ஏக்கருக்கு 74 மூட்டை! |
இயற்கை விவசாயத்தில்... இன்னுமொரு சாதனை! |
இயற்கை வேளாண்மை குறித்த விழிப்பு உணர்வு, தமிழகத்தில் பெருகி வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்தாலும், 'இயற்கை வேளாண்மை முறையில் பயிரிட்டால், மகசூல் குறைந்து விடுமோ' என்ற அச்சம் மட்டும் விவசாயிகளிடம் இருந்து முழுமையாக நீங்கியபாடில்லை. இந்நிலையில், 'இந்த அச்சம் தேவையற்றது' என்பதை, கிச்சடிச் சம்பா நெல் சாகுபடியில் ஏக்கருக்கு 74 மூட்டை மகசூல் எடுத்து நிருபித்திருக்கிறார் திருநெல்வேலி, என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த இயற்கை விவசாயி கர்னல். தேவதாஸ். 'அங்கக வேளாண்மையில் மாநிலத்திலேயே அதிக மகசூல் எடுத்தவர்' என்று பாராட்டி, இவருக்கு முதல் பரிசை வழங்கியிருக்கிறது தமிழக வேளாண்மைத் துறை!
வாழ்த்துகளைச் சொன்னபடி சந்தித்தபோது, புன்னகை தவழ நம்மிடம் பேசினார் கர்னல்.தேவதாஸ். ''அடிப்படையில் நான் ஒரு இன்ஜினீயர். ரெண்டு முதுகலைப் பட்டங்களை வாங்கின நான், தமிழக பொதுப்பணித் துறையில வேலை பார்த்தேன். பிறகு, இந்திய ராணுவத்துல சேர்ந்து கர்னல் பொறுப்பு வரைக்கும் உயர்ந்தேன். பிறகு, விருப்ப ஓய்வு வாங்கிட்டு வந்து, கொஞ்ச நிலத்தை வாங்கி விவசாயம் செய்ய ஆரம்பிச்சுட்டேன்.
2007-ம் வருஷம் சென்னையில தமிழக அரசு நடத்தின விவசாயக் கண்காட்சியில கலந்துகிட்ட பிறகுதான், இயற்கை விவசாயத்தைப் பத்தியும், பசுமை விகடன் பத்தியும் தெரிய வந்துச்சு. அதுக்குப் பிறகு தொடர்ந்து பசுமை விகடன் படிக்க ஆரம்பிச்சேன். இயற்கை விவசாயத்தைப் பத்தி சுபாஷ் பாலேக்கர் சொல்ற கருத்துக்களைப் படிச்சதும், ரொம்ப ஈடுபாடு வந்துடுச்சு. பிறகு 'ஜீரோ பட்ஜெட்' பயிற்சி வகுப்புகள்ல கலந்துக்கிட்டு, ஜீரோ பட்ஜெட் முறை விவசாயத்துக்கு மாறிட்டேன். போன வருஷமே 'அங்கக வேளாண்மை விவசாயி'னு முறைப்படி அரசாங்கத்துக்கிட்ட பதிவும் செஞ்சுட்டேன்.
தொடர்ந்து, காய்கறி உள்பட நிறைய பயிர்களை இயற்கை முறையில பண்ணிக்கிட்டிருக்கேன். அதன் மூலமா அற்புதமான விளைச்சல் கிடைக்குது. இந்த விஷயத்தை விவசாய அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்னு எல்லார்கிட்டேயும் சொன்னேன். ஆச்சரியப்பட்டுப் போன மாவட்ட ஆட்சியர் ஜெயராமன், உடனடியா என்னோட பண்ணையிலயே இயற்கை விவசாயக் கருத்தரங்கம் நடத்த ஏற்பாடு செய்ததோடு, உதவி கலெக்டரையும் அனுப்பி வெச்சார். நான் மேற்கொண்டிருக்கற இயற்கை விவசாயத்தை நேர்ல பார்த்துத் தெரிஞ்சுக்க மாவட்ட வேளாண்மைப் பயிற்சி அரங்கில் இருந்து ரெண்டு குழுக்கள் வந்துட்டு போச்சு. பிறகு, உழவர் சந்தையில இயற்கைக் காய்கறிகளை விற்பனை செய்றதுக்காக ஒரு கடையையும் கொடுத்தாங்க. இதெல்லாமே, நான் நேசிக்கிற இயற்கை விவசாயத்துக்குக் கிடைச்ச மரியாதை'' என்று சந்தோஷம் பொங்கச் சொன்னவர், தொடர்ந்தார்.
அரிசியா வித்தாத்தான் அதிக லாபம்!
''போன வருஷம் பிசான பருவத்துல (நவம்பர் முதல் பிப்ரவரி வரை) பத்து ஏக்கர் நிலத்துல 'கிச்சடிச் சம்பா' பயிரிட்டிருந்தேன். அதுதான் அமோக மகசூலை அள்ளிக்கொடுத்து, முதல் பரிசையும் வாங்கிக் கொடுத்திருக்கு. ஒற்றை நாற்று முறையில சாகுபடி செய்யணும்னு நெனச்சிருந்தேன் ஆனா, நடவு நேரத்துல ஆட்கள் கிடைக்கமாட்டாங்கனு, வழக்கமான முறையிலயே நட்டுட்டேன். ஒற்றை நாற்று முறையில சாகுபடி செஞ்சுருந்தா இன்னும் அதிக மகசூல் கிடைச்சிருக்கும்.
நெல்லை அப்படியே விக்காம, அரிசியா மாத்தித்தான் விற்பனை செய்றது என்னோட வழக்கம். நெல்லை அரிசியா மாத்தும்போது மொத்த நெல்லுல 60% அரிசி கிடைக்கும். அந்த அரிசியை உழவர் சந்தையில இருக்கற கடையில வெச்சு, கிலோ 40 ரூபாய்னு விற்பனை செய்றேன். அதனால எனக்குக் கூடுதலா லாபம் கிடைக்குது'' என்று சொன்ன கர்னல். தேவதாஸ், பரிசு பெறும் அளவுக்கு அதிக மகசூல் பெற்றுத் தந்த தன்னுடைய சாகுபடித் தொழில்நுட்பம் பற்றி பாடமே நடத்தினார்.
விதைநேர்த்தி அவசியம்!
''நிலத்தை உழவு செய்து தானிய வகைகள், எண்ணெய் வித்துக்கள், பயறு வகைகள், கொளுஞ்சி, சணப்பு விதைகளைக் கலந்து ஏக்கருக்கு இருபத்தைந்து கிலோ வீதம் விதைக்க வேண்டும். அவை பூக்கும் சமயத்தில் அப்படியே மடக்கி உழுது, ஆட்டுக்கிடை போட்டு, மறுபடியும் உழவு செய்ய வேண்டும். ஏக்கருக்கு நூறு கிலோ கொம்புத் தூள், நூறு கிலோ மட்கிய தொழுவுரம், பத்து கிலோ கனஜீவாமிர்தம், ஆகியவற்றை அடி உரமாக போட்டு, தொழி கலக்க வேண்டும். 20 கிலோ நெல் விதையை பீஜாமிர்தத்தில் விதைநேர்த்தி செய்து நாற்றுப் பாவ வேண்டும். நாற்றுகளைப் பதினைந்து நாளில் பறித்து, வழக்கமான பாணியில் நடவு செய்ய வேண்டும்.
ஏக்கருக்கு 74 மூட்டை!
நடவு செய்த 15, 30, 45 மற்றும் 60-ம் நாட்களில் ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசனத் தண்ணீரில் கலந்து கொடுக்க வேண்டும். அதோடு, 15 நாட்களுக்கு ஒரு முறை 5 லிட்டர் ஜீவாமிர்தத்தை விசைத் தெளிப்பான் மூலமாக தெளிக்க வேண்டும். மொத்தம் மூன்று முறை இப்படி தெளித்தால் போதும். முதல் தெளிப்பில்
100 லிட்டர், இரண்டாவது தெளிப்பில் 150 லிட்டர், மூன்றாவது தெளிப்பின்போது 200 லிட்டர் என்கிற அளவில் தண்ணீர் எடுத்துக் கொண்டு, அதில் ஜீவாமிர்தத்தைக் கலந்து தெளிக்கவேண்டும். இப்படிச் செய்தால் நோய்த் தாக்குதலே சுத்தமாக இருக்காது.
பயிர், பொதிப் பருவத்தை (பால் பருவம்) அடைந்ததும், இரண்டரை லிட்டர் புளித்த மோர், 250 கிராம் சூடோமோனஸ் இரண்டையும் 100 லிட்டர் தண்ணீரில் கலந்து விசைத் தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். பின்னர் 'காய்ச்சலும் பாய்ச்சலுமாக' பாசனம் செய்தால் போதும். இடையில் இரண்டு முறை கைக் களை மட்டும் எடுக்க வேண்டியிருக்கும். இதையெல்லாம் செய்தால்... பயிரின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும்.
சாகுபடித் தொழில்நுட்பங்களை முடித்த தேவதாஸ், ''என்னோட வயல்ல இருக்கற நெல்லு பயிருல மணி பிடிக்கும் தன்மையைப் பார்த்த வேளாண்மை அதிகாரிங்க, 'அங்கக பயிர் விளைச்சல் போட்டியில கலந்துக்கோங்க'னு சொன்னாங்க. அதனால் நானும் கலந்துகிட்டேன். ஏப்ரல் 3-ம் தேதியன்னிக்கு அரசு அதிகாரிங்க, அரசு சாராத பிரதிநிதிங்கனு எல்லாரும் கூடி நிற்க, கிச்சடிச் சம்பா அறுவடை நடந்துது. ஒரு ஹெக்டேருக்கு 11,215 கிலோ மகசூல் கிடைச்சுது. ஏக்கருக்கு 4,486 கிலோ! மூட்டையா கணக்குப் போட்டா... ஏக்கருக்கு 74 மூட்டை (60 கிலோ மூட்டை). இது வழக்கமான மகசூலை விட ரொம்ப ரொம்ப அதிகம்'' என்றார் சந்தோஷமாக.
சாவி நெல்லே இல்லை!
இதுகுறித்து நம்மிடம் பேசிய நெல்லை மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் தேவசகாயம், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வெள்ளைப்பாண்டி ஆகியோர், ''இயற்கை விவசாயம் செய்வது எளிமையானது மட்டுமல்லாமல், ரொம்பவே சிக்கனமானதும்கூட. ரசாயன உரங்களைப் போடுவதால் நிலத்தின் தன்மை மாறி, அடுத்தடுத்த பயிரில் மகசூல் குறைவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்பதுதான் உண்மை. ஆனால், இயற்கை விவசாயம் செய்வதால் நிலத்தை உயிர்ப்போடு வைத்திருக்க முடியும்.
இயற்கை முறையில் விவசாயம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டிய கர்னலுக்கு எங்கள் துறை மூலமாக முழுமையான ஒத்துழைப்பு தந்தோம். நடவு செய்தபோது அவர் டிரில்லர் பயன்படுத்தவில்லை. அதனால், தூர்களின் எண்ணிக்கை கொஞ்சம் குறைந்துவிட்டது. ஆனாலும்... மட்கிய உரம், பீஜாமிர்தம், ஜீவாமிர்தம் போன்றவற்றை போட்டு பயிரின் தரத்தை உயர்த்திவிட்டார். ஒவ்வொரு கதிரிலும் சராசரியாக 360 நெல் மணிகள் இருந்தபோதும், சாவி நெல்களே (பதர்) இல்லை. அதனாலதான் அவரால் இந்தச் சாதனையை செய்ய முடிந்தது.
தற்போது, அவருக்குக் கிடைத்திருக்கும் மகசூலைப் பார்த்து, அக்கம்பக்கத்து விவசாயிகள்கூட, 'நாங்களும் இனிமேல் இயற்கை விவசாயத்தை மட்டுமே செய்யப் போறோம்' என்று சொல்ல ஆரம்பித்திருப்பது, கர்னலுக்கும் அவர் நேசிக்கும் இயற்கை விவசாயத்துக்கும் கிடைத்த வெற்றி!'' என்றவர்கள்,
''வேளாண் துறை, இயற்கை விவசாயத்தின் மீது காட்டிய அக்கறைக்கு கிடைத்த வெற்றியும்கூட'' என்றார்கள் பெருமிதத்துடன்.
முத்தான மூன்று பரிசுகள்!
மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சுப்பிரமணியன் பேசும்போது, ''இயற்கையில்
74 மூட்டை என்ற சாதனை மட்டுமல்ல... செம்மை நெல் சாகுபடியில் 105 மூட்டை என்றும் சாதனை படைத்து முதல் பரிசைப் பெற்றுள்ளது திருநெல்வேலி மாவட்டம் (பார்க்க பெட்டிச் செய்தி). மக்காச் சோளத்திலும் மாநில அரசின் விருது இந்த மாவட்டத்துக்கே கிடைத்துள்ளது (இதைப் பற்றிய கட்டுரை அடுத்த இதழில் இடம்பெறும்). இப்படி முத்தாய்ப்பான மூன்று முதல் பரிசுகள் கிடைத்திருப்பது சந்தோஷமான விஷயமே! அதற்காக எங்கள் துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் களப்பணியாளர்களும் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டார்கள்.
மாவட்டத்தில் 2009- 2010-ம் ஆண்டில் மழை அளவு குறைவாக இருந்ததால், சாகுபடி பரப்பளவும் குறைந்தே இருந்தது. ஆனால், செம்மை நெல் சாகுபடி மற்றும் அங்கக வேளாண்மை முறைகளை விவசாயிகள் அதிகமாகக் கடைபிடித்ததால், வழக்கத்தை விடவும், அதிகமான நெல் உற்பத்தி இந்த மாவட்டத்தில் சாத்தியமாகியிருக்கிறது.
செம்மை நெல் சாகுபடி முறை குறித்து, மாவட்ட ஆட்சியர் ஆலோசனையின்படி அடிக்கடி கருத்தரங்கம், கண்காட்சிகள் நடத்தியதால், அதன் சாகுபடி பரப்பு 32,257 ஹெக்டேராக உயர்ந்திருக்கிறது. நடப்பு ஆண்டு கோடை நெல் சாகுபடியிலும் கூடுதல் இலக்கை எட்ட தீவிரம் காட்டி வருகிறோம்'' என்று சொன்னார்.
எல்லா மாவட்டங்களுக்கும் பரவட்டும் இந்த அக்கறை!
|
படங்கள்: ஆ. வின்சென்ட் பால், எல். ராஜேந்திரன்.
No comments:
Post a Comment