும். வருடக் கணக்கில் தண்ணீரில் மூழ்கிக் கிடந்தாலும் அழுகாது. வறட்சிக் காலங்களில் வளர்ச்சிக் குறைந்தாலும், பட்டுப் போகாது. கொஞ்சம் தண்ணீர் கிடைத்த உடனேயே வளரத் தொடங்கி விடும். நிழல், வெயில் எல்லாவற்றிலும் வரும். குளக்கரைகளில், சரிவான நிலங்களின் ஓரத்தில் வளர்த்து மண் அரிப்பை தடுக்கக்கூடியது. அறுவடை செய்த தண்ணீர்ப்புல்லைக் காய வைத்து, ஒரு வருடம் வரைகூட வைத்திருக்க முடியும். கலப்பைக் கோணியத்தையும் அதேபோல உலர வைத்து ஆறு மாதம் வரை பயன்படுத்தலாம்.

செலவு இல்லை... வரவு உண்டு

ஆச்சர்யம் சுபாஷ் பாலேக்கர் எழுதும்
தொழில்நுட்பத் தொடர்
செலவு இல்லை... வரவு உண்டு!
'சிலிர்க்க வைக்கும் ஜீரோ பட்ஜெட்!'

ஜீரோ பட்ஜெட் வேளாண்மை எனும் தேரின் முதல் சக்கரமான பீஜாமிர்தம் பற்றி கடந்த இதழில் பார்த்தோம். இரண்டாவதுச் சக்கரமான ஜீவாமிர்தம் பற்றி ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். மூன்றாவதுச் சக்கரம் 'அச்சாதனம்' என்று சொல்லப்படும் மூடாக்கு. அதைப் பற்றி இப்போது பார்ப்போம்.

நம்முடைய வயலில் அல்லது பண்ணையில் அற்புத விளைச்சல் கிடைக்கவேண்டுமென்றால், நிலத்தில் நாட்டு மண்புழுக்களும், நுண்ணுயிரிகளும் பெருகி, அவை வாழ்வதற்கான நுண்ணியத் தட்பவெப்ப நிலை நிலவ வேண்டும். அதாவது மண்ணின் உள்ளும் வெளியிலும் நாம் உருவாக்கும் தனிச்சிறப்பான பயிருக்கும் மண்ணுக்கும் பொருந்திய சூழ்நிலையே நுண்ணியத் தட்பவெப்ப நிலை.

தோட்டத்தில் நிலவும் காற்றோட்டம், வெப்பநிலை, ஈரப்பதம் ஆகியவையே பயிரின் வளர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கிறது. பயிர்களுக்கு இடையே எப்பொழுதும் நல்ல காற்றோட்டம் இருக்க வேண்டும். பயிர்களைப் பொறுத்து 25 டிகிரியிலிருந்து

32 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்க வேண்டும். 65 முதல் 72% வரை காற்றில் ஈரப்பதம் இருக்க வேண்டும். சூரிய வெளிச்சம் சரியாகக் கிடைக்க வேண்டும். ஒவ்வொரு பயிருக்கும் தேவையான சூரிய வெளிச்சத்தைக் 'கேண்டில் லைட்' என்ற அளவைப் பயன்படுத்தி அளப்பார்கள். இது பயிருக்குப் பயிர் மாறுபடும்.

அதேபோல மண்ணின் உள்ளே மங்கலான வெளிச்சமும், காற்றோட்டமும் நிலவ வேண்டும். இதுதான் நுண்ணியத் தட்பவெப்ப நிலை. இதை நமது தோட்டத்துக்குக் கொண்டு வருவதற்கு ஜப்பானிலிருந்தோ அமெரிக்காவிலிருந்தோ ஏதும் உயரியத் தொழில்நுட்பத்தைத் தேட வேண்டிய அவசியமெல்லாம் இல்லை.

மண்ணினுள் வாழும் மண்புழுக்களையும், நுண்ணுயிர்களையும் வெப்பம், குளிர், பகை விலங்குகள் ஆகியவற்றிடம் இருந்து காப்பாற்றினாலே... நுண்ணியத் தட்பவெப்ப நிலையைக் கொண்டு வந்துவிட முடியும். எப்படிக் காப்பாற்றுவது என்றெல்லாம் அதிகமாக யோசிக்க வேண்டாம். மண்ணைக் காப்பாற்ற வேண்டுமானால், அதை எதையாவது கொண்டு மூட (போர்த்த) வேண்டும். அதுதான் மூடாக்கு. நிலத்தை மூடாக்கு செய்தால்தான் நுண்ணியத் தட்பவெப்ப நிலை அங்கு நிலவும். மூடாக்கில் மண் மூடாக்கு, தாள் மூடாக்கு, உயிர் மூடாக்கு என மூன்று வகைகள் உண்டு.
மண் மூடாக்கு:

நிலத்தின் மேல்மண்ணைப் பாதுகாத்து அதன் மூலம் நிலத்தைக் காப்பாற்றுவதுதான் மண்மூடாக்கு. நிலத்தில் இருந்து ஆறு அங்குல ஆழம் வரை உள்ள மேல் மண்ணில்தான் தாவரங்களின் உறிஞ்சு வேர்களும், நுண்ணுயிரிகளும் முனைப்பாகச் செயல்படுகின்றன. அதனால், இந்தப் பகுதியை மட்டும் நாம் பண்படுத்தினாலே போதுமானது. இந்த ஆழத்துக்குக் கிழே கிடங்கு வேர்கள்தான் இருக்கும். காற்றும் ஈரமும் உறிஞ்சு வேர்களுக்குத்தான் தேவையே தவிர, கிடங்கு வேர்களுக்கு அல்ல என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.

அதனால், 'உழவு செய்கிறேன் பேர்வழி' என்று எக்காரணம் கொண்டும் மேல் மண்ணைத் தலைகீழாக்கி பாழ்படுத்தி விடக்கூடாது. நிலத்தை நாம் எப்படிப் பண்படுத்தினாலும் மேல் மண் மேல்மண்ணாகவே இருக்க வேண்டும். அதற்காகத்தான் மரத்தாலானக் கருவிகள், பரம்படிக்கும் சட்டம், மண்வெட்டி போன்றவற்றை மட்டுமே பயன்படுத்தி நம் முன்னோர்கள் களைகளை அழித்து நிலத்தைச் சீர்படுத்தி வந்தார்கள்.

டிராக்டர் போன்ற கருவிகளால் உழும்போது மேல்மண் தலைகீழாக்கப்பட்டு, அந்த இயந்திரங்களின் எடையால் மண் அழுத்தப்பட்டு நுண்ணுயிர்கள் அழிந்து விடுகின்றன. தவிர, வேதி உரங்களாலும் மண் இறுகுகிறது. ஒரு சதுர அடி நிலத்தின் மண் 32 கிலோ எடையைத்தான் தாங்கும். அதற்கும் மேலான எடையால் அழுத்தப்படும்போது தானாகவே நிலத்தின் அடிப்பகுதிகள் இறுகத் தொடங்குகின்றன. அது எதிர்மறையான விளைவுகளை உருவாக்கி விடும்.

காடுகளில் யாருமே மண்ணைப் பண்படுத்துவதில்லை என்று ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். அங்கு இயற்கை முறையிலேயே மண் பதப்படுத்துதல் நடைபெறுகிறது. காட்டில் மண் அடுக்கு பல நுண்துளைகளுடன் இளக்கமாக கடல் பஞ்சைப் போல இருக்கும். தாவரங்களின் ஆணிவேர்கள், மண்புழுக்கள், எறும்புகள், நுண்ணுயிர்கள் ஆகியவைகளின் ஊடுருவல்... இவைதான் அந்த நிலத்தைப் பண்படுத்தியிருக்கின்றன. இதுதான் மண்மூடாக்கு.

நமது விவசாய நிலத்திலும் டிராக்டர் அல்லாத மரக் கலப்பையால் உழுவதன் மூலம் நிலத்தில் நன்கு மண்மூடாக்கு செய்யப்படுகிறது. இதன் மூலம், மேல்மண் பிறழாமல் நிலத்தில் சரியான ஈரப்பதமும், வெப்பமும் பராமரிக்கப்பட்டு நிலம் பண்படுத்தப்படுகிறது.

- தாக்கல் செய்வோம்
படங்கள்: மு. நியாஸ் அகமது

நிபந்தனைகளோடு டிராக்டர்!

விவசாய வேலைகளுக்கு ஆள் பற்றாக்குறை நிலவுவதால், நம் நாட்டில் இயந்திரங்களைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாத விஷயமாகத்தான் இருக்கிறது. அப்படிப்பட்டச் சூழ்நிலைகளில், கோடை உழவுக்கு மட்டும் சில விதிகளோடு டிராக்டரைப் பயன்படுத்தலாம். நிலத்தில் துளிகூட ஈரம் இல்லாத நிலையில், ஆங்கில 'வி' வடிவத் தகட்டைப் பயன்படுத்தி உழவு செய்யலாம். அதிலும் ஆழமாக உழும் கருவிகளைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

ஏரோபிளேன் ஏற வைத்த எருமை வளர்ப்பு!

ஏரோபிளேன் ஏற வைத்த எருமை வளர்ப்பு!

பால்பண்ணை, பால்மாடு என்றாலே... கலப்பினப் பசுக்கள்தான் நினைவுக்கு வரும். அந்தளவுக்கு நம் நாட்டு பாரம்பர்ய பசு மற்றும் நாட்டு எருமை ஆகியவற்றை ஓரங்கட்டி, நமக்குள் வியாபித்துக் கிடக்கின்றன வெளிநாடுகளைச் சேர்ந்த ஜெர்சி, சிந்து, ஃபிரீசிஸியன் போன்ற கலப்பின மாடுகள்! அதற்குக் காரணம்... 'இந்த வகையான மாடுகளுக்கு அதிகப் பராமரிப்புத் தேவைப்பட்டாலும், ஒரு எருமை சாப்பிடும் தீவனத்தைவிடக் குறைவாகச் சாப்பிட்டு, ஐந்து எருமை கொடுக்கும் அளவுக்கு அதிக பால் கொடுக்கும் என்பதுதான்!

இதுபோன்ற காரணங்களால் நாட்டுப் பசு மற்றும் எருமை போன்றவற்றின் வளர்ப்பு குறைந்து கொண்டே இருக்கிறது. என்றாலும், தயிர், தேநீர் போன்ற உபயோகங்களுக்குப் பலராலும் இன்றளவும் எருமைப் பால் விரும்பப்படுகிறது. எருமை, குறைவாகப் பால் கொடுத்தாலும், அதிலிருக்கும் கொழுப்புச் சத்தின் அளவு மிகவும் அதிகம் என்பதும் அந்தப் பால் விரும்பப்படுவதற்கு ஒரு காரணம். இப்படிப்பட்டோரை மனதில் வைத்து... பல கிராமங்களில் எருமை வளர்ப்பு ஓரளவுக்கு நடந்து கொண்டுதானிருக்கிறது. அந்த மாதிரியான 'எருமை வளர்க்கும்' கிராமங்களில் ஒன்று... தேனி மாவட்டம், சங்கராபுரம் அருகில் இருக்கும் வடமலைராஜபுரம்.

எருமை வளர்ப்பில் கரை கண்ட இந்த ஊர்க்காரர்களில் ஒருவரான கருப்பையா, அதைப் பற்றி இங்கே பேசுகிறார். 'நான் பெருசா ஒண்ணும் படிக்கல. அதனால எனக்கு எந்த வேலையும் கிடைக்கல. இருந்த தோட்டத்துல கொஞ்சம் விவசாயத்தைப் பாத்துக்கிட்டே விவசாயக் கூலி வேலையையும் செஞ்சுட்டுருந்தேன். அப்போவெல்லாம் கிராமங்கள்ல எல்லா வீட்டுலயும் பாலுக்காக எருமை மாடு வளப்பாங்க. அதனால நானும் ஒரு எருமை வாங்கலாம்னு ஆசைப்பட்டேன். 83\ம் வருஷம், கையில இருந்த காசையெல்லாம் புரட்டிப் போட்டு முன்னூறு ரூபாய்க்கு ஒரு எருமைக் கன்னு வாங்கினேன். நாய்க்குட்டி மாதிரி அந்த எருமைக் கன்னு என்கூடவே அலைஞ்சு மேய்ஞ்சு வளர்ந்துச்சு. இன்னிக்கு என்கிட்ட இருக்குற எருமைகளெல்லாமே அதோட வாரிசுகள்தான்.

இப்போ மொத்தம் எட்டு ஈத்துவழி எருமைக, ஏழு கிடேரிக, ஒரு பொலிகாளைனு வெச்சுருக்கேன். இதில்லாம அப்பப்ப ஏகப்பட்ட எருமைகளை வித்துருக்கேன். ஒரேயரு எருமை கன்னுக்குட்டியிலதான் என்னோட வாழ்க்கை மேலே உசர ஆரம்பிச்சுது. வீடுகட்டி, பிள்ளைகளைப் படிக்க வெச்சு வெளிநாட்டு வேலைக்கு அனுப்பினு இன்னிக்கு வரைக்கும் என்னோட இந்த மொத்த வாழ்க்கையுமே அந்த ஒரு எருமை ஆரம்பிச்சு வெச்சதுதான்'' என்று தன் நினைவுகளை அசை போட்டவர், எருமை வளர்ப்புப் பற்றி சொன்னவற்றை தொகுத்திருக்கிறோம் பாடமாக!

மேய்ச்சல் நிலம்... தண்ணீர் அவசியம்!

''எருமை வளர்க்க கட்டாயம் மேய்ச்சல் நிலம் இருக்க வேண்டும். அவை காலாற சுற்றி வந்து மேய்ந்து, வயிறு நிறைய சாப்பிட்டால்தான் நன்கு வளரும். காலையில் தண்ணீர் காட்டி மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். வெள்ளாடு, பசுக்களைப் போல் இல்லாமல், ஒரே இடத்தில் நின்று கொண்டே செடிகளைச் சாப்பிடும். அந்த இடத்தில் தீர்ந்தால்தான் அடுத்த இடத்துக்குப் போகும். காலை பத்து மணியளவில் ஏதாவது குளம், குட்டையில் கொஞ்ச நேரம் இருக்கவிட வேண்டும். குளங்களில் தண்ணீர் இல்லாத சமயங்களில், பம்பு செட் மூலமாவது தண்ணீர் பாய்ச்சி எருமைகளைக் குளுமைப்படுத்த வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது இப்படிச் செய்ய வேண்டும். அதிக வெயிலில் எருமைகளைக் கட்டிப் போடக் கூடாது. உச்சிவெயில் நேரங்களில், தானாகவே அவையெல்லாம் நிழலைத் தேடிப் போய் விடும்.

கொட்டகையெல்லாம் தேவையில்லை!

மதியம் மூன்று மணி வாக்கில் பால் கறந்துவிட்டு, மீண்டும் தண்ணீர் காட்டி மேயவிட வேண்டும். சாயங்காலம் ஆறு மணி சுமாருக்கு அழைத்து வந்து மீண்டும் தண்ணீர் காட்டி கட்டி வைத்தால் போதும். இதற்காக தனிக் கொட்டகையெல்லாம் அமைக்க வேண்டியதில்லை. ஏதாவது மர நிழலில் கட்டி வைத்தால் போதும். மழையோ, பனியோ எதுவாக இருந்தாலும் எருமைக்கு எந்த பாதிப்பும் வராது. இன்னும் சொல்லப் போனால், மழையில் நனைந்தால் பாலின் அளவு கூடும். இரவில் வைக்கோலைத் தீவனமாகக் கொடுக்கலாம். காலையில் மூன்று மணிவாக்கில் பால் கறந்து விடலாம்.

சினை மாட்டுக்கும், பால் கறக்கும் மாட்டுக்கும், தண்ணீர்த் தொட்டியில், கம்பு மாவு, சோளமாவு, புண்ணாக்கு, தவிடு ஆகியவற்றை அதிகமாகக் கலந்துவிட வேண்டும். அதன் மூலம்தான் எருமை நன்கு பளபளப்பாகும், பாலின் அளவும் கூடும். பால் கறப்பதை நிறுத்தும் நிலையில் இருக்கும் மாட்டுக்கு, மேற்கண்ட தீவன அளவுகளைக் குறைத்துக் கொள்ளலாம்.

பருவம் சொல்லும் பல்!

எருமைகள் இரண்டு பல் முளைத்த பிறகுதான் பருவத்துக்கு வரும். சினைப் பருவத்துக்கு வந்த எருமைகள், கீழ் வரிசைப் பல்லைக் காட்டி கத்தும். விட்டு விட்டு சிறுநீர் கழிக்கும். இதை வைத்துக் கண்டுபிடிப்பது கொஞ்சம் சிரமம் என்பதால், கூடவே ஒரு பொலி எருமைக் கிடாவையும் வளர்த்தால்... அது பருவத்துக்கு வந்த எருமைகளை விரட்டும். அதை வைத்து எளிதாகக் கண்டுபிடித்து விடலாம். அதன் பிறகு நேரடியாகவோ, செயற்கை முறையிலோ கருவூட்டல் செய்து கொள்ளலாம். கன்று போட்ட மூன்று நான்கு மாதங்களுக்குப் பிறகுதான் மீண்டும் எருமைகள் பருவத்துக்கு வரும்.

எருக்கு இலை பழுப்பதேன்... எருமைக் கன்று சாவதேன்?

கன்றுகள் பிறந்ததிலிருந்து நாற்பது நாட்கள் வரை வயிறாரப் பால் குடிக்க அனுமதிக்க வேண்டும். இல்லாவிட்டால், கன்றுகள் இறந்துபோக வாய்ப்பிருக்கிறது. இதை மனதில் வைத்துதான் கிராமங்களில் 'எருக்கிலை பழுப்பதேன்? எருமைக் கன்று சாவதேன்?' என்று ஒரு விடுகதை போடுவார்கள். அதன் விடை 'பால் இல்லாமல்' என்பதாகும்.

பிறந்த அன்றே கன்றுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். கன்றுப் பருவத்தில் முடியை மழித்துவிட வேண்டும். இல்லாவிடில் பேன் பிடித்து அரிப்பெடுக்கும். அரிப்பெடுத்த இடத்தை நக்கும்போது, முடி வயிற்றுக்குள் சென்று விடும். இதைச் சரியாகக் கடைபிடித்து விட்டால், கன்றுகளை இறப்பிலிருந்து தடுத்து விடலாம்.

தடுப்பூசிகள் அவசியம்!

எருமைக்குப் பெரும்பாலும் அதிகமாகக் காணை நோய்தான் வரும். காணை தாக்கினால், வாயிலும், கால் குளம்பிலும் புண் வந்து, எச்சில் ஒழுகும். தடுப்பூசி மூலம் காணை நோயைத் தவிர்க்கலாம். பால் முழுவதையும் கறந்தாலோ, அல்லது கன்று குடித்தாலோ மடி நோய் வரும். அதேபோல பால் கறப்பவர்கள் கைகளில் நகம் இருக்கக் கூடாது. சுத்தமாகக் கழுவியபின்தான் கறக்க வேண்டும். சுண்ணாம்புச் சத்து குறைவு காரணமாக, சமயங்களில் மாடு படுத்துக் கொண்டே இருக்கும். அதுமாதிரியான சமயங்களில் தெளிந்த சுண்ணாம்பு நீரைக் குடிநீரோடு கலந்து கொடுக்க வேண்டும். தடுப்பூசிகளையும் தவறாமல் போட்டுவிட வேண்டும்''

ஒரு நாளைக்கு 10 லிட்டர்!

பரமாரிப்புக் குறிப்புகளைச் சொல்லி முடித்த கருப்பையா... ''கன்னு போட்டதுல இருந்து மூணு மாசம் வரைக்கும் ஒரு நாளைக்கு ஒரு எருமை அதிகபட்சம் 10 லிட்டர் பால் கொடுக்கும். அடுத்த ரெண்டு மாசம் 3 லிட்டராகும். அடுத்த 3 மாசம் 5 லிட்டர் ஆகும். பாலின் அளவுல இப்படி ஏற்ற இறக்கம் இருக்கும். அதுக்கப்புறம் பால் வத்திடும். பசுந்தீவனம் நிறைய சாப்பிட்டா, பால் கூடும். கோடையில கொஞ்சம் கம்மியாத்தான் பால் கறக்கும். டீக்கடை, வெளியிலனு நேரடியா பால் வித்தா... லிட்டருக்கு 20 ரூபாய் கிடைக்கும். நான், வியாபாரிககிட்ட முன்பணம் வாங்கிட்டு கொடுக்கிறேன். அதனால, லிட்டருக்கு 16 ரூபாய்தான் கிடைக்குது. எருமைப்பால் கொழுப்பு அதிகமா, கெட்டியா இருக்குறதாலதான் நல்ல விலை கிடைக்குது. எவ்வளவு வருமானம் வருதோ... அதுல பாதியை மாட்டுக்குச் செலவழிக்கணும்னு சொல்வாங்க. அதாவது, அந்தளவுக்கு தவிடு, புண்ணாக்கு வாங்கிப் போடணும்'' என்றவர்,

''எருமையைப் பொறுத்தவரைக்கும் பராமரிப்புக்காக ரொம்ப கவலைப்படத் தேவையில்ல. ஆனா, மேலே சொன்ன மாதிரி குறைந்தபட்ச விஷயங்களையெல்லாம் முறைப்படி பராமரிச்சோம்னா... எருமை மூலமாவே போதுமான லாபம் பார்க்கலாம்.

சினையான கன்னுக்குட்டிக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை விலை கிடைக்கும். என்கிட்ட இருக்கற மாடுகள்ல எட்டு மாடு இப்ப கறந்துகிட்டிருக்கு. சராசரியா ஒரு நாளைக்கு 50 லிட்டர் பால் மூலமா, மாசத்துக்குச் செலவு போக 14,000 ரூபாய் கிடைக்குது (கறவைக் கூலியாக கருப்பையா எடுத்துக் கொள்ளும் 2,000 ரூபாயும் அடக்கம்). சாணி மூலமா மாசம் 3,000 ரூபாய். ஆக மொத்தம் மாசத்துக்கு 17,000 ரூபாய் லாபமா கிடைக்குது'' என்றார் கருப்பையா மகிழ்ச்சியுடன்.

Friday, April 23, 2010

வாழ்த்தலாம் வாருங்கள்....

சச்சின, பிரபல மராத்தி ரமேஷ் டெண்டுல்கர் என்பதுதான் முழுப் பெயர். சச்சினின் அப்பாஎழுத்தாளர். அவர், சச்சின் தேவ் பர்மன் என்னும் இசையமைப்பாளரின் தீவிர ரசிகர் என்பதால்தான் மகனுக்கு சச்சின் என்று பெயர்வைத்தார்!

1988-ம் ஆண்டு மும்பை வித்யா மந்திர் பள்ளியில் படித்தபோது வினோத் காம்ப்ளியுடன் இணைந்து குவித்த 664 ரன்கள்தான் சச்சினை கிரிக்கெட் உலகுக்குக் கொண்டுவர உதவியது. மும்பை அணிக்காக ஆடிய ரஞ்சிக் கோப்பையிலும் முதல் போட்டியிலேயே சதம் அடித்து, சட்டென எல்லோர் மனதிலும் பதிந்தார் சச்சின்!

சச்சினை கிரிக்கெட் விளையாட ஆர்வப்படுத்தியவர் அவரது அண்ணன் அஜீத். மும்பை பாந்த்ராவில் இருந்த சச்சினின் வீட்டில் இருந்து, கிரிக்கெட் கோச்சிங் போய் வர முடியாது என்பதால், சிவாஜி நகரில் உள்ள மாமா வீட்டில் சச்சினைத் தங்கவைத்து, கூடவே இருந்தார் அண்ணன் அஜீத்!

முதலில் சென்னை எம்.ஆர்.எஃப். பேஸ் ஃபவுண்டேஷனில் பௌலர் ஆவதற்குப் பயிற்சிபெற வந்தார் சச்சின். ஆனால், பயிற்சியாளரான டென்னிஸ் லில்லி, 'நீ சூப்பர் பேட்ஸ்மேன் ஆவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. போய் பேட்டிங் பயிற்சி எடு' என்று அனுப்பிவைத்தார்!

ரமாகாந்த் அச்ரேகரிடம் கிரிக் கெட் கோச்சிங் எடுத்தபோது, முதல் ஆளாக கிரிக்கெட் மைதானத்துக்கு வந்து கடைசி ஆளாகப் போவாராம் சச்சின். 'அச்ரேகரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். நாம் எப்படி விளையாடுகிறோமோ, அதில் இன்னும் சிறப்பாக விளையாட சொல்லித் தருவார். நம் ஸ்டைலை மாற்ற மாட்டார்' என்பார் சச்சின்!

பாராட்டும் புகழும் கிடைக்கும் ஒவ்வொரு தருணத்திலும் ஆரம்ப காலத்தில் தன்னை மெருகேற்றிய கோச் அச்ரேகருக்கு நன்றியுடன் நினைக்க மறந்ததில்லை. இதை பல மேடைகளில் பதிவும் செய்திருக்கிறார்.

எந்தப் பந்துவீச்சாளர்கள் தன்னை அடிக்கடி அவுட் ஆக்குகிறார்களோ, அவர்களின் பந்துகளை எதிர்கொள்வதற்காக ஸ்பெஷல் டிரெயினிங் எடுப்பார். 98-ம் ஆண்டு ஷேன் வார்னேவின் சுழற்பந்தை எதிர்கொள்ளச் சிரமப்பட்டவர், சுமார் ஒரு மாதம் சென்னையில் தங்கி சிவராமகிருஷ்ணனிடம் பயிற்சி எடுத்தார். அதன் பிறகு சச்சின் ஆடிய ருத்ரதாண்டவத்தை ஷேன் வார்னே இன்னும் மறக்கவில்லை!

முதன்முதலாக வேர்ல்டு டெல் நிறுவனத்துடன் 18 கோடி ரூபாய் என்கிற கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டார். இந்தியாவிலேயே இவ்வளவு பெரிய தொகைக்கு யாரும் ஒப்பந்தமானது இல்லை என்று வியந்தது விளையாட்டு உலகம். இப்போது சச்சினின் சொத்துக்கள் எவ்வளவு என்பது அவருக்கே தெரியாது. அண்ணன் அஜீத்தான் முழுவதையும் கவனித்துக்கொள்கிறார்!

'கிரிக்கெட் விளையாட வந்த ஆரம்பத்தில் நண்பர்களை அதிகம் மிஸ் செய்வேன். இப்போது என் ஆரூயிர் நண்பன் என் கிரிக்கெட் பேட்தான். அவன் என்னைவிட்டுப் பிரிவதை என்னால் எப்போதும் தாங்கிக்கொள்ளவே முடியாது' என்று சொல்லி இருக்கிறார் சச்சின்!

கிரிக்கெட் இல்லையென்றால், மனைவி அஞ்சலி, மகன் அர்ஜுன், மகள் சாராவுடன் வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்கள் கிளம்பிவிடுவார். மகனை கிரிக்கெட் பிளேயராகவும், மகளை டென்னிஸ் பிளேயராகவும் உருவாக்க வேண்டும் என்பது கனவு!

மக்களோடு மக்களாக இருக்க வேண்டும் என்பது சச்சினின் ஆசை. ஆனால், இந்தியாவில் அது முடியாத காரியம் என்பதால், சில வருடங்களுக்கு முன்பு லண்டனில் சொந்தமாக வீடு வாங்கினார். வீட்டின் அருகே உள்ள பார்க்கில் குடும்பத்தோடு உட்கார்ந்து அரட்டை அடிப்பதுதான் சச்சினுக்கு ரொம்பப் பிடிக்குமாம்!

எந்த நகரத்தில் கிரிக்கெட் விளையாடப்போனாலும், மேட்ச் இல்லாத நாட்களில் பேஸ்பால் கேப், கூலிங்கிளாஸ், தாடி என கெட்-அப்பை மாற்றி, நகர்வலம் செல்லப் பிடிக்கும். மும்பையில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலுக்குப் பிறகு வெளியே செல்வதை நிறுத்திவிட்டார்!

சென்டிமென்ட்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். கிரிக்கெட் என்றால் 10-ம் நம்பர் ஜெர்சி. கார் என்றால் 9999 என ராசியான நம்பர்களை யாருக்கும் விட்டுத்தர மாட்டார்!

லதா மங்கேஷ்கரின் தீவிர ரசிகர். லதா மங்கேஷ்கர், சச்சினை எப்போது பார்த்தாலும் அவருக்காக நாலு வரிகளாவது பாடாமல் போக மாட்டார்!

பெர்ஃப்யூம், சன் கிளாஸ், மியூஸிக் சிஸ்டம், பிராண்டட் ஷர்ட்ஸ், ஸ்போர்ட்ஸ் கார் இவைதான் சச்சின் அதிகம் விரும்பி வாங்குபவை!

பட்டோடிக்கு அடுத்தபடியாக மிக இளம் வயதில் இந்தியக் கிரிக்கெட் கேப்டன் ஆனார். சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான தொடர்களில் வெற்றி தேடித் தந்தார் கேப்டன் சச்சின். இருப்பினும், வெளிநாடுகளில் இவர் தலைமையிலான அணி பல தோல்விகளைக் கண்டதால் தானாகவே கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார்!

இதுவரை மொத்தம் ஐந்து உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி இருக்கிறார் சச்சின். இதில் இந்தியாவிலும், தென் ஆப்பிரிக்காவிலும் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்து, மேன் ஆஃப் த சீரிஸ் விருது பெற்றிருக்கிறார்!

2001-2002ம் ஆண்டின்போது டென்னிஸ் எல்போ பிரச்னையால் மிகவும் அவதிப்பட்டார். ஆபரேஷன் காரணமாக விளையாட முடியாமல் இருந்தவருக்கு உறுதுணையாக இருந்தது மனைவி அஞ்சலி. 'என் மனைவி மட்டும் எனக்குத் துணையாக இல்லை என்றால், மீண்டும் கிரிக்கெட் பேட்டைத் தொட்டிருக்கவே முடியாது' என நெகிழ்வார் சச்சின்!

பேட்ஸ்மேன்தான் என்றாலும் மீடியம் ஸ்பீடு, லெக் ஸ்பின், ஆஃப் ஸ்பின் என பௌலிங்கிலும் கலக்குவார். விக்கெட் கீப்பிங் செய்ய வேண்டும் என்பதும் சச்சினின் நீண்ட நாள் ஆசை!

பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜுனா எனப் பல விருதுகளைக் குவித்திருக்கிறார் சச்சின்!

'இதுவரை மேட்ச் நடப்பதற்கு முந்தைய நாள் இரவு நான் சரியாகத் தூங்கியதே இல்லை. இரவு முழுக்க அடுத்த நாள் மேட்சைப் பற்றியேதான் என மனதில் படம் ஓடிக்கொண்டு இருக்கும்' என்பார்!

சிறுவனாக இருந்தபோது நான்கு மணி நேரம் விளையாடினாலும் சச்சினை அவுட் ஆக்க முடியாமல் தவிப்பார்களாம். பயிற்சியாளர் அச்ரேகர் ஒரு ரூபாய் நாணயத்தை ஸ்டம்ப்பின் மேல் வைத்துவிட்டு, சச்சினை அவுட் ஆக்குபவருக்கு ஒரு ரூபாய் சொந்தம் எனச் சவால்விடுவாராம்!

2005-ம் ஆண்டின்போது பத்திரிகை ஒன்று 'எண்டுல்கர்' ('END'ULKAR) எனத் தலைப்பிட்டு, சச்சினை விமர்சித்து ஒரு கட்டுரை எழுதியது. 'என்னைப்பற்றி எவ்வளவோ விமர்சனங்கள் வந்திருக்கின்றன. ஆனால், அந்த விமர்சனத்தை மட்டும் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நான் மிகவும் வருத்தப்பட்டு அழுத நாள் அது மட்டும்தான்!' என்றார் சச்சின்!

சச்சினின் மொபைலில் இருந்து யாருக்கு எஸ்.எம்.எஸ். வந்தாலும், 'தேங்க்ஸ் அண்ட் லவ் சச்சின்' என்பதே இறுதி வரியாக இருக்கும்!

சச்சினுக்கு மிகவும் பிடித்தது கார் ரேஸ். ஃபார்முலா-1 ரேஸ் நடக்கும் மைதானங்களுக்கு நேரடியாக விசிட் அடிப்பார் சச்சின். நரேன் கார்த்திகேயனுடன் பேசி, வேகமான கார்களைப்பற்றி அப்டேட் செய்துகொள்வார்!

கிரிக்கெட் விளையாட வந்த புதிதில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கேரி சோபர்ஸ் எழுதிய 'ட்வென்ட்டி இயர்ஸ் அட் த டாப்' என்கிற புத்தம்தான் ரொம்பப் பிடிக்கும் என்று சொன்னார் சச்சின். இப்போது 20 வருடங்களைக் கடந்து விளையாடிக்கொண்டு இருக்கிறார் மாஸ்டர் ப்ளாஸ்டர்!

காலையில் சீக்கிரம் எழுந்து இரவு லேட்டாகத் தூங்கப்போகும் பழக்கம் கொண்டவர் சச்சின். தினமும் அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்துவிடுவது சச்சின் பாலிசி. அதேநேரம் இரவு 12 மணிக்கு மேல்தான் தூங்கப்போவாரம். இரவில் தூங்குவதற்கு முன்பு ஒரு மணி நேரம் ஐபாடில் பாட்டுக்கேட்பாராம்!

மும்பை மற்றும் பெங்களூரில் மூன்று ரெஸ்ட்டாரெண்டுகளை நடத்திவரும் சச்சின் வெளிநாடுகளில் விளையாடப்போகும்போது அங்கு நிறைய ரெஸ்ட்டாரண்டுகளுக்கு விசிட் அடிப்பார். அங்கே விதவிதமான மெனுக்களை ருசிபார்ப்பவர் அதை அப்படியே தன்னுடைய ரெஸ்ட்டாரென்ட் மெனு கார்டிலும் சேர்த்துவிடுவாராம்.

சச்சினின் மாமியார் நடத்திவரும் ஆப்னாலாயா தொண்டு நிறுவனம் மூலம் பல்வேறு உதவிகளை செய்துவருகிறார் சச்சின். ஊனமுற்ற மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகளை எங்கே பார்த்தாலும் குறைந்தபட்சம் அவர்கள் கன்னத்தையாவது தடவாமல் விடமாட்டார் மாஸ்டர் ப்ளாஸ்ட்டர்.

தன்னைப் பற்றி எந்த விமர்சனங்கள் வந்தாலும் அதற்கு பதில் கொடுக்கவே மாட்டார் சச்சின். ஆனால் ஒரேயொருமுறை சச்சின் தனது ஹெல்மெட்டில் இந்தியக் கொடியை பயன்படுத்தக்கூடாது என எதிர்ப்பு வந்துபோது முதன்முறையாக அதை எதிர்த்து காட்டமாகப் பேசினார் சச்சின்.

நள்ளிரவு நேரங்களில் தனது ஃபெராரி காரை எடுத்துக்கொண்டு மும்பை வீதிகளில் ரவுண்டு அடிப்பது சச்சினுக்கு மிகவும் பிடிக்கும். மகன் முன்னிருக்கையில் உட்கார்ந்துகொள்ள வேகமாக கார் ஓட்டுவார் சச்சின்.

கிரிக்கெட் பற்றிய புத்தகங்களை மட்டும்தான் விரும்பிப் படிப்பார். கதை புத்தங்கங்களை அதிகம் படிக்க மாட்டேன். ஆனால் என் மகனுடன் சேர்ந்து இப்போது காமிக்ஸ் புத்தங்களை படிக்க ஆரம்பித்துவிட்டேன் என்று சொல்லி இருக்கிறார் சச்சின்

சச்சினுக்கு மிகவும் பிடித்த நடிகை மாதுரி தீக்ஷித்!

எந்த அவசரத்தில் இருந்தாலும் தன்னிடம் போட்டோ எடுத்துக் கொள்ள விரும்பும் ரசிகர்களுக்கு புன்சிரிப்போடு நிதானமாக போஸ் கொடுத்து அனுப்பிவிட்டுதான் வேறு வேலை செய்வார்!

ஒவ்வொரு போட்டியில் வெற்றி பெற்றால் முதலில் பாராட்டுபவரும், தோல்வியைத் தழுவினால் முதலில் ஆறுதல்படுத்துவதும் மனைவி அஞ்சலியே!

ஐபிஎல் இருபதுக்கு இருபது சீசன் மூன்றில் அதிக ரன்கள் எடுத்து கிரிக்கெட்டின் எந்த வடிவத்துக்கும் தான் மிகப் பொருத்தமான பிளேயர் என்று நிரூபித்திருக்கிறார்!

டிவென்டி 20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என கிரிக்கெட் ஆர்வலர்கள் பலர் வலியுறுத்தியும், இளம் வீரர்களுக்கே வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று பிடிவாதமாக மறுத்தவர்.

ஏப்ரல் 24... கிரிக்கெட் கடவுளின் பிறந்தநாள்

வாழ்த்தலாம் வாருங்கள்....