Friday, April 23, 2010

பூச்சிகளும் நம் நண்பர்களே..!

ல்லவங்களும், கெட்டவங்களும் கலந்து இருக்கறதுதான் உலகம். பயிர்களுக்கும் அதேகதைதான். நல்லது செய்ற பூச்சிக வாழணும்னா... கெட்டது செய்யுற பூச்சிகளும் வயல்ல இருக்கணும். கெட்டது செய்யுற பூச்சிகளோட எண்ணிக்கை நமக்கு பொருளாதார சேதத்தை ஏற்படுத்தாத அளவுக்கு இருக்கற மாதிரி பாத்துக்கணும். ஆனா, இது புரியாம எந்த ஒரு பூச்சியைப் பார்த்தாலும்... பூச்சிக்கொல்லித் தெளிக்குறோம். அதனால ஒட்டுமொத்த இயற்கையோட சமநிலை பாதிச்சு, உயிர் வளையமே (உணவு வளையம்) உடைஞ்சு போகுது. பூச்சிகளைப் பத்தி நாம தெரிஞ்சுக்குறதுக்கு முன்ன... இந்த உயிர் வளையத்தைப் பத்தியும் கட்டாயம் தெரிஞ்சுக்கணும்.

இன்னிக்கு வயக்காட்டுல வேலை செய்ய ஆள் கிடைக்கலேனு புலம்பிக்கிட்டிருக்கோம். ஆனா, ஏற்கெனவே நம்ம கண்ணுக்குத் தெரியாத நாலுவிதமான ஆளுங்க சம்பளம் இல்லாம வயல்ல வேலை பார்த்துக்கிட்டிருக்காங்க. அந்த நாலு வகையான ஆளுங்களையும் தெரிஞ்சுக்கிட்டாத்தான், பூச்சிகளைப் பத்தி முழுசா தெரிஞ்சுக்க முடியும்.

முதல் ஆள்: உலகத்துல யாரோட உதவியும் இல்லாம, சூரியஒளியை வெச்சு தனக்குத் தேவையான உணவை தானே தயாரிக்குற இந்த ஆளுங்களுக்கு பேர், 'உணவு உற்பத்தியாளர்கள்'. இவங்கதான் எல்லாத்துக்கும் அடிப்படையானவங்க! உதாரணமா... மரம், செடி, கொடிகளை சொல்லலாம். இதுகதான் மழையை வரவழைக்குது. கழிவுகளை மண்ணுக்கு உரமா கொடுக்குது.

இரண்டாவது ஆள்: 'நல்ல வாயன் சம்பாதிச்சதை... நாற வாயன் தின்னாற்போல'னு ஒரு கதை சொல்வாங்க. அந்த மாதிரி மரம், செடி, கொடிக தயாரிச்சு வச்சிருக்கற (விளைஞ்ச) காய், கனிகளை சாப்பிடுற மனுஷன்; இலை, தழைகளை திங்குற ஆடு, மாடுக; பயிர் பச்சைகளைத் திங்கிற கெட்டது செய்ற பூச்சிக... இது எல்லாத்துக்கும், 'முதல் நிலை உண்ணிகள்'னு பேரு.

மூன்றாவது ஆள்: ஆடு, மாடு, மனுஷங்களை சாப்பிடுற சிங்கம், புலி, மாதிரியான அசைவ விலங்குகள்; பூச்சிகளையே சாப்பிடுற பூச்சிகள்னு (நன்மை செய்யும் பூச்சிகள்) சில வகைகளை 'இரண்டாம் நிலை உண்ணிகள்'னு சொல்றாங்க.

நான்காவது ஆள்: மண்ணுல செத்து விழுகுற எல்லாத்தையும் சாப்பிட்டு மக்க வைச்சு, மறுபடியும் சக்தியா மாத்துற நுண்ணுயிர்களுக்கு 'நடுநிலை உண்ணிகள்'னு பேரு.

இந்த நாலு ஆளுங்களும் நல்லவிதமா இருக்குறதுக்கு பேருதான் 'பல்லுயிர் பெருக்கம்'னு சொல்றாங்க. இப்படி இருந்தாத்தான் பயிர் சமநிலை இருக்கும்.

முன்ன இயற்கை முறையில வெள்ளாமை செஞ்சப்ப, இந்த பல்லுயிர் பெருக்கத்துக்கு பங்கமில்லாம நல்லாத்தான் இருந்துச்சு. பூச்சிகளோட தாக்குதலும் பொருளாதார சேத\நிலையைத் தாண்டாம இருந்துச்சு. பசுமைப் புரட்சிக்கு பிறகு, உயர் விளைச்சல் ரகங்க வந்துச்சு. அதுகள விளைய வைக்க ரசாயனத்தை அதிகப்படியாகவே கொட்டுனாங்க. உணவுப் பஞ்சத்தைத் தீக்குறதுக்காக கொண்டு வந்த பசுமைப் புரட்சியோட எதிர்பாக்காத விளைவால, உணவுச் சங்கிலி அங்கங்க அறுந்து போயி தொங்கத் தொடங்கிருச்சு. சங்கிலித் தொடர் அறுந்ததால ஒட்டுமொத்தச் சூழலும் சூனியமாயிட்டு இருக்கு.

இந்த உலகத்துல உணவு உற்பத்தியாளர்கள் 60%, முதல் நிலை உண்ணிகள் 20%, இரண்டாம் நிலை உண்ணிகள் 15%, நடுநிலை உண்ணிகள் 5% இந்த அளவுல இருக்காங்க. இதை வரைபடமா வரைஞ்சா... ஒரு பிரமிடு மாதிரி தெரியும். இந்த பிரமிடுல கூம்பு மாதிரி உச்சியில அதிகமா இருக்க வேண்டிய நடுநிலை உண்ணிக ரொம்ப கம்மியா இருக்கு. இந்த நடுநிலை உயிர்கள் குறையறதுக்கு முக்கிய காரணம்... ரசாயன உரம், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துறதுதான். மண்ணுல விழுகுற எல்லாத்தையும் மட்க வைக்கிற தன்மை கொண்ட நடுநிலை உண்ணிக, அதிகமா இருக்குற மண்ணுதான்... வளமான மண்ணா இருக்கும்.

'பூச்சிகளோட ராஜா'னு சொல்லப்படுற பச்சைப்புழு, 200 வகையான பூச்சிக்கொல்லிகளுக்கு எதிரான எதிர்ப்புத் திறனை வளர்த்து வச்சுகிட்டு, இன்னிக்கும் விஞ்ஞானிகளுக்கு சவால் விட்டுக்கிட்டு இருக்கு. இப்ப பரபரப்பா பேசப்படுற பி.டி. ரக விதைகளுக்கு எதிராவும் தன்னோட எதிர்ப்பை இந்தப் புழு வளர்த்துகிச்சு. காய்ப்புழு தாக்குதலைச் சமாளிக்க, விதைக்குள்ளயே பூச்சிக்கு எதிர்ப்பு இருக்குனு சொல்லித் தயாரிச்சதுதான் பி.டி. ஆனா, இந்த விதையில

விளைஞ்ச பருத்திக் காய்கள்ல இளம்சிவப்பு காய்ப்புழு தாக்கி, விஞ்ஞானத்துக்கு விளையாட்டு காட்டிகிட்டு இருக்கு.

பயிர்களுக்கு நாம அளவுக்கதிகமா தெளிக்குற ரசாயனம், நம்ம அழிக்க நினைக்குற பூச்சிகளை முழுமையா அழிக்காம, கூடுதலா வேற பூச்சிகளை வளர்த்து விட்டுடுது. நாம பச்சை காய்ப்புழுவுக்கு அளவுக்கு அதிகமா பூச்சிக்கொல்லி அடிக்குறதாலதான் சமீபகாலமா மாவுப்பூச்சிக பெருகிக்கிட்டிருக்கு. அதைப்பத்தி பிறகு பாப்போம்.

No comments:

Post a Comment