ஆச்சர்யம் | சுபாஷ் பாலேக்கர் எழுதும் தொழில்நுட்பத் தொடர் |
செலவு இல்லை... வரவு உண்டு! |
'சிலிர்க்க வைக்கும் ஜீரோ பட்ஜெட்!' |
ஜீரோ பட்ஜெட் வேளாண்மை எனும் தேரின் முதல் சக்கரமான பீஜாமிர்தம் பற்றி கடந்த இதழில் பார்த்தோம். இரண்டாவதுச் சக்கரமான ஜீவாமிர்தம் பற்றி ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். மூன்றாவதுச் சக்கரம் 'அச்சாதனம்' என்று சொல்லப்படும் மூடாக்கு. அதைப் பற்றி இப்போது பார்ப்போம்.
நம்முடைய வயலில் அல்லது பண்ணையில் அற்புத விளைச்சல் கிடைக்கவேண்டுமென்றால், நிலத்தில் நாட்டு மண்புழுக்களும், நுண்ணுயிரிகளும் பெருகி, அவை வாழ்வதற்கான நுண்ணியத் தட்பவெப்ப நிலை நிலவ வேண்டும். அதாவது மண்ணின் உள்ளும் வெளியிலும் நாம் உருவாக்கும் தனிச்சிறப்பான பயிருக்கும் மண்ணுக்கும் பொருந்திய சூழ்நிலையே நுண்ணியத் தட்பவெப்ப நிலை.
தோட்டத்தில் நிலவும் காற்றோட்டம், வெப்பநிலை, ஈரப்பதம் ஆகியவையே பயிரின் வளர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கிறது. பயிர்களுக்கு இடையே எப்பொழுதும் நல்ல காற்றோட்டம் இருக்க வேண்டும். பயிர்களைப் பொறுத்து 25 டிகிரியிலிருந்து
32 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்க வேண்டும். 65 முதல் 72% வரை காற்றில் ஈரப்பதம் இருக்க வேண்டும். சூரிய வெளிச்சம் சரியாகக் கிடைக்க வேண்டும். ஒவ்வொரு பயிருக்கும் தேவையான சூரிய வெளிச்சத்தைக் 'கேண்டில் லைட்' என்ற அளவைப் பயன்படுத்தி அளப்பார்கள். இது பயிருக்குப் பயிர் மாறுபடும்.
அதேபோல மண்ணின் உள்ளே மங்கலான வெளிச்சமும், காற்றோட்டமும் நிலவ வேண்டும். இதுதான் நுண்ணியத் தட்பவெப்ப நிலை. இதை நமது தோட்டத்துக்குக் கொண்டு வருவதற்கு ஜப்பானிலிருந்தோ அமெரிக்காவிலிருந்தோ ஏதும் உயரியத் தொழில்நுட்பத்தைத் தேட வேண்டிய அவசியமெல்லாம் இல்லை.
மண்ணினுள் வாழும் மண்புழுக்களையும், நுண்ணுயிர்களையும் வெப்பம், குளிர், பகை விலங்குகள் ஆகியவற்றிடம் இருந்து காப்பாற்றினாலே... நுண்ணியத் தட்பவெப்ப நிலையைக் கொண்டு வந்துவிட முடியும். எப்படிக் காப்பாற்றுவது என்றெல்லாம் அதிகமாக யோசிக்க வேண்டாம். மண்ணைக் காப்பாற்ற வேண்டுமானால், அதை எதையாவது கொண்டு மூட (போர்த்த) வேண்டும். அதுதான் மூடாக்கு. நிலத்தை மூடாக்கு செய்தால்தான் நுண்ணியத் தட்பவெப்ப நிலை அங்கு நிலவும். மூடாக்கில் மண் மூடாக்கு, தாள் மூடாக்கு, உயிர் மூடாக்கு என மூன்று வகைகள் உண்டு.
மண் மூடாக்கு:
நிலத்தின் மேல்மண்ணைப் பாதுகாத்து அதன் மூலம் நிலத்தைக் காப்பாற்றுவதுதான் மண்மூடாக்கு. நிலத்தில் இருந்து ஆறு அங்குல ஆழம் வரை உள்ள மேல் மண்ணில்தான் தாவரங்களின் உறிஞ்சு வேர்களும், நுண்ணுயிரிகளும் முனைப்பாகச் செயல்படுகின்றன. அதனால், இந்தப் பகுதியை மட்டும் நாம் பண்படுத்தினாலே போதுமானது. இந்த ஆழத்துக்குக் கிழே கிடங்கு வேர்கள்தான் இருக்கும். காற்றும் ஈரமும் உறிஞ்சு வேர்களுக்குத்தான் தேவையே தவிர, கிடங்கு வேர்களுக்கு அல்ல என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.
அதனால், 'உழவு செய்கிறேன் பேர்வழி' என்று எக்காரணம் கொண்டும் மேல் மண்ணைத் தலைகீழாக்கி பாழ்படுத்தி விடக்கூடாது. நிலத்தை நாம் எப்படிப் பண்படுத்தினாலும் மேல் மண் மேல்மண்ணாகவே இருக்க வேண்டும். அதற்காகத்தான் மரத்தாலானக் கருவிகள், பரம்படிக்கும் சட்டம், மண்வெட்டி போன்றவற்றை மட்டுமே பயன்படுத்தி நம் முன்னோர்கள் களைகளை அழித்து நிலத்தைச் சீர்படுத்தி வந்தார்கள்.
டிராக்டர் போன்ற கருவிகளால் உழும்போது மேல்மண் தலைகீழாக்கப்பட்டு, அந்த இயந்திரங்களின் எடையால் மண் அழுத்தப்பட்டு நுண்ணுயிர்கள் அழிந்து விடுகின்றன. தவிர, வேதி உரங்களாலும் மண் இறுகுகிறது. ஒரு சதுர அடி நிலத்தின் மண் 32 கிலோ எடையைத்தான் தாங்கும். அதற்கும் மேலான எடையால் அழுத்தப்படும்போது தானாகவே நிலத்தின் அடிப்பகுதிகள் இறுகத் தொடங்குகின்றன. அது எதிர்மறையான விளைவுகளை உருவாக்கி விடும்.
காடுகளில் யாருமே மண்ணைப் பண்படுத்துவதில்லை என்று ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். அங்கு இயற்கை முறையிலேயே மண் பதப்படுத்துதல் நடைபெறுகிறது. காட்டில் மண் அடுக்கு பல நுண்துளைகளுடன் இளக்கமாக கடல் பஞ்சைப் போல இருக்கும். தாவரங்களின் ஆணிவேர்கள், மண்புழுக்கள், எறும்புகள், நுண்ணுயிர்கள் ஆகியவைகளின் ஊடுருவல்... இவைதான் அந்த நிலத்தைப் பண்படுத்தியிருக்கின்றன. இதுதான் மண்மூடாக்கு.
நமது விவசாய நிலத்திலும் டிராக்டர் அல்லாத மரக் கலப்பையால் உழுவதன் மூலம் நிலத்தில் நன்கு மண்மூடாக்கு செய்யப்படுகிறது. இதன் மூலம், மேல்மண் பிறழாமல் நிலத்தில் சரியான ஈரப்பதமும், வெப்பமும் பராமரிக்கப்பட்டு நிலம் பண்படுத்தப்படுகிறது.
- தாக்கல் செய்வோம்
படங்கள்: மு. நியாஸ் அகமது
நிபந்தனைகளோடு டிராக்டர்!
விவசாய வேலைகளுக்கு ஆள் பற்றாக்குறை நிலவுவதால், நம் நாட்டில் இயந்திரங்களைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாத விஷயமாகத்தான் இருக்கிறது. அப்படிப்பட்டச் சூழ்நிலைகளில், கோடை உழவுக்கு மட்டும் சில விதிகளோடு டிராக்டரைப் பயன்படுத்தலாம். நிலத்தில் துளிகூட ஈரம் இல்லாத நிலையில், ஆங்கில 'வி' வடிவத் தகட்டைப் பயன்படுத்தி உழவு செய்யலாம். அதிலும் ஆழமாக உழும் கருவிகளைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
No comments:
Post a Comment