Friday, April 23, 2010

மண்புழு மன்னாரு

கத்திரி செடிக்குதான் பூச்சிகளோட தாக்குதல் அதிகமா இருக்கும். நூறு கத்திரி செடிக்கு ஒரு பருத்தி வீதம் விதைப்பு செஞ்சுபாருங்க. அந்த வயல்ல வழக்கத்தைக் காட்டிலும் பூச்சிகளோட நடமாட்டம், மட்டுப்பட்டு இருக்கும்.


'மழை வளம் பெருக, மரம் வளர்ப்போம்'னு எங்க பார்த்தாலும் எழுதி வெச்சுருக்காங்க. மரம் வளர்க்கிறது நல்லதுதான் அதுக்காக எல்லா மரமும் மழை மேகத்தை இழுக்கும்னு சொல்ல முடியாது. ஆலமரம், அரசமரம், இலுப்பை மரம், அத்திமரம் இதெல்லாம் பால் உள்ள மரங்கள்னு சொல்வாங்க. இப்படிப்பட்ட மரங்கள்லாம் நீர் மேகங்கள இழுத்து, மழையைப் பொழிய வைக்குறதுக்கு ரொம்பவே உதவியா இருக்கும். குறிப்பா, அத்தி மரங்க நிறைய இருக்குற மேகாலயா மாநிலத்துல மௌசின்ராம் பகுதியிலயும், மராட்டிய மாநிலத்துல புனே பகுதியிலயும் நிறைய மழைப் பொழிவு இருக்குதுனு சொல்றாங்க.


வயல்ல இப்ப எல்லாம் கண்ட நேரத்துல, கண்டபடி பீரங்கி மாதிரியான வண்டியைப் போட்டு உழவு செய்யறாங்க. ஆனா, ஏர்உழவு செய்யறதையே நம்மாளுங்க பக்குவமானத் தொழில்நுட்பத்தோட செய்த காலமெல்லாம் உண்டு 'கட்டி ஓட்டு, விட்டு ஓட்டு'னு சொல்வழக்கு இருக்கு. மண்ணுல ஈரப்பதம் குறைவா இருந்தா... கலப்பையை அதிக ஆழமா ஓட்டாம, நெருக்கிக் கட்டி ஓட்டணும்; ஈரப்பதம் அதிகமா இருந்தா கலப்பைய தளரவிட்டு, ஆழமா ஓட்டணும். இப்படிச் செய்யுறப்ப... மாட்டுக்கும் சிரமம் இருக்காது. மண்ணுக்குள இருக்கிற ஈரப்பதமும் ஆவியாகாது. மண்ணுல இருக்கற நன்மை செய்யுற நுண்ணுயிரிகளும் பாதிக்கப்படாமா இருக்கும்.


நிலக்கடலை பயிர் செய்யுறப்ப கட்டாயம் கம்புப் பயிரையும் ஊடுபயிரா விதைச்சுடுங்க. நிலக்கடலையைத் தாக்க வர்ற சுருள் பூச்சி, முதல்ல கம்பைதான் குறி வைக்கும். அந்த சமயத்துல உஷாராகி பூச்சிவிரட்டி தெளிச்சு, சுருள் பூச்சியை விரட்டிடலாம்.


பூமியில எந்த இடத்துல நீர்வளம் இருக்குதுனு கண்டுபுடிக்கறதுக்கு செயற்கைகோள் எல்லாம் விடுறாங்க இந்தக் காலத்துல. அந்தக் காலத்துல இந்த மாதிரி சமாச்சாரம் எதுவுமில்லாமலே நம்மாளுங்க நிலத்தடி நீரைக் கண்டுப்பிடிச்சாங்க. 'புத்து கண்டு கிணறு வெட்டு'னு ஒரு வாக்கியத்தை சொல்வாங்க. அதாவது, இந்தக் கரையானுங்க இருக்குதே... அதுங்க புத்துக்கட்டுற இடம், கண்டிப்பா நீரோட்டம் உள்ள இடமாத்தான் இருக்குமாம். அதேபோல... உங்க கிணத்துல சிட்டுக்குருவி கூடு கட்டுச்சுனா... நிச்சயமா தண்ணி வத்திப்போகாதுனு முடிவு பண்ணிடலாம். நல்ல நீர்வளம் இருக்குற கிணறுங்களை தேர்ந்தெடுத்துதான் சிட்டுக்குருவிங்க கூடு கட்டும்னு சொல்றாங்க.


காய்கறிப் பயிர் கொத்துக் கொத்தா பூத்திருக்கிற சமயத்துல, சிலபேரு விடாம தண்ணி கட்டுவாங்க. அப்படி செஞ்சா, பூவுங்க கொட்டிப் போயிடும். அதனால, பிஞ்சாகற வரைக்கும் நிலத்துல ஈரப்பதம் குறைவா இருக்கிற மாதிரி பார்த்துக்கறதுதான் நல்லது.


பெரிய, பெரிய குளத்தை வெட்டித்தான் மழைநீரை சேமிக்கணும்கறது இல்ல. சில நுணுக்கமான வேலைங்கள செஞ்சாலே... நிலத்துல நிறைய மழைநீரை சேமிக்கலாம். அதாவது, வயல்ல எங்கெல்லாம் காலியான இடம் இருக்குதோ... அங்கல்லாம் ஆமணக்கு, பப்பாளினு செடிகள வளருங்க. இந்த ஆமணக்கு மானாவாரி நிலத்துலகூட நல்லா வளர்ந்து நிக்கும். இந்த செடிகளோட வேருங்க மண்ணுக்குள பரவலா பரவியிருக்கும். நிலத்துல மழைத்தண்ணி விழுந்தா இந்த செடிங்களோட வேருங்க மூலமா மண்ணுக்குள்ள சுலபமா இறங்கும். இதனால நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.


இப்போ உலகத்துல அதிக அளவு நடக்குற வியாபாரம் தண்ணீர்தான். ‘இந்த மெஷினைப் போட்டா தண்ணியில அழுக்கு போகும். அதைப் போட்டா தண்ணி சர்க்கரையா இனிக்கும்’னு வியாபாரம் செய்யறாங்க. ஆனா, இப்படி ஆயிரக்கணக்குல செலவு செய்யாமலே தண்ணியை சுத்திகரிக்கலாம். உலர்ந்த முருங்கை விதையைப் பொடியாக்கி ஒரு கைப்பிடி எடுத்துக்குங்க. அசுத்தமான தண்ணி அஞ்சு லிட்டர் அளவுக்கு ஒரு பாத்திரத்துல எடுத்து வைச்சுடுங்க. இதுல முருங்கை விதைத் தூளைப் போட்டு நல்லா கலக்கி விடுங்க. அடுத்த ஒருமணி நேரத்துல சுத்தமானத் தண்ணி இருக்கும். முருங்கை விதை அழுக்கையும், தீமை செய்யுற பாக்டீரியாவையும் உறிஞ்சு எடுக்குறதுதான் இதுக்கு காரணம். இதை ஐரோப்பிய யூனியன்ல பலகாலமா பயன்படுத்துறாங்க.


என்னதான் தலைகீழா நின்னாலும், சில நிலத்து மண்ணு பாறைக் கணக்கா இறுகிக் கெடக்கும். இப்படி இருக்கிற நிலத்துல வாதநாரயணன் மரத்துக் கிளைங்கள துண்டு, துண்டா வெட்டி நிலத்துக்குள்ள புதைச்சி வெச்சுடுங்க. நஞ்சை நிலமா இருந்தா இலை, தழைங்கள போடும்போது இந்த மரத்துக் கிளைகளையும் போட்டு, மிதிச்சிவிட்டு... நடவு செய்ங்க. அடுத்த ரெண்டு போகத்துக்குள்ள பாறை மண்ணு பொலபொலனு மாறிடும். பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆத்தூர் பக்கம் இருக்கிற விவசாயிங்க. இப்படி செஞ்சுதான் நிலத்த வளமாக்கறாங்க.


தேனீயை வெச்சு நடக்குற வியாபாரத்தைக் காட்டிலும், கொசுவை வெச்சுதான் பெரிய அளவுக்கு வியாபாரம் நடக்குது. கண்டகண்ட ரசாயனத்தையும் பயன்படுத்தி கொசு விரட்டற மருந்து, மாத்திரைனு தயாரிக்கறாங்க. இதையெல்லாம் நாம பயன்படுத்தினா... எலி வளைக்கு பயந்து புலி கூண்டுல போய் விழுந்த கதையா... வேற வேற வில்லங்கத்துலதான் மாட்ட வெக்கும். நொச்சி, வேம்புனு கசப்பான இலை, தழைகளை காய வெச்சு... ராத்திரி நேரத்துல மூட்டம் போட்டா... அந்தப் பக்கமே கொசுங்க எட்டிப் பார்க்காது. அதைவிட்டுட்டு விலை கொடுத்து வினையை வாங்காதீங்க. குறைந்தபட்சம் கிராமத்துல இருக்கறவங்களாச்சும் இதையெல்லாம் செய்யலாம்ல.

1 comment: